[111 ] பகிர்ந்துண்ணும் படையல் !

காலங்கள் தோறும் கனமழை வந்து
களிப்புக் கூட வேண்டும்! -இறைவா!
கனிவு சேர்க்க வேண்டும்!
ஓலங்கள் மாறி ஒற்றுமை தேறி
உதவி வாழ வேண்டும்! -இறைவா
உந்தன் ஆசி வேண்டும்!
ஒப்பனை இல்லா உணர்வுகள் ஒன்றி
உயிர்கள் களிக்க வேண்டும்! -இறைவா
உலகு செழிக்க வேண்டும்!
சொப்பன மில்லாச் சுவர்க்கமும் இங்கே
சுயத்தில் தொடங்க வேண்டும்! -இறைவா
சுற்றிப் பெருக வேண்டும்!
நாடி ஓடியே நல்ல செல்வமே
நாளும் சேர்க்க வேண்டும்! -இறைவா
நலிவு போக்க வேண்டும்!
பாடி ஆடியே பரமன் உன்முன்னே
படையல் போட வேண்டும்! -இறைவா
பகிர்ந்து உண்ண வேண்டும்!
தன்னை உணர்ந்து தவறுகள் நீக்கத்
தயவு செய்ய வேண்டும்! -இறைவா
தடைகள் போக்க வேண்டும்!
முன்னிலும் புதிய ஆண்டினை எங்கள்
முன்பு கூட்ட வேண்டும்! -இறைவா
முழுமை யூட்ட வேண்டும்!
-௦-
[மார்ச்சு -2009 மனைமலர் இதழில் வெளிவந்தது]