உனக்குத் தெரியாமலே போகட்டும் .............
உன் தேன்துளி விரல் பிடித்து
பயணிக்கும் மழலையாக நினைத்ததும் !
உன் எழில் கூந்தல் வாசனையில்
நான் சுவாசம் பெற விரும்பியதும் !
உன் விரல்கள் தலை கோத
உன் மடியில் நான் கண்ணுறங்க எண்ணியதும் !
உன் புன்னகை மழையில் பூத்திடும்
பூவாக நான் ஆசைப்பட்டதும் !
நித்தம் உன் முத்தம் பெற்று
மோட்சமடைய நான் கனவு கண்டதும் !
ஆயுள் முழுதும் உன் அன்பை பெரும்
அடியேனாக நான் திண்ணம் கொண்டதும் !
நீ தூங்கும் போது உன்னைத் தூங்கவைக்க
நான் தூங்காதிருக்க பயிற்சி கொண்டதும் !
நீ விழித்து எழும் போது தேநீர் கொடுக்க
நான் தேநீர் கடையில் பயிற்சி பெற்றதும் !
நீ விரும்பும் உன் வீட்டு செல்ல நாயிடம் கடிபட்டு
நான் உன் நண்பன் ஆனதும் !
உன்னைக் காண்பதற்காகவே
கல்லூரியில் சேர்ந்ததும் !
உன்னைக் காணும் ஒவ்வொரு நிமிடமும்
என் காதலை சொல்லாமல் மௌனமாய் இறந்ததும்
காய்ச்சலால் அவதிப் பட்ட உன் தோழியைக் காண
நீ மருத்துவமனைக்கு விரைந்தாய் எனஅறிந்ததும் !
எனக்கு நானே சிறு விபத்தை ஏற்படுத்தி மாதக்கணக்கில் மருத்தவமனைக்கு
நீ வருவாய் என எண்ணி
ஏமாந்து ஏங்கியதும் !
ஒவ்வொரு பொங்கலின் போதும்
உனக்கு வாழ்த்து மடல்களை அனுப்பும் ,
அந்த முகவரி இல்லாத நபர் நான் தான் என்று நீயறிவாய் என எண்ணியதும் !
உனக்குத் தெரியாமலே போகட்டும் ......................
உன்னைப் பெண் பார்துவிட்டுப்போன உன்னவனிடம் ,
இவன் என் நண்பன் ???!!! என்று நீ
என்னை அறிமுகம் செய்த நாளிலிருந்து ...............
உன்னிடம் சொல்லாது போன
காதலை சுமக்கும் என்னால் ,
நீ சொல்லிய வார்த்தைகளால்
வரும் கண்ணீரை சுமக்க இயலவில்லை !
பரவாயில்லை நீ இருக்கப்போவது
என்னுடன் இல்லை என்றாலும் ,
என்றும் என்னவளாய் இருக்கிறாய் என்பதும் !
உனக்குத் தெரியாமலே போகட்டும் .................