என் குழந்தையும் நானும்! (பகுதி ஒன்பது)

உன் காதலி கூட
உனக்கு -
இத்தனை முத்தம்
கொடுப்பாளோ என்னவோ;
அத்தனை முத்தத்திற்கு பிறகும்
உனையே நினைக்கிறது மனசு!

உண்மையில் -
நீ என் மகன் என்பதை விட
நான் உன் அப்பாயெனும்
மகிழ்வில் மீண்டும் மீண்டுமாய்
பிறக்கிறேன்
உன் ஒவ்வொரு சிரிப்பிலும்
பூக்கிறேன்
நீ அழுத கணத்தில் உடைகிறேன்
நீ வளர வளர -
என்னை நானே தொலைப்பேனோ என்ற
பயத்திலும் -
உன்னை வளர்க்கிறேன்!

கதவோரம் -
ஒளிந்துக் கொண்டு பார்ப்பாய்
ஓடி வந்து -
கட்டிப் பிடித்துக் கொஞ்சுவாய்
உயிர் மென்று
குடித்துவிடுவதாய் எனை
தேடிக் கதறுவாய் -
இதெல்லாம் உனக்கு
நினைவற்று போகும் நாளில்
நானென்ன ஆவேனோ!!

எனையும் அம்மா அம்மா
என்று தான் அழைப்பாய்,

பார்ப்பவர்கள் -
எங்கனா அப்பான்னு வருதாப்
பாரென்பார்கள்

நானும் -
உனக்கு அம்மாப் போலென்று
நான் - அதை கூட ரசிப்பேன்!

உன் சின்ன சின்ன
பற்களும் -
அலைந்து ஆடும்
கண்களும் -
எச்சில் ஒழுகும்
சிரிப்பும்-
எனக்கு முத்தமிட்டு கைதட்டி சிரிக்கும்
உன் ஜாலமும் -
இத்தனை அழகென்று
உனக்கு எப்படி பதிந்து வைப்பேன்!!

என் துணிகளெல்லாம்
பழசானால் -
கரிகந்தை என்பதில்
யாறுகுமே சந்தேகம் இரார்

ஆனால் -
உன் துணிகள் உனக்கு
சிறுத்து விட்டாலும்
அதை கையில் தூக்கி நிறுத்திப் பார்த்தால்
என்றைக்குமே நீ அதில் -
தெரிவாயடா!!

எழுதியவர் : இவண் நகுலேஷ் (29-Feb-12, 12:51 pm)
சேர்த்தது : இவள் அஞ்சலி
பார்வை : 157

மேலே