மனதின் மறுபக்கம் !!!!!!!
சிறுவயதில் ரஜினிகாந்தை போல் கிராப்பு வைத்துக்கொள்ளும் ஆசைகொண்ட மனிதர்களில் நானும் ஒருவன்,படியாத தலையில் எண்ணைவைக்க அம்மா படும் அவஸ்தைகள் ஏராளம்,அம்மா பிரம்பெடுத்து துரத்தும் போதெல்லாம் அரவணைத்து காப்பாற்றுவது என் அப்பாவின் அப்பா துளசிங்கம் தாத்தாதான்,அப்போது எனக்கு தேவையான எல்லாவற்றையும் பூர்த்திசெய்துவைப்பார்,ஒரு ஞாயிற்றுக் கிழமையில் சலூன்கடைக்கு அழைத்துச் செல்லும் தாத்தாவிடம் எனக்கு ரஜினிபோல முடிவெட்டிவிட சொல்லி நான் அடம்பிடிக்க '' சரிய்யா வா சொல்லுறேன்'' என்று அழைத்துச்சென்று,சலூன் கடைக்காரனிடம் ''தம்பி கேட்குராப்புல வெட்டிவிடுப்பா'' என்று சத்தம்போட்டு சொல்லிவிட்டு,ஒட்ட வெட்டிவிடு என்று கடைக்காரனிடம் ஜாடைகாட்டுவதை கண்ணாடியில் பார்த்து அழுதுபுரளும் என்னை தர தரவென இழுத்துச் சென்று செட்டிநாடு மெஸ்ஸில் பரோட்டா வாங்கித்தந்து சமாதானம் செய்து,கதைகள்பல சொல்லும் தாத்தாவின் நரைத்த நெஞ்சுமுடியை விரல்களால் தடவாமல் ஒருநாளும் தூங்கியதே இல்லை,
துளசிங்கம் தாத்தாவும்,பக்கத்துவீட்டு பரமசிவம் தாத்தாவும்,வார இறுதிநாட்களில் சாய்வு நாற்காலியில் அமர்ந்து சாவகாசமாய் தண்ணி அடிக்கும்போதெல்லாம் நானும்,முருகேசன் அண்ணனும் சைடிஷை ஒருபிடி பிடிப்போம்,சிட்டுக் குருவி விற்கும் பௌனாம்பால் எங்கள் வீட்டில் கேட்காமல் அடுத்த தெருவுக்கு போகமாட்டாள்,ஏம்மா என்ன குருவி இருக்குன்னு' பரமசிவம் தாத்தா கேட்டதும் ''நெற்சிட்டு இருக்குய்யா'' என்று சொல்லும் பௌனாம்பாளிடம்,ஒரு இருபத்தஞ்சு குருவிய போடு என்பார்,சுமைதாங்கி கல் ஓரமாய் கூடையை இறக்கிவைத்து கூடைக்குள் கைவிட்டு உயிரோடிருக்கும் ஒவ்வொரு குருவியாய் எடுத்து தேங்காய் உடைப்பதுபோல் ''மடார் மடார்'' என்று தரையில் அடித்துக் கொல்லும் பௌனாம்பாலை கண்கலங்கி கன்னத்தில் கைவைத்தபடி பார்ப்போம் நானும் முருகேசன் அண்ணனும்,குருவியை உரித்து ,சுத்தம் செய்யும்போதே சட்டியில் வாங்கிக்கொண்டுபோய் பொன்னிறமாய் வறுத்து கொண்டுவந்து வைப்பாள் பரமசிவம் தாத்தாவின் மனைவி மணிஆயா,ஒருமடக்கு பிராந்திக்கு ஒருகுருவி என்று லாவகமாய் எடுத்து வாயில் போட்டு இளஞ்சிட்டு அருமையா இருக்குய்யா என்ற தாத்தாக்களில் பேச்சுக்கு இடையில் பின்னாடி தெருவில் குருவி விக்கும் பௌனாம்பால் குரலைகேட்டு ஓடினோம் நானும் முருகேசன் அண்ணனும்,கிணத்தடியில் கூடையை இறக்கிவைத்து முகம் கழுவிக் கொண்டிருந்தவளிடம்,குருவிய