தொடத் துணிந்தேன்!

தொடத் துணிந்தேன்!
'மரம் அறுந்து விழும்.எங்கேயோ கேட்ட குரல்.' அவ்வளவே அவன் அறிந்தது.அவனது டைரியில் இருந்த குறிப்பு இது. அவனாகவே எழுதிவிடவில்லை.அவன் கனவில் [கனவு என்றால் நிஜமான உறக்கமுமில்லை-ஒருவித மயக்க நிலை] ஏதாவது தோன்றும். அது நடக்கும்போது 'திக்'கென்றிருக்க, முன்பே எனக்குத் தெரியும் எனும் மனம்.
இதுவரை பிரச்சினை இல்லை.அவன் சார்ந்த பிரச்சினையாகவே 'கனவு' வந்து விடுவதால் .சிறிது நாள் முன்புவரை அவன் 'இதை'(எதையுமே?!)பொருட்படுத்தியதில்லை.ஆனால் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக ஒன்று தோன்றி அது அப்படியே வந்து நின்றபோது அதிர்ந்து விட்டான்.
ஒருநாள் 'அந்த' கனவில் இவன் கட்டிலில் படுத்திருக்கிறான்,இவன் கால்வரை போர்த்தியிருக்கிறது.ஒரு பெண் இவன் அறையை சுத்தம் செய்கிறாள்.சிரிப்பாகத்தான் இருந்தது,அடுத்த வாரமே காலை உடைத்துக் கொண்டு கட்டிலில் கிடக்க ஊரிலிருந்து வேலைக்காரி வந்து வீட்டை சுத்தப்படுத்தும்வரை.
கட்டிலிலிருந்து எழுந்து கொண்டதுடன் விழித்துக்கொண்டான்.எப்பொழுதெல்லாம் 'மணி' அடிக்கிறதோ இந்த டைரியில் எழுதிக்கொண்டான், நடந்தால் 'வரவு' வைத்துக்கொள்ள. ஒவ்வொன்றையும் 'டிக்' செய்திருந்தான்,இந்த ஒன்றைத் தவிர.
'இது' இன்று வரவில்லை,வாரமாகிறது. இவன் அதற்காக சிம்ரனை ஒதுக்கி விட்டு பழைய 'டிவிடி' கடைகளில் தேடி அலைந்து.... ஒரு ரஜினி ரசிகர் தன் கலெக்ஷனில் இருந்து அந்த 'டிவிடி'யை கண்டுபிடித்துக் கொடுத்தார்.இதுவரை நான்குமுறை ஆயிற்று.ஒரு 'க்ளு'வும் இல்லை.ஒன்றும் நடக்கவும் இல்லை.ஓய்ந்துவிட்டான்.
அடுத்த வார இறுதி . அவன் ஸ்கூட்டரில் ஒரு 'கிளையண்ட்'டை பார்த்துவிட்டு, சோலை வழி சாலை வழி வந்துகொண்டிருந்தான்.அருகே வெட்டும் வேலையும் சிறிது இரைச்சலுமாய் இருந்தது.'வெட்டு,வெட்டு'என எங்கிருந்தோ ஒரு குரல் கேட்டது.ஏதோ ஞாபகம் வந்தது. அந்த நேரம் பாரத்து ஸ்கூட்டர் 'மக்கர்' செய்தது. நின்றுவிடும் போல் கனைத்தது.மீண்டும் அந்த குரல்,"மரம் அறுந்து விழுது,தூரப்போங்க! “ 'எங்கேயோ கேட்ட குரல்'. நின்றுவிட்டது உடனே ஸ்கூட்டர்! அந்த ஆள் அருகே வந்துவிட்டார்.அவன் ஸ்கூட்டரை விட்டு இறங்க அவர் ஸ்கூட்டரைப் பற்றி வேறுபுறத்திற்கு திருப்பினார். அந்த வெட்டுபட்ட மரம் பேரோசையுடன் கீழே விழுந்தது.
அடுத்த நிமிடம் வரை அவனால் பேச முடியவில்லை.
"என்னங்க ஆச்சு, அதான் சமயத்துல வந்தேனே? " என்றார் ஸ்டாண்டிட்டுக்கொண்டே.
"ஓ!ஸாரி,தேங்ஸ். உங்க குரல் எங்கேயோ கேட்டது போல இருக்கே! " - 'ஐயய்யோ நடந்துடுச்சே!!'
"எனக்குக் கூட உங்களை எங்கோ...ஏய்,நீ வெங்கட் இல்ல.நான்தான் சுப்ரமணி, தெரியலை?"
" அட, சுப்ரமணியா! உன் குரல் அப்போவே கேட்டதுடா.நான் கூட யோசிச்..."-இரண்டு நிமிடத்தில் அவனிடம் விடைபெறும்போது ஸ்கூட்டர் சரியாகியிருந்தது.கிளம்பிவிட்டான் டைரியைத் தொட.

