ஒரு மாற்றம் வந்ததே (ன்) !

வெயிலில் காய்ந்திட
மழையில் நனைந்திட
இப்போதெல்லாம் பிடிக்கிறதே
இதயச் சுவர்களில்
உன்றன் நினைவுகள்
எப்போதும் வந்து இடிக்கிறதே !

கடலில் துள்ளும்
மீனாய் இருந்தேன் கடந்த நாட்களிலே
வலையில் தவிக்கும்
மீனாய் இருப்பது காதலின் ஈர்ப்பினிலே !

என்னைத் தொட்டு
உன்றன் பார்வை இழுத்துச் செல்கிறதே
உன்னிடம் கொண்ட
காதல் பிடிப்பு அழுத்திக் கொல்கிறதே !

தாகம் தீர்க்கும்
தண்ணீர் என்றே உன்னைக் குடிக்கின்றேன்
மோகம் என்பது
மூச்சைப் பிடிக்கும் என்பதைப் படிக்கின்றேன் !

தொலைந்த என்னை
அலையும் என்னிடம் திருப்பிக் கொடுத்துவிடு
நிழலாய்த் திரியும் (என் )
நிலையைக் கொஞ்சம் நீதான் மாற்றிவிடு !

கூந்தல் மடியில்
கொத்து மலர்கள் கொஞ்சம் உறங்கட்டும்
காந்தும் உடலில்
கலக்கும் உறவில் நெஞ்சம் கிறங்கட்டும்!

எழுதியவர் : முத்து நாடன் (12-Jan-12, 12:03 am)
பார்வை : 236

மேலே