இப்படி கொல்றது பாவமில்லையா,இப்படியே தினமும் புடிச்சி புடிச்சி சாவடிச்சா குருவியெல்லாம் இனிமே பாக்கவே முடியாதா? என்று கேட்டேன்,அதெல்லாம் ஒன்னும் ஆகாதுய்யா,நாங்க ஒரு கணக்கு போட்டுத்தான் புடிப்போம்,ஊரு ஒலகத்துல இருக்குற குருவியெல்லாம் இந்த அறுவடை மாசத்துலதான் இங்க வரும்,இங்க வரும்போது அதுங்களோட இனம் ரொம்பபெருசா இருக்கும்,இப்ப இதுகளுக்கு சீசன் அதான் இப்ப புடிச்சி விக்குறோம்,மத்த காலத்துல காடு மேடுகள்ள முட்டையிட்டு குஞ்சி பொரிக்கும் போதெல்லாம் நாங்க புடிக்கறது இல்ல,இப்ப கடல்ல இனப்பெருக்க காலம்ன்னு மீன் பிடிக்க கொஞ்ச நாள் தடை போடுறாங்கல்ல அப்படித்தான் இதுவும்,உலகமே அப்படித்தான்யா கொசுவை தவளை திண்ணனும்,தவளையை பாம்பு திண்ணனும்,பாம்பை கழுகு திண்ணனும்,இது எதுவும் நடக்காட்டி கொசுவும்,தவளையும்,பாம்பும்தான் பூமியை நெரச்சிகெடக்கும் மனுஷனுக்கு இடமிருக்காது,ஏதாவது ஒரு உசுரை,ஏதாவது ஒரு உசுரு,ஏதாவது ஒரு சூழ்நிலையில அடிச்சி தின்னுதான் ஆவுனும்,இது கடவுள் எழுதிவச்சது ஆனா மிருகங்கள் ஒரு இனம் இன்னொரு இனத்தைத்தான் அடிச்சி தின்னும்,இந்த மனுஷ பயலுவோ மட்டும் அவன அவனே கொன்னுக்கிரத பாத்தாத்தான் பாவமா இருக்கு,ஒரு ஆசிரியரைப்போல் பாடம் சொல்லித்தந்த பௌனாம்பாலை ஆச்சரியமாய் பார்த்துக் கொண்டிருந்தோம் நானும் முருகேசன் அண்ணனும்,
துளசிங்கம் தாத்தா மங்களம் பேட்டை ஊராட்சி ஒன்றிய பள்ளிகூடத்தில் தலைமை ஆசிரியராய் இருந்தார்,தாத்தாகூட பள்ளிக்கூடம் போவதென்றால் எனக்கு அவ்வளவு இஷ்ட்டம்,தாத்தா விருத்தாச்சலம் பஸ்ஸ்டாண்டுல பஸ் ஏறி மங்களம்பேட்டைல இறங்குரதுக்குள்ள அத்தனை வணக்கம் மரியாதை,பஸ்சுல நின்னாக்கூட யாராச்சும் எழுந்திரிச்சி சீட்டு கொடுப்பாங்க தாத்தா வேன்னான்னு சொன்னாலும் விடாமல் துண்டால் சீட்டை துடைத்து , உட்காருங்க சார் என்று பிடிவாதம் பிடிக்கும் பாமர மனிதர்களைத் தாண்டிதான் பள்ளிக்கூடம் செல்வோம்,தாத்தா பள்ளிக்கூடத்துல அவரு பக்கத்துலையே ஒரு நாற்காலியை போட்டு என்னையும் உட்கார வைத்துக்கொள்வார்,அலுவலகத்துக்கு வரும் வாத்தியாரெல்லாம் என்னை கொஞ்சியே தாத்தாவிடம் நல்லபேர் எடுக்க முயற்ச்சித்து தோற்றுப்போவார்கள்,ஓர் மதியஇடைவேளையில் எல்லா ஆசிரியைகளும் தாங்கள் வீட்டிலிருந்து கொண்டு வந்த சாப்பாட்டை சாப்பிடும்போது,தாத்தா மட்டும் சத்துணவு சாப்பாட்டை எல்லா மாணவர்களுடனும் சமமாய் உட்க்கார்ந்து சாப்பிடுவார்,நானும் அவரோடு