இன்னொரு அநாதை
பசியை போக்கிக்கொள்ளவே
பழைய சோறு கேட்டு
பலபேர் வீட்டு வாசலில்
போய் நின்றேன்,
ஒருசிலர்
சுடசுட சோறு போடுவதாக
வீட்டுக்குள் அழைத்து
விருந்தும் வைத்தனர்,
உண்ட மயக்கத்தில்
உறங்கினேன் என்று,
அன்று நினைத்தேன் -ஆனால்,
இன்றுதான் தெரிந்தது...
என் கற்பை சூறையாட
ஒரு பிடி சோற்றையும்
ஒருதுளி மயக்க மருந்தையும்
தியாகம் செய்த தியாகிகள் என்று...
எது எப்படியோ
என்னைப்போல்
'இன்னொரு அநாதை'
வீதியிலே கையேந்தி ஊர்வலம் போக
என் கருவறைக்குள்
ஒத்திகை பார்க்கின்றது...!