என்று கனியும் இந்தக் காதல்

மின்சாரம் தொட்டதும் பட்டென
எரிந்துவிடும் மின் விளக்குபோல்,

துடிப்புடன் மூளையினுள் நீந்திக்கிடக்கும்
தூண்டப்பட்ட இன்ப நினைவலைகள்,

உன்பற்றிய எண்ணங்கள் உரசினவுடன்
பற்றி எரிக்கிறது என் நரம்பு மண்டலத்தை.

சக்தியின் மருவாய் பூமியில் மண்குழைத்து
பிராணன்கூட்டி உயிர்ப்புடன் வெளித்தள்ளும்,

ஒரு காட்டுக் கொடியினை, பூத்து
மலரச் செய்ய வைக்க முடிந்திருக்கின்றது,

நம்மையும் கடவுளிடம் இட்டுச்செல்லும்
காமம், தவறில்லை என்பது புரியவில்லையா?

மல்லிகையின் மணத்தில், மங்கையின்
மணத்தையும் குழைத்து வந்த தென்றல்,

தேனாய் இனிக்கும் கூப்பதநீர் காய்ச்சிய
காதலியின் கைருசி கலந்த இனிமை,

விரவிக்கிடக்கும் காட்டெல்லையில்,
விலகிக்கிடக்கும் வயல்வேளிபோல்

என்னைவிட்டு உதறிநிற்கும் கண்மணியே,
கண்டுகொள்ளாயோ புதிர்ப் பெண்மணியே,

இந்த உடலில் உயிர் ஒட்டிக்கிடப்பதுவும்
கட்டிமிதப்பதுவும் உனக்காகவே என்பதினை.

விக்கலும், நகைப்பான உன் நக்கலும்
உன்னையே நினைவுபடுத்திய வண்ணம் நிற்க,

கொலைக்களம் விரித்துக்கிடக்கும் விழிகள்,
கலைத்தளம் ஆடிநிற்கும் உன் கொடியிடைகள்,

உயிரினுள் சின்னச்சின்ன கொலைகள்
செய்து, தோளில் வளைய வருவதேப்போழுது?

எழுதியவர் : thee (21-Dec-11, 4:39 pm)
சேர்த்தது : ரதி பிரபா
பார்வை : 248

மேலே