உட்க்கார்ந்துக்கொள்வேன்,இது தாத்தா வாடிக்கையாய் செய்வதுதான் என்றாலும் எனக்கு அந்த சின்ன வயதிலேயே அதிர்ச்சியாகவும்,வியப்பாகவும் இருந்தது,தினமும் இந்த சத்துணவை ஏன் சார் சாப்பிடுறீங்க இன்னக்கி எனக்கு கல்யாணநாள் பிரியாணி சாப்பிடுங்க என்று சொன்ன தண்டபாணி சாரிடம்,சார் இந்த சத்துணவு சாப்பாட்டை நான் சாப்பிடுரதாலத்தான் இது கொஞ்சம் ருசியாவும்,சுத்தமாவும் இருக்கு,நம்பள நம்பித்தானே இந்த பிள்ளைகளை பெத்தவங்க அனுப்புறாங்க,இதுக்கு முன்னாடி இந்த சாப்பாடு எப்படி இருந்துச்சின்னு உங்களுக்கே தெரியும்,அப்படி ஒருசாப்பாட்டை உங்க புள்ளையோ,என் புள்ளையோ சாப்பிட்டா நாம வேடிக்கை பார்ப்போமா,போன வாரம் நான் சமையல் அறையை சுத்திபாக்க போறேன்,ஒரு கரப்பான் பூச்சி சாம்பார்ல விழுந்து போச்சி அதை எடுத்து போட்டுட்டு அப்படியே புள்ளைகளுக்கு பரிமார்றான் இந்த பழனிபய,கரப்பான் பூச்சின்னதோட போச்சி இதே பல்லி,தேளு,பூரானா இருந்த அதான் அவனை கல்வித்துறைல சொல்லி சஸ்பண்டு பண்ணிட்டேன்,எனக்கு சோறுபோடுற அரசாங்கத்துக்கு என்னால துரோகம் செய்ய முடியாது,தாத்தா பேசிக்கொண்டே இருந்தார்.
விருத்தசலத்திலிருக்கும் நகராட்சி நடுநிலை பள்ளியில் ஆறாம் வகுப்பு சேர்க்க என்னை அழைத்துச் சென்றார் தாத்தா,அந்த பள்ளிக்கூட தலைமை ஆசிரியர் ராமசாமி வாத்தியார் தாத்தாவோட ஒன்றாக படிச்சவர்,ஏன்யா துளசி புள்ளைய எதாச்சும் கான்வென்ட்ல சேக்குலாமே ஏன் கவர்மென்ட் பள்ளி கூடத்துல சேக்குற என்றார்,இல்ல ராமசாமி நாம கவர்மென்ட் காச வாங்கிகிட்டு புள்ளைய வெளில சேக்குறது அவ்ளோ நல்லா இருக்காது,புள்ளைய வெளில கொண்டி சேத்தா நாம சரியில்லன்னு தானே அர்த்தம்,நீ நடத்துற பாடத்துல உனக்கு நம்பிக்க இல்லையா சொல்லு,நம்மை மாதிரி ஆட்கள் இப்படி செய்யரதாலத்தான் மக்களுக்கு அரசாங்கப் பள்ளி மேல இருக்குற நம்பிக்கையே போச்சி,மூலை மூலைக்கு தனியார் பள்ளிகூடத்தை துறந்துவச்சி காச கரக்குராணுவ ,ராமசாமி வாத்தியார் எதுவுமே பேசாமல் எனது அட்மிஷன்பார்மை நிரப்பி கொண்டிருந்தார்,அதுவரை தனியார் பள்ளிகூடத்தில் படித்துக் கொண்டிருந்த ராமசாமி வாத்தியாரின் பேரன் பின்னர் அதே பள்ளிகூடத்தில் என்னோடு படித்துக் கொண்டிருந்தான்,
