நினைவுச் சொர்க்கம்.

நினைவுச் சொர்க்கம்.


அதிகாலை துயில் நீங்க
புதிதாய் உதிர்ந்த மல்லிகைகள்
புதுக்காலை வணக்கம் தாங்கி
மதிப்புடன் ஒரு வரவேற்பு.
இரவில் உதிர்ந்த மல்லிகைகள்
பரவிக் கிடந்தது முற்றத்தில்.
பூவிரிந்த மணத்தால் மனதில்
பா விரிக்கும் பிரயத்தனம்.

உள்ளம் கொள்ளையிடும் மலர்கள்
மெள்ளக் கட்டளை போட்டது….
‘முதலில் என்னில் விழித்தாய்!
மிதிபடுமுன் என்னைச் சேகரிப்பாய்!’…
மெதுமை மெத்தை இதழ்கள்
புது உணர்வாய்க் கண்ணடிப்பு.
நாளின் புத்துணர்வுச் சிலிர்ப்பு
காலைக் கடன்கள் முடிப்பு.

மல்லிகை மலர்மாலை தொடுப்பு
மணக்க கூந்தலில் இணைப்பு.
மறுநாள் விரித்த கூந்தலில்
மருட்டும் மல்லிகையாள் சுகந்தம்.
வாசனைத் திரவியமின்றிக் கூந்தல்
வசீகர நறுமணம் ஏந்தும்.
வாடாத நினைவுச் சொர்க்கம்
வடமிட்டு இனிக்கும் வர்க்கம்.

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்
3-9-2002.

எழுதியவர் : திருமதி. வேதா. இலங்காதிலகம (28-Jan-12, 7:26 pm)
பார்வை : 267

மேலே