என் குழந்தையும் நானும்! (பகுதி பத்து)
நீ பிறந்த தேதி
உனக்கு பெயர் வைத்து
உன்னை முதன் முதலாய்
அழைத்த நாள்,
நீ முழுச் சட்டை போட்டது
காலூன்றி நடந்தது
சப்தம் எழுப்பி பார்த்தது
அம்மா என்று அழைத்தது
அப்பா என்று அழைத்த குரல்
உயிர் வரை உள்சென்றது -
இன்னும் எத்தனை எத்தனை எத்தனை?
அத்தனையும் -
உனக்கான இடத்தில் பத்திரமாக
வைக்கப்பட்டுள்ளது என்பதை -
உனக்கொரு பிள்ளை பிறந்தால் அன்றி
உனக்குத் முழுதாய் தெரிய வாய்ப்பில்லை!
எப்படியோ -
வேண்டாமென்று நினைத்து நினைத்தே
எதையேனும் உனக்கு
வாங்கி வரும் பழக்கத்தை
உனக்கும் எனக்கும் பழக்கிவிட்டேன்.
வேறென்ன செய்ய -
அப்பா என்று நீ ஓடிவந்து
என் கையை விரித்துப் பார்க்கையில்
ஒன்றுமில்லாது - ஏமாந்து போவாயோ
என மனசு உடையும் வலி -
வாங்கி அரும் அப்பாக்களுக்கே
புரியும்!
உனை -
சற்று வளர்ந்ததும்
கடைக்கு அழைத்துச் சென்றேன்,
நீ குழந்தை பொம்மை
எடுத்தாய்
வீடெடுத்தாய்
வண்டிகள் எடுத்தாய்
நாய் கரடி பொம்மைகள் எடுத்தாய்,
மிதிவண்டி சொப்புகளென - என்னென்னவோ
எடுத்தாய்,
எல்லாவற்றையும் பார்த்து
துள்ளி குதித்தாய் -
சரி வைத்துவிட்டு வா போகலாமென்றால்
முடியாதென்று
அழுதாய் -
அவைகளை எல்லாம் பிடுங்கி
கடையிலேயே வைத்துவிட்ட
என் ஏழ்மை -
உனக்கு அவைகளை எல்லாம்
காட்டிவிட்டு மட்டும் வந்து
வீட்டில் அமர்ந்து அழுதது!
நான் யாரை பார்த்தாலும்
என் பிள்ளை இப்படி
என் பிள்ளை அப்படி என்று
என்னென்னவோ சொல்கிறேன்
நீ நாளை வளர்ந்த பிறகு
உன்னப்பா -
இப்படி இப்படி என்றெல்லாம்
உனக்கு நினைவிலிருக்குமா!!