உறவற்ற சிகரம்……
உறவற்ற சிகரம்……
பிரமிக்கும் சிகரத்திலிருந்து கீழ் நோக்கினால்
பிள்ளையார் எறும்பின் உருவென மனிதர்.
புரண்டொருவர் சிகரத்தால் கவிழ்ந்தால்
பிண்டம், உயிர் பிரிந்த உடல்.
சிகர உச்சியை மூடும் பனி
சிறகு விரிக்கும் குளிர்காற்றும் தனி.
பகர ஒரு தரு நிலைக்காது.
நுகர, பயிர் பச்சை இருக்காது.
நகரம், நாட்டில் உயரும் சில
சிகரம் தொடும் மனங்களை வண்டாய்
சிதைக்கும் கர்வப் பனிப் படலம்.
வதைக்கும் அலட்சியக் குளிர் வாடை.
உயரம் எட்டும் பல மனிதத்தின்
உறவு விலக, உணர்வு உலரும்.
உறவற்ற வாழ்வு வேப்பம் காயாகும்.
உறவற்ற உயர்வு வெறுமை, நிசப்தம்.
பகர முடியாத புகழின் பிரமிப்பு.
நிகரற்ற வெற்றிக் கொடிப் பரப்பு.
சிகரம் உறவின்றேல் ஒரு மகரமல்ல!
சிகர வெற்றிக் கொடி மட்டும் போதாது!
பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
20-2-2007.