[101] தவறு எங்கே .. ..?
பொறுத்தோம் வெளிமா நிலத்தான் எனினும்
பொய்முகம் கிழிய மரித்தாயே!
வெறுத்தே பேச வீழ்ந்து கிடப்பாய்!
விரும்பிய பெற்றோர் நினைத்தாயோ?
கல்வியைக் கொடுத்த நாட்டினிலே
கைவரி சைநீ காட்டினையே !
செல்வமும் திருடிச் சேர்ப்பதெனும்
சிந்தனை உனக்குள் வேர்த்ததும்,ஏன்?
காசுக் காக விலைபோனால்
கல்வி கொடுக்கும் நிலையிதுவா?
கூசப் பேசி உனைத்திருத்தார்
கூட்ட வந்த வினையிதுவா?
பெற்றோர் வளர்த்த தவறாமோ?
பெரியோர் நடத்த மறந்தாரோ?
கற்றோர் செய்த தவறாமோ?
கல்வி முறையின் தவறாமோ?
பொறுப்பில் உள்ள பெற்றோர்கள்
புரிந்து பிள்ளை வளர்ப்பாரோ?
உறுப்பில் காச(சு) நோய்வந்தால்
உடலை அதுவும் கொல்லாதோ?
விருப்பம் எல்லாம் நிறைவேற்ற
விழையும் பெற்றோர் நினைப்பாரோ?
கருப்பை நஞ்சைச் சமுதாயக்
கையில் உணவாய்க் கொடுப்பாரோ?
ஊழல் வளர்க்கும் சமுதாயம்
உருப்பட வழியும் உண்டாமோ?
சூழும் நெருப்பை உணராமல்
சுகமாய் இசையில் மகிழ்வாரோ?
குறுக்கு வழியில் பேருக்கும் செல்வம்
கூட இருந்தே கொல்லாதோ?
நறுக்கி வழியில் எறிந்த கொடிபோல்
நாய்போல் சாவது பொல்லாதே!
மாணவ நண்பா! இதுகேளு:
'மாண்பைக் கற்கும் வழிபாரு!
கோணல் திருத்தும் முறைதேடு!
குடியை உயர்த்தப் போராடு!'
'சமுதா யத்துச் சீர்கேடு
சங்கடம் தீர்க்க முன்,ஓடு!
அமுதம் தேடித் படியேறு!
அதையே குடித்து முன்னேறு!
அதன்பின் இவைகள் நடக்காது!
அதன்பின் இவைபோல் நடக்காது!
-௦-