புனிதம் !

ஆலய மணியின் ஓசை புனிதம்
அன்னை அன்பின் வாசம் புனிதம்
அழகு மழலைச் சிரிப்பு புனிதம்
ஆன்றோர் வாக்கின் நெறிகள் புனிதம் !

மொட்டு அவிழ்க்கும் மலர்கள் புனிதம்
மூங்கில் குழலின் இசையும் புனிதம்
காட்டின் பசுமைக் காட்சி புனிதம்
கற்பின் மங்கைக் காமம் புனிதம் !

புல்லின் நுனிமேற் பனியும் புனிதம்
பூவில் ஊறும் தேனும் புனிதம்
தொல்லை தராத நட்பும் புனிதம்
தொலைந்து போகாக் கல்வி புனிதம் !

கண்ணன் மீரா காதல் புனிதம்
கம்பன் இராம காதை புனிதம்
வண்ணம் இல்லா வெள்ளை புனிதம்
வான வில்லின் வர்ணம் புனிதம் !

நெருப்புச் சுடரின் தழலும் புனிதம்
நீரின் சுனைகள் தொடக்கம் புனிதம்
செருக்கு இல்லா ஆட்சி புனிதம்
சிவப்பு இரத்தம் களத்தில் புனிதம் !

உழைப்போர் சிந்தும் வியர்வை புனிதம்
ஊரின் நடுவே கோயில் புனிதம்
உழவர் கலப்பை உணவின் புனிதம்
உயர்ந்த தமிழே எங்கள் புனிதம் !

எழுதியவர் : முத்து நாடன் (22-Feb-12, 12:05 am)
பார்வை : 342

மேலே