பத்தாவது படிக்கும் சமயம் தாத்தா ஓய்வுபெற்று வீட்டில் இருந்தார்,தபால் மூலமாக வந்து சேர்ந்தது தாத்தாவிற்கு நல்லாசிரியருக்கான தேசிய விருது,வீடே உற்ச்சாகமாய் இருந்த சமயம்,வாழ்த்து மேல் வாழ்த்து வந்து குவிந்து கொண்டிருந்தது தாத்தாவிற்கு ஆசிரியர் சங்கத்தில் பாராட்டு விழா ஏற்பாடு செய்யப் பட்டு இருந்தது,எல்லோரும் தாத்தாவை புகழ்ந்து கொண்டிருந்தனர்,மாலை,சால்வைகளை வாங்கி கையில் வைத்துக் கொண்டிருந்தேன் நான்,மைக் பிடித்து பேசிய ராமசாமி வாத்தியார் தேசிய விருதுக்கு தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள துளசிங்கம் பேசுவார் என்றார்,அமைதியாய் மைக்கை பிடித்த தாத்தா,எல்லோருக்கும் நன்றி என்று சொல்லிவிட்டு போய் உட்கார்ந்து கொண்டார்,வந்திருந்த அனைவருக்கும் ஒரே அதிர்ச்சி,நிகழ்ச்சி முடிந்து போகும் போது,என்ன துளசி இன்னும் நாலு வார்த்தை பெசிருக்கலாமே என்று கேட்ட ராமசாமி வாத்தியாரிடம்,என்னத்தையா பேசுறது,எனக்கு எதுக்குய்யா இந்த விருது,இப்ப நான் என்னத்த செஞ்சிட்டேன்,அரசாங்கத்துக்கு நான் என்ன காசு வாங்காம சேவையா செஞ்சுட்டேன்,அரசாங்கம் காசு தந்து ஒரு வேலைய செய்ய சொன்னுச்சி நான் செஞ்சேன்,இதுக்கு விருது அது, இதுன்னு,காச கரியாக்கிகிட்டு,இதுல எனக்கு கொஞ்சம் கூட உடன்பாடே இல்லை,விருது தர காசுல அரசாங்கம் இன்னும் ஏதாவது மக்களுக்கு நல்லது செய்யலாம்,தாத்தாவை கட்டி தழுவி உன் மனசு எனக்கெல்லாம் கூட வராது துளசி என்று கண்கலங்கினார் ரங்கசாமி வாத்தியார் , அப்போது குடியரசு தலைவராக இருந்த திரு.சங்கர் தயாள் ஷர்மா கையால் தாத்தா விருது வாங்குவதைப் பார்க்க எனக்கு ஆசையாக இருந்தது,தாத்தாவிடம் எவ்வளவோ சொல்லியும் அதற்க்கு தாத்தா ஒத்துக்கொள்ளவே இல்லை,விருது வாங்குபவர் உடன் இருவரை அழைத்துவரலாம் என்று அரசாங்கமே சொல்லி இருந்தது,அவருக்கு அவர் மனைவி சரசு ஆயாவக்கூட அழச்சிட்டு போக விருப்பம் இல்லை,அவர் நண்பர்களும் வீட்டில் அப்பா,அம்மா சொந்தகாரங்க எல்லாம் வற்ப்புறுத்தி அனுப்பி வச்சிருக்காங்க,நான் அழுது அழுது தூங்குற நேரமா பாத்து,காலைல கண்விழிச்ச எனக்கு தாத்தா ஊருக்கு போய்ட்டார் என்று அம்மாசொன்னதுமே தாத்தாவின்மீது அவ்வளவு கோபம்,தூர் தர்ஷன் டிவி செய்தியில் தேசிய விருதுக்கான பட்டியலை வாசிக்கும் போது தெருவே காத்திருந்து அமைதியாய் கேட்டுக்கொண்டேருக்கும் போது,நான் மட்டும் செய்தி யாருக்கும் கேட்க்காதவாறு சத்தம்போட்டு பாடம் வாசித்துக் கொண்டிருந்தேன்,தணியாத கோபத்தையும் தனிய வைத்தது தாத்தாவிடமிருந்து வந்த கடிதம் உன்னை விட்டு விட்டு வந்து விட்டேனென்று கோபப்படாதே,என்னோடு வந்த எல்லோரும் தாஜ்மஹால்,ஹரித்துவார் என்று சுத்திப் பார்க்க என்னை