ஐயோ..பாவம்..! -சிறு கதை - பொள்ளாச்சி அபி

‘பிரேம்குமார்’என்று தனது நாய்க்கு பெயர் வைத்த ஆறுமுகத்தைப் பார்த்து அவரது மகன்,மகள்,மனைவி அனைவரும் பரிகசித்தனர்.ஆனால் அந்தப் பெயரை மாற்றமாட்டேன் என்று ஆறுமுகம் கண்டிப்பாக கூறிவிட்டார்.இதனால் எல்லோருக்கும் ஆச்சரியம்தான் என்றாலும்,அவரது வார்த்தைக்கு மறுப்பு சொல்ல யாருக்கும் தைரியமில்லை.

இதுவாவது பரவாயில்லை.அதற்குப் பிறகு,தினமும் அலுவலகத்திலிருந்து வந்து,சில நிமிடங்கள் கழிந்தவுடன் கட்டிப்போடப்பட்டிருக்கும் அந்த நாயின் அருகே, சில பிஸ்கெட்டுகளுடன் சென்று அமர்வார்.ஒரு பிஸ்கெட்டை போட்டவுடன்,அது வாலைக் குழைத்துக் கொண்டு,நன்றி என்பதுபோல முனகுவது போன்ற மெல்லிய ஒலியை எழுப்பியபடி,அந்தப் பிஸ்கெட்டை சாப்பிடும்..
அதை முழுவதுமாக மென்று தின்று முடிக்கும் முன்பே,ஆறுமுகம் தனது முதுகுக்கு பின் மறைத்துவைத்திருக்கும் பெருவிரல் தடிமனான பிரம்பை எடுத்து,நாயின் முதுகில்,சுளீர் என்று மின்னல் வேகத்தில் ஒரு அடி.உயிரை உருவிவிடும் வகையில் பட்ட அடியால்,துடிக்கும் அந்த நாயின் தீனமான அலறல்..

ஆறுமுகத்தின் மனைவி,மகள்,மகன் ஆகியோர்,தங்கள் அடிவயிற்றில் தீப்பற்ற வைத்ததுபோல துடித்துப்போவார்கள்.ஆனால் அது குறித்த எவ்வித சலனமும் இன்றி,அடுத்த பிஸ்கெட்டை அந்த நாய்க்கு போடுவார் ஆறுமுகம்.மீண்டும் அடி.தினமும் இதேபோல் குறைந்தது மூன்று பிஸ்கெட்டுகளையாவது போடுவார்.

வாயில்லா ஜீவனை வதைக்காதீர்கள் என்று அவரது குடும்பமே,பல முறை சொல்லியபோதும்,ஆறுமுகம் அதற்கு செவி கொடுப்பதில்லை என்பதில், அவர்களுக்கு மிகவும் வருத்தம்.இவரை எப்படியாவது ஒரு மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்று வைத்தியம் பார்த்துவிடவேண்டும் என்று மகனும்.மகளும் திட்டமிட்டிருந்தனர்.

ஆறுமுகத்திற்கு எக்ஸ்போர்ட் கம்பெனியொன்றில் ஹெட்கிளார்க்காக வேலை. இப்போது இருக்கும் எம்டி.யின் அப்பா காலத்தில் உதவிக்கு என சேர்ந்தது. அவரால் நிறுவனம் வளர்ந்தது போலவே,ஆறுமுகத்தின் அனுபவமும் வளர்ந்தது.ஏறக்குறைய முதலாளியின் செக்ரட்டரி என்ற அளவிற்கு அவருக்கு முக்கியத்துவமும் கிடைத்தது.

இடையில் அவர் மாரடைப்பில் இறந்துவிட,அவரது எம்.பி.ஏ முடித்திருந்த மகன் எம்.டி பதவிக்கு வந்துவிட்டார்.ஆனால் ஆறுமுகத்தைக் கண்டாலே அவருக்கு ஏனோ பிடிக்கவில்லை.எந்த வேலை செய்தாலும் குறை சொல்வதும் திட்டுவதுமாகவே இருந்தார்.அப்பா காலத்துமனுஷன் என்று பார்க்கிறேன். இல்லையெனில் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளிவிடுவேன் என்று அலுவலக சிப்பந்திகளின் முன்பாகவே இப்போதைய முதலாளி திட்டுவதுதான் அவரால் சகிக்க முடியவில்லை.அவமானமாக இருந்தாலும்,முதலாளியை எதிர்த்து என்ன செய்யமுடியும்.?