டைரியிடம் இருந்தபோது 'இதை பற்றி அவனிடம் சொல்லலையே, ‘ஒருவேளை நம்பி இருக்கமாட்டான்.'
இரண்டு நாட்கள் அவனுக்கு இந்த கனவு இனித்தது.இந்த சுப்ரமணி இவனுக்கு நெருங்கிய நண்பன். ஐந்தாம் வகுப்புவரை ஒன்றாகவே படித்து, ஒன்றாகவே 'பாஸ்'(pass) செய்து சிலபல நொறுக்குத்தீனி இவனுக்கு தந்த வகையில் இன்னும் நிரம்பவே நெருங்கிய நண்பன். பின் வேறு 'ஸ்கூல்' என்று ஆனபோதிலும்,பனிரெண்டாவது வரை அரசல் புரசலாய் பார்த்து, பேசிய வகையிலும் அந்த நெருங்கிய(?!) நட்பு தொடர்ந்தது. இப்போது மீண்டும்.
சரியாக மூன்றாவது நாள், அவனுக்குள் அது தோன்றியது. மிகவும் 'சென்ஸிடிவா'ன விஷயம், ஒரு வீட்டில் இவன் அமர்ந்திருக்க,ஒரு பெண் வருகிறாள்(அவள் நல்ல இரட்டை நாடியாக அசைந்து வருகிறாள்,மனதிற்கு அவ்வளவாக சமாதானம் இல்லை) இவன் மடியில் ஒரு குழந்தையை அமர்த்துகிறாள்.அவள் கையில் ஒன்று இதேப்போல.இரண்டும்அவளைப்போல!
('கனவு'நிலையிலும் அவனுக்கு 'கமெண்ட்'- 'தாங்காதப்பா!!..') அது கொஞ்சம் சிரிக்கிறது.கொஞ்சம் அழுகிறது. வழக்கம் போல கொஞ்சம் - அவள் குழந்தையை வாங்கிக் கொள்கிறாள். அவள் முகத்திலிருந்ததை மொழிபெயர்த்தால் "ஸாரி!" என வரும்போல- திரை விழுந்துவிட்டது. திடுக்கிட்டு எழுகிறான் அவன்.
முடிவு என்ன ? இல்லை , இருக்காது , கிடையாது, முடியாது , சிம்ரனை என்ன செய்ய ?- என வரிசையாக எதிர்மறை பதில் சொன்னாலும் அவன் மனதில் ஒரு துக்கம் ஏறி உட்கார்ந்து கொண்டது.
சிறிது நேரத்தில் காலாட்டியது ' என்ன கனவு இது ?’
சில நேரங்களில் வாலாட்டியது. 'இதுவரை நடந்தது எல்லாம் உனக்காக உன்னை வைத்தே . ஏன் இந்த முறையும் - ' தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட மனமும்,அவனது மனசாட்சியும்.
போராட்டம் ஆரம்பம்....
பிறகு மாலை நேரங்களையும் , குளியலறை நிமிடங்களையும் குத்தகையெடுத்துக் கொண்டு கேள்விகள் மேலெழுந்தன.
'யாராயிருக்கும்?' - ' தெரிந்தவர்கள் யாருக்கும் இப்பொழுது குழந்தை இல்லை ' கொழு கொழு ' என்று '
'யாராயிருக்கும்?' - ' குழந்தை இருப்பவர்கள் யாரும் இல்லை ' கொழு கொழு ' என்று '
'யாராயிருக்கும்?' - ' இனி தெரிந்துகொள்ள வேண்டியவர்களோ? '
'யாராயிருக்கும்?'- 'அட! யாராவது 'கிளையண்ட்'டாக இருக்கும்.அப்படியே எப்படி திரும்பி வருவது?... சங்..கடமாக இருக்காது?...'
கரையேறிவிட்டது புயல்.