அழைத்தும் நான் வரவில்லை என்று அறைக்குள்ளேயே அடைந்து கிடக்கிறேன்,தேர்வு நெருங்கி விட்டதால்தான் உன்னை அழைத்து வரவில்லை,அரசாங்கத்திற்கு செலவு வைக்ககூடாது எனபது ஒருபுறமிருந்தாலும்,சந்தோஷத்தை ஊரிலேயே விட்டு விட்டு நாங்கள் என்னசெய்வது,உன் தேர்வு முடிந்ததும் உன்னை அழைத்துக் கொண்டு வந்து சுற்றிப்பார்க்கலாமென்று விட்டுவிட்டேன்,என் மீது நிறைய கோபத்தில் இருப்பாய் இந்த கடிதம் அதெல்லாம் சரி செய்யும் என்று நம்புகிறேன்,கடிதத்தை படிக்கும் போது கடந்து சென்றது வாக்கியங்கள் மட்டுமில்லை என் கோபமும்தான்,
ஒய்வு பெற்ற கொஞ்ச காலங்களில் தாத்தா நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையானார்,உணவு செரிக்க வில்லை என்று படாத பாடு படுவார்,உள்ளூர் மருத்துவர்களிடம் காண்பித்து பிரயோஜனம் இல்லை,வீட்டிற்கு அருகில் இருக்கும் குலோத்துங்கன் டாக்டர் கடலூரில் கிருஷ்ணமூர்த்தி டாக்டரிடம் சிபாரிசு செய்திருந்தார்,அங்கே தாத்தாவிற்கு டயாலிசிஸ் செய்து பார்த்ததில் கல்லீரல் புற்றுநோய் அபாய கட்டத்தை நெருங்கி இருந்தது,அறுவை சிகிச்சை செய்யும் அளவிற்கு அவர் உடல் நிலை ஒத்துழைக்காது என்று கை விரித்து விட்டனர்,வீடே துக்கத்தில் மூழ்கி இருந்தது,அடுப்பு பத்தவைத்து எத்தனை நாள் ஆகுமென்று அம்மாவிற்கே கூட தெரியாது,எல்லோரு அசதியில் தூங்கினால் கூட தாத்தாவி இருமல் சத்தம் ஒரு மரண பயத்தை எழுப்பிக் கொண்டே இருந்தது,இருமல் சத்தமும்,முனகல் சத்தமும் இரவு முழுக்க வீட்டை ஆக்கிரமித்து இருந்தது,எங்களை எல்லாம் கொஞ்சநாள் வெளியில் போய் தங்கிக்க சொல்வார் தாத்தா,அந்த கொஞ்சநாளுக்கான அர்த்தம் எல்லோருக்கும் புரிந்திருந்தது,தனது நோயினால் பிள்ளைகள் பாதிக்கப் படுவார்களோ என்ற பயம் அவருக்குள்ளே இருந்தது,தாடி வளர்த்த தாத்தாவை எனக்கு விவரம் தெரிஞ்சு இப்போதுதான் பார்க்கிறேன்,அவர் அருகில் சென்று அவரை கட்டி அனைத்து முத்தமிட எத்தனையோ முறை நெருங்கியும் அதற்க்கு அவர் அனுமதிக்கவே இல்லை ,கண்களில் கண்ணீர் கசிய தொலைவில் நின்று கொண்டே பார்ப்பேன்,
திடீரென்று ஒருநாள் தாத்தாவை காணவில்லை,வீடுமுழுக்க தேடி கிடைக்காமல் தேடிச்சென்றார் அப்பா,எதிரில் சவரம் செய்த முகத்தோடு பிரகாசமாய் வந்து நின்றார் தாத்தா,எல்லோருக்கும் ஒரே ஆச்சர்யம்,படுத்த படுக்கையாய் இருந்தவர்,மருத்துவர்கள் எல்லோராலும் கைவிடப்பட்டவரை இப்படிப்பார்த்ததும் கடவுள் தாத்தாவை காப்பாத்தி விட்டார் என்று நினைத்து