கடற்கரையில் நாங்கள்
தள்ளி அமர்ந்தாள்
ஏனென பார்வையால் வினவ
நம் நெருக்கத்தை நாமறிவோம்
ஊருக்கு எதற்கு?
அரைநிஜார் அழகன்
சுண்டல் கூடையுடன் வருகை.
மொத்த சுண்டலுக்கும்
பணம் தரச்சொல்லிவிட்டு
அவனோடு ஓடிவிளையாடினாள்..
சிரித்தாள் சிரிக்க வைத்தாள்..
நேரமாச்சு அம்மா தேடுமென
அவன் ஓட
அலையின் ஓசையில்
நல்லா படி என்ற வார்த்தைகள்
கேட்டிருக்குமா தெரியவில்லை..
நிலவு பிரகாசிக்க
மெளனத்தின் மழையில் நனைந்துவிட்டு
மணலில் வரைந்த ஓவியத்தை பார்த்தபடி
நீந்த துவங்கின கால்கள்..
அரையரை அடியாய்..
அலைகளை நோக்கி
கதிரவனும் கடலும் கலக்கும்
ஏந்தெழில் காட்சியை ரசித்திருக்க
அதன் பிரம்மாண்டம்
லேசாய் உலிக்கியது
பேரலையின் நினைவும்
அழுகுரல்களும் திடீரென
வாட்டி எடுக்க..
உள்ளங்கையில் அழுத்தி
“ரொம்ப பத்திரமா இருக்கேன்..”
அருகிலே இருந்தாள்.
அலைகள் கரையை ஈரப்படுத்தின..