கார்க் பந்தும் காத்திருந்த கண்களும்

பள்ளி நாட்களில், விடுமுறை என்றாலே கிரிக்கெட் ஒன்று தான் எங்களின் பொழுதுபோக்கு. பல நாட்கள் மதிய உணவு எடுத்து கொள்ளாமல் கூட நானும் என் தம்பியும் கிரிக்கெட் விளையாடி இருக்கிறோம்.

“இந்த கொளுத்துர வெயிலிலே, நாய் கூட வெளிய வராது. இந்த கத்திரி வெயிலிலே விளையாட போறீங்களே” என்று பலமுறை வீட்டிலே அக்கறையுடன் கூறி (திட்டி) இருக்கிறார்கள். இந்த வார்த்தைகள் எங்கள் காதுகளை எட்டுவதுற்கு முன்னே, நாங்கள் தெரு முனையை கடந்து இருப்போம். போருக்கு ஆயத்தம் ஆனவர்களை போல், ஒருவர் கையில் கிரிக்கெட் மட்டையுடனும் மற்றொருவர் பந்துடனும் கிரிக்கெட் மைதானத்தை நோக்கி கிளம்பி இருப்போம். அரசு உயர்நிலை பள்ளி மைதானம் தான் எங்களின் போர்க்களம்.

அன்றும் மதிய உணவிற்கு பின் ஆட்டம் ஆரம்பித்து இருந்தது. முதலில் களம் இறங்கிய கிடா குமாரு முதல் பந்திலேயே ஆட்டம் இழந்தான். பின் எங்களிடம் வந்து “ச்ச இன்னிக்கு எந்த மூஞ்சில முழிச்சேனே தெரியல, இப்படி ஆயிடுச்சே”னு புலம்ப ஆரம்பித்தான். இது குமாரின் காப்புரிமை (COPY RIGHTED) பெற்ற புலம்பல். “கண்ணாடிய பாத்திருப்ப கிடா” என்ற பதில் கும்பலில் இருந்து வந்தது. அனைவரின் முகத்திலும் சிரிப்பு. பின் ஆட்டம் தொடர்ந்த சிறிது நேரத்திலேயே பந்து உடைந்து விட்டது.

ஸ்டம்பர் நிறுவனத்தின் ரப்பர் பந்துகள் மிக தரமானதாகவே இருக்கும். ஆனாலும் அன்று எப்படியோ உடைந்து விட்டது. பந்தை எப்படியாவது அடித்து தொலைத்து விட வேண்டும் என்ற குறிக்கோளோடு விளையாடும் மட்டையாளர்களிடம் சிக்கி தவிக்கும் பந்துகள் படும் பாடு சொல்லவா வேண்டும். இந்த பந்துகளுக்கு உயிர் இருந்திருக்குமேயானால் அவை உருண்டு, பிரண்டு, கத்தி, கதறி அழுது இருக்கும். மாற்று பந்து இல்லாததால் ஆட்டம் சிறிது நேரம் தடை பட்டு இருந்தது. புதிய பந்து வாங்க, எனது மிதிவண்டியை எடுத்து கொண்டு ஆனந்த் ஊருக்குள் சென்றான்.

அரசு பள்ளி, ஊரின் நுழைவாயிலில் அமைந்து இருந்தது. ஊரின் மைய பகுதிக்கு செல்ல வேண்டும் என்றால், பள்ளி மைதானத்தை சுற்றி உள்ள சாலை வழியாக தான் செல்ல முடியும். சாலையை சுற்றி செல்வது என்பது கொஞ்சம் தூரமாக இருப்பதால் பலர் மைதானத்தின் ஓரமாகவே நடந்து செல்வர். சுவற்றில் அடித்த பந்தை போல திரும்பினான் ஆனந்த். ”என்ன டா பால் (பந்து) எங்க?” என்று இளங்கோ கேட்க “ஆவின் பால் இருக்குன்றான், ஆரோக்யா பால் இருக்குன்றான், மாட்டு பால் இருக்குன்றான், ஆட்டு பால் இருக்குன்றான், ஆனா கிரிக்கெட் பால் மட்டும் இல்லையாம் டா. பண்ணையிலயே இல்லையாம்” என்றான் ஆனந்த். “ஆரம்பிச்சுட்டியா டா உன் மொக்கையா. சரி பால்க்கு இப்போ என்ன டா பண்றது?” என்றான் கண்ணன்.

அனைவரும் ஆலோசனையில் ஆழ்ந்தோம். திடீரென்று அரவிந்த்க்கு வீட்டில் இருக்கும் கார்க் பந்து ஞாபகத்திற்க்கு வர, நண்பர்களிடம் அதை எடுத்து வர்றேன் என்று கூறி வீட்டுக்கு கிளம்பினான். கார்க் பந்துகள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் உபயோகிக்கபடும் பந்துகளை போன்ற நிறம், உருவம் கொண்டதாய் இருக்கும். புதிய பந்துகள் மிக பளபளப்பாகவும், சராசரி எடை உள்ளதாகவும் இருக்கும். ஆனால் பழசாக பழசாக மிக சொரசொரபாகவும், மிகுந்த எடை உள்ளதாகவும் மாறும். மிக சரியாக சொல்ல வேண்டும் என்றால் கல் பந்து போல் இருக்கும்.
உண்மையாகவே ஒரு கல்லினை தான் அன்று அரவிந்த் எடுத்து வந்திருந்தான்.

ஆட்டம் மீண்டும் புதிதாய் ஆரம்பித்தது. தானே மீண்டும் முதலில் களம் இறங்குவேன் என்று அடம்பிடித்து, தொடக்க ஆட்டக்காரனாக கிடா குமார் மீண்டும் களமிறங்கினான். ஆட்டம் மிக விறுவிறுப்பாகவே நகர்ந்தது.