ஆச்சர்ய படும்போதே தோன்ற வில்லை அதிர்ச்சி காத்திருக்குமென்று,குளித்து முடித்து ,வெள்ளை வேட்டி சட்டையை உடுத்தியவாறே என்னிடம் கேட்டார் என் மூக்கு கண்ணாடி எங்கே என்று,அதுதான் தாத்தா என்னிடம் பேசிய கடைசி வார்த்தை,அப்பா காதில் எதோ முணுமுணுத்துவிட்டு, கடவுளை கையெடுத்து கும்பிட்டு,ஈச்சரில் படுத்து செத்துபோனார்,இறுதி மரியாதை செய்ய வந்த வாத்தியாரெல்லாம் அப்பாவின் கைபிடித்து துக்கம் விசாரித்தவாறே செலவுக்கு ஏதும் பணம் வேண்டுமா என்று கேட்டனர்,இல்லசார் அவரு வந்த வேலை முடிஞ்சிபோச்சி நன் போறேன் கடைசி செலவுக்கு பணம் பத்தாயிரம் ட்ரங்கு பெட்டியில வச்சிருக்கேன் என்று என்னிடம் சொல்லிட்டுதான் சார் செத்துபோனார்,பெத்த புள்ளையா அவரு உசுரோட இருக்கும்போதும் நான் ஒன்னும் செய்யல,இப்ப செத்ததுக்கு அப்புறமும் ஒன்னும் செய்யவுடாம பண்ணிட்டாரு என்று தலையில் அடித்துக்கொண்டு அழுதார் அப்பா.நாலு வெள்ளை வேட்டி,நாலு வெள்ளை சட்டை,நாலு சென்ட்டுல ஓட்டு வீடு,தாத்தா சம்பாதிச்ச சொத்து இவ்வளவுதான்னாலும்,நாலு தலைமுறைக்கு பேர் சொல்லும் அளவு மானம் மரியாதையை சேத்து வைத்துவிட்டுத்தான் போனார்.
மார்கழி நள்ளிரவு ஒன்றில் ஊரிற்கு சென்றிருந்தேன்,நல்ல பசி பஸ் நிலையத்தில் கடைகள் எல்லாம் அடைத்து இருந்தன,பனிபடர்ந்த சாலையை மஞ்சள் நிற தெரு விளக்குகள் அலங்கரித்து இருந்தன,நடைபாதை கடைகளை தேடிக்கொண்டே நடந்து சென்றுகொண்டிருந்தேன்,பாலக்கரை ஆட்டோ நிறுத்தம் அருகில் ஆவிபறக்க இட்லி கடையில் கூட்டம், நிரம்பி வழிந்தது,அது குருவிக்கார பௌனாம்பால் கடை,அருகில் சென்று என்ன தெரியுதா என்றேன்,நல்ல வயதாகி இருந்ததால் என்னை அடையாளம் காண முடியாம முழித்தது. நான் காந்தி நகர் துளசி வாத்தியார் பேரன் என்றேன்,நல்ல இருக்கியாப்பா எங்க இருக்க கல்யாணம் ஆயிடுச்சா என்று கேட்டுக்கொண்டே இருந்தது,நான் எதற்குமே பதில் சொல்லாமல் இப்ப குருவில்லாம் விக்கறது இல்லையா என்று கேட்டேன்,இந்த மனுச பயலுவதான் செல்போனுக்கு ஒசர ஒசரமா கம்பிய நட்டு ஒட்டு மொத்தமா குருவிய பூரா கொன்னுட்டானுவளே என்று சொல்லி முந்தானையால் கண்களை துடைத்து கொண்டே இந்தா நீ சாப்பிடு என்று இட்டிலி தட்டை நீட்டும் போது தலை மாட்டில் குருவி சத்தம் கேட்டு திரும்பி பார்க்கிறேன்,பின்னால் நின்று கொண்டிருந்தவரின் செல் போன் ஒலித்தது,ஹலோ என்றவரின் தலைக்குமேல் ஓங்கி உயர்ந்து நின்றது ஒரு செல்போன் டவர் ................
தோழன்
து.ப.சரவணன்