இரு வாரங்கள்,இரண்டு நாட்கள். பிறகு –
கடந்த இரு வாரங்களில் அவன் செல்லுமிடமெல்லாம் கொஞ்சம் 'டார்க்' ( Dark ) கலர் பேன்ட் (pant) இட்டு சென்று வந்தான். இன்னும் விடிந்தபாடில்லை.
'யாராயிருக்கும்?'- ' அன்று ' ரின்யுவல் ' செய்த நண்பனின் மனைவி?- ஐயோ பாவம் , லவ் மேரேஜ்-ஆக இருக்குமோ ? அப்போதே அந்த ராணியை ஓட்டிக்கொண்டிருந்தானே ! '
இது பதிந்துவிட்டது மனதில்.
ஞாயிற்றுக்கிழமை அங்கே சென்றான்.நண்பன் தோட்டத்திற்கு வந்து காத்திருந்தான்.வழியில் அவன் ஏதேதோ பழைய கதைகளில் மூழ்கிவிட்டான்.அவனைப் பார்க்கவே ஒருவித இரக்கம் உண்டானது.பெரும்பாலும் ஒரு 'ம்' உடன் நிறுத்திக்கொண்டான்.
வீடு வந்தது.ராணியே வருவாளா? நண்பன் சொன்னான்."வீட்டிலே யாரும் இல்லடா,வா!"
சென்றான்,அமர்ந்தான்.
"வீட்டிலே கோயிலுக்கு போயிருக்காங்க. ஏதோ தோஷமாம்."
‘ இருக்கும்...‘
அவனே போட்ட காபியை அவனே நீட்ட,"பரவாயில்லடா,நல்லாவே இருக்கு.நீதானா சமையல்?"- கொஞ்சம் கிண்டல் இருந்தாலும்,பெரும்பாலும் அதில் இருந்தது இரக்கம்.
காபி ஆகிவிட்டது.' கேட்கட்டுமா?'
நண்பன் சுப்ரமணி மீண்டும் பழைய கதைகளில் ஒன்றை உட்கார்ந்து சொல்லிக்கொண்டிருந்தான்.ராணியிடம் வர மறுத்தான்.
"டேய்! அப்புறம் எனக்கு சீக்கிரமே 'டும் டும் டும்' -
'என்ன ?? ', அதிர்ச்சியை துடைத்து ,
" ராணிதானே ? " - ' ஆமான்னு சொல்லுடா ப்ளீஸ்! '
" யாருடா அது ? "
அன்றோடு இரண்டு மாதங்கள் ஆகிவிட்டதாய் டைரி சொல்லியது . ' இதுவரை நடந்ததெல்லாம் இரண்டு மாதங்களுக்குள் . ஆனால் இது?.. ஒரு வேளை -'
காலிங் பெல் . எழுந்து சென்றான் . ' இனி நடக்காது . ' கதவைத் திறந்தான் .
அங்கே ஒரு பெண் இரட்டை நாடியாக நின்றிருந் . . .
சக்தி. 05.11.09.

எழுதியவர் : சக்தி (19-Dec-11, 12:48 pm)
பார்வை : 740

மேலே