அப்போது பந்து வீச முத்து தயார் ஆனான். முத்து பந்தினை மிக வேகமாக வீச கூடியவன். கார்க் பந்து மூலம் அன்று கிடா குமாரை பதம் பார்க்க போகிறான் என்றே நினைத்தோம். நாங்கள் நினைத்ததை போல் முதல் இரண்டு பந்துகள் அவன் கால் முட்டியை உரசியே சென்றது. மூன்றாவது பந்தினை இன்னும் சற்று வேகமாகவே வீசினான் முத்து. கண்ணை மூடி கொண்டு மட்டையை சுழற்றினான் கிடா. அவனையே அறியாமல் பந்து மட்டையில் பட்டு பள்ளியின் சத்துணவு மைய கட்டிடங்களை நோக்கி பறந்தது. அப்படி பறந்து சென்ற பந்து, அந்த வழியாக சென்ற ஒரு பெண்ணின் நெஞ்சில் அடித்தது. வலியில் அந்த பெண் மயங்கி கீழே விழுந்தாள்.

எங்களுக்கு சிறிது நேரத்திற்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. கண்ணன் வேகமாக பள்ளி கட்டிடங்களுக்குள் சென்று தண்ணீர் பிடித்து வந்தான். அரவிந்த் அந்த பெண்ணின் முகத்தில் தண்ணீரை தெளித்தான். அந்த பெண் முழித்து பார்த்ததும் தான் எனக்கு நிம்மதி பிறந்தது. ஆனந்த் மிதிவண்டியை எடுத்து கொண்டு வேகமாக ஊருக்குள் பறந்தான். அந்த பெண் நெஞ்சில் கையை வைத்துக்கொண்டு மெதுவாக எழுந்து தரையில் அமர்ந்தாள். ஆனந்த் ஊருக்குள் சென்று சோடா வாங்கி வந்தான். அந்த பெண்ணிற்கு அந்த சோடாவை குடிக்க கொடுத்தோம். அவள் அந்த சோடாவை குடித்து விட்டு எழுந்து நின்றாள். இது எதிர்பாராமல் நடந்து விட்டது என்று அந்த பெண்ணிடம் முத்துவும், இளங்கோவும் மன்னிப்பு கேட்டு கொண்டனர்.

“ஆளுங்க வாராங்க போறாங்கணு பாக்காம அப்படி என்னடா விளையாட்டு வேண்டியது இருக்கு. எல்லாம் சரியான காட்டு பசங்க. நீங்கலாம் கிரிக்கெட் விளையாடி அப்படி என்னத்தடா கிழிக்க போறீங்க” என்று எழுந்து பத்திரகாளி போல அந்த பெண் கத்த ஆரம்பித்தாள். அவளின் வசவு எல்லைகளை கடந்து சென்றது. அனைவரும் பொறுமையை இழக்க ஆரம்பித்தோம்.

ஒரு கட்டத்தில் மிகவும் பொறுமை இழந்த கிடா குமாரு, “அட ச்சீ கிளம்பி போம்மா, இல்லன பேட்’டால (மட்டையால) அடிச்சு உன் மண்டய உடைச்சிருவேன். உன்ன யாரு கிரவுண்டு’குள்ள (மைதானம்) வர சொன்னது, ரோட்டுல நடந்து போக வேண்டியது தான.” என்று எகிறினான். “அடிச்சிருவியாடா, அடி பாக்கலாம்” என்று அந்த பெண்ணும் எகிறினாள். மட்டையை தூக்கி அந்த பெண்ணை அடிக்க முற்பட்டான் கிடா. நாங்கள் அவனை தடுத்து நிறுத்தினோம். அந்த பெண் அவ்விடத்தை விட்டு நகர ஆரம்பித்தாள். போகும் போது “இங்கேயே இருங்க டா. நான் போய் என் மகனையும், புருஷனையும் கூட்டிட்டு வர்ரேனு” என்று மிரட்டி விட்டு சென்றாள். “உங்க ஆயாவை கூட கூட்டிட்டு வா, இங்க தான் இருப்போம்”னு பதிலளித்தான் முத்து. “அவ போய் யார வேனாலும் கூட்டிட்டு வரட்டும் நான் பாத்துக்கிறேன்” என்றான் கிடா குமாரு.

“ச்ச இன்னிக்கு எந்த மூஞ்சில முழிச்சேனே தெரியல, இப்படி ஆயிடுச்சே”னு மீண்டும் புலம்ப ஆரம்பித்தான் கிடா குமார். அனைவரின் முகத்திலும் மீண்டும் சிரிப்பு மலர்ந்தது. அன்று மாலை மிக நீண்ட நேரம் விளையாடி கொண்டே இருந்தோம். சவால் விட்டு சென்ற அந்த பெண் மீண்டும் வரவே இல்லை. அன்று கிளம்பிய போது அந்த பெண் சென்ற பாதையில் யாரேனும் திரும்பி வருகிறார்களா என்று பார்வையை பதித்துக் கொண்டே வீடு திரும்பினோம். இன்று வரை என் நண்பர்களும், சகோதரர்களும் அங்கு தான் விளையாடி வருகிறார்கள்.

இந்த சம்பவம் நடந்து 8 வருடங்கள் ஆகிறது. எங்களுக்கு தெரிந்து அந்த பெண் இந்த பாதையில் இன்று வரை வந்ததாக தெரியவில்லை. இன்று வரை காத்திருக்கிறோம் கார்க் பந்துடன் அந்த பெண்ணுக்காக!!!

எழுதியவர் : ராம்குமார் (26-Feb-12, 7:46 pm)
பார்வை : 473

மேலே