நட்பாக மா(ற்)றிய காதல்..
மெதுவாய் புலரும் பனிக்கால
பொழுதாய் புலர்ந்தது
உனக்கும் எனக்குமான நேசம்!
குளிர் துடைக்கும் சூரியக்கதிர் போல்
விரிகிறது அதன் எல்லைகள்..
ரோஜா இதழ் போல்
முகிழும் உன் வார்த்தைகளும்
கொட்டும் அருவிபோல்
குதிக்கும் என் வார்த்தைகளும்
போஷித்து வளர்க்கின்றன
நம் நேசத்தை..
புன்னகையை
பகிர பலர் இருந்தாலும்
கண்ணீரை உனக்காய் மட்டுமே
சேமிக்கின்றேன்..
துணையா..!!! இணையா..!!!
என என்னிதயம்
கண்ணாமூச்சி ஆடும்போதெல்லாம்
எல்லைகளை சுட்டி
தெளிய வைக்கிறாய்!
மலர்ந்து மணம் பரப்பும்
மலரை விட
வெடித்து பரவும் விதையே
மண்ணிற்கு தேவையென்பதை
உணர வைத்த உனக்கு
காதல் தாண்டிய
என் நட்பை
காணிக்கையாக்குகிறேன்!
நமக்கிடையில் எல்லைகளும்
வேலிகளும் இருந்தாலும்
பகிர்தலும்.. புரிதலுமாய்..
தேடலும்.. தெளிதலுமாய்...
தொடரட்டும் நம்
நட்பாக மா(ற்)றிய காதல்..