என் அருமை காதலியே...
காதலியே! உள்ளமெனும் காயத்தோடும்
கனத்துவரும் மூச்சோடும் கண்ணீரோடும்
வாதையுறவோ இவனைக் காதலித்தாய்...?
சாதலுறவோ இவனைக் காதலித்தாய்...?
புல்லைப்போல் மெலிந்த உனைக் காதல் நோயால்
புண்ணாக்கி மென்மேலும் மெலியவைக்கும்
கல்நெஞ்சக் காரனை ஏன் காதலித்தாய்...?
களம்நின்ற வீரனை ஏன் காதலித்தாய்...?
சுகங்காட்டும் காதலர் தோள்கள்மீது
துயில்கொள்ளும் எழில்மாதர் வாழும் மண்ணில்
முகங்கூடக் காட்டாது களத்தே வாழும்
முண்டத்தை ஏனம்மா காதலித்தாய்...?
பொறு கண்ணே! போர்வாழ்வு நெடுநாள் இல்லை!
பூக்கட்டும் தமிழாட்சி! மறுநாள் உன்றன்
சிறுகாலில் விழஓடி வருவேன் அத்தான்...!
தித்திக்கும் முத்தம்உன் செவ்வாய்கேதான்...!