மீண்டு (ம்) வருவேனா...!

பசுமை மரங்களின்
மடியில் இலைகளின் மரணங்கள்...!

பூமித்தாயின் மடியில்
வீழ்ந்து கிடக்கும்
இலைகளுக்கு
சருகுகளின் சலசலப்போடு
பூக்கள் நடத்தும் இறுதி மரியாதை...!

மீண்டும் பூப்பூக்க
தன்னம்பிக்கை கிளைகளோடு
நிர்வாணமாய் நிற்கும் மரங்கள்...!

வேடிக்கைபார்க்கும்
உறவுகளாய்
பசுமை மரக்கிளைகளில்
அமர்ந்து கும்மாளமிடும்
ஹனிமூன் பறவைகள்...!

மரங்களுக்கு மட்டுமா
இது
மனிதர்களுக்கும்தான்...!

நான்குபேர் தோள்களில் நான்பயணிக்க
எதிரே
சாம்பிராணி வாசனையோடு
சாமரம் வீசிவரும் ஐயர்
பல்லக்கில் பவனிவரும் கடவுள் ...!

என் மீதும்
பல்லக்கில் கடவுள் மீதும்
கிடக்கும் பூக்கள்
ஒரே மரத்தில் மலர்ந்தவையா ....?

ஏதேதோ யோசனைகள்
மனசுக்குள் அசைபோட
குனிந்து பார்க்கிறேன்
சாக்கடை நாற்றம்
நாசியில் நுழையாமல் இருக்க
துண்டை போர்த்திக்கொண்டு
ஏதேதோ பேசிக்கொண்டு
என் பின்னால்
உறவுகள் நடத்தும் இறுதி ஊர்வலம்...!

அனுதாபத்தோடு
கடைசி விசாரிப்புகள்
முடிந்தவுடன்
அவசர அவசரமாய் என் பெயர் அழிக்கப்பட்டுவிடும்
அவரவர் டைரிகளிலும் செல்போன்களிலும்...!

தெருவீதிகளில்
திண்ணை நாக்குகள்
முறமாக மாறி சலித்து எடுக்கிறது
முடிந்துபோன என் வாழ்க்கையை...!

அவரவர் மனசுப்படி
என் வாழ்க்கை
எடைபோடப்படுகிறது...
தீர்ப்புகள் தீர்மானிக்கபட்டபிறகு
திரும்பி வருவேனா...?

நான்குபேர் சுமந்து செல்ல
வாழ்ந்த வாழ்க்கையையும் ஊரையும் அசைபோடுகிறது மனசு...!

நிஜமான கனவுகளை
நிழலாய் சுமந்துகொண்டு
மீண்டு(ம்) வருவேனா...?

எழுதியவர் : vetrinayagan (4-Mar-12, 9:04 am)
பார்வை : 289

மேலே