வீழ்வேனோ...?
(என் பிரியத்துக்குரிய எதிரிகளுக்கு...)
சிரிங்கள் எதிரிகளே!
சிரிங்கள்!
இன்று
உங்கள் சிரிப்பு
என்னைக் காயப்படுத்தலாம்
ஆனால்
நாளை
என் மௌனம் கூட
உம்மைக் கேலி செய்யும்...
நான்
வீணையின் நரம்பாய்
வாழ நினைக்