பழைய முதலாளியின் ஏற்பாட்டின்படி,அவரது சர்வீசிற்கு ஏற்ற நல்ல சம்பளம் வந்து கொண்டிருக்கிறது.இனி இரண்டு வருடம் கழித்து ரிட்டயர்ட் ஆகும்போது, நல்ல பணப்பலனும் கிடைக்கும்.இதை நம்பி குடும்பம்,இன்னொரு மகளின் திருமணம்,மகனின் படிப்பு என இருக்கும்போது,அவமானத்திற்கு பயந்து வேலையை விட்டுவிடவும் ஆறுமுகத்திற்கு மனசில்லை.

ஆனால்,சின்ன முதலாளி ஒவ்வொரு நாளும் புதுப்புதுக் காரணங்களுக்காக, கண்டபடி திட்டும்போது,அதிலிருந்து தப்பித்துக் கொள்ள அவருக்கு வேறு வழியும் தெரியவில்லை.

அன்று மாலையில்,சோர்வாக வீட்டுக்கு வந்த ஆறுமுகம் தனது வழக்கமான பிஸ்கெட் போடும் வேலையைச் செய்யவில்லை.அதிசயித்துப்போன மனைவியிடம் காய்ச்சல் அடிப்பதாகக் கூறினார்.டாக்டரிடம் போகலாமா..? என்று அவள் கேட்டபோது மறுப்பேதும் சொல்லவில்லை.

அழைத்து வரப்பட்ட டாக்சியில்,மனைவியும்,மகளும் இருபுறமும் கைத்தாங்கலாய்; பற்றியபடி,ஆறுமுகத்தை பின்சீட்டில் ஏற்றிக் கொள்ள,மகன் முன்சீட்டில் அமர்ந்தபடி,மருத்துவமனைக்கு கிளம்பினர்.

போகும் வழியெல்லாம் மெல்லியகுரலில் யாருடனோ செல்லில் பேசிக்கொண்டே வந்தான் மகன்.சில நிமிடங்களில் அந்த கிளினிக்கின் முன்பாக டாக்சி நின்றபோது,நகரின் பிரபலமான மனநல மருத்துவமனையின் பெயர்ப்பலகை அவர்களை வரவேற்றது.

சிறிது நேர காத்திருப்புக்குப் பின்,டாக்டரின் முன்னே அமரவைக்கப்பட்ட ஆறுமுகத்திற்கு பொதுவான சில பரிசோதனைகளை மேற்கொண்டார் டாக்டர்.பின்னர் ஆறுமுகத்திடம் ஏதேனும் பேசலாமே என்று கேட்க,ஆறுமுகம் ஆமோதிப்புடன் ஊம் கொட்டியபடி தலையாட்டினார்.

டாக்டர் “ எங்கே வேலை செய்றீங்க ஆறுமுகம்.?”
தனது நிறுவனத்தின் பெயரைச் சொன்னார்.
“ஓ..நம்ம பன்னீர் செல்வம் சாரோட கம்பெனிதானே..?

ஆமாம் என்று தலையாட்டியவர்,இப்போது அவரது மகன்தான் நிர்வாகி என்பதையும் சேர்த்து சொன்னார்.அப்போது ஏனோ அவர் தனது பற்களைக் கடித்துக் கொண்டதுபோல டாக்டருக்குத் தோன்றியது.

அப்படியா..? அவரோட பேரு..?

ஆறுமுகம் சொன்னார்.“பிரேம்குமார்.”.

எழுதியவர் : பொள்ளாச்சி abi (17-Dec-11, 7:08 pm)
பார்வை : 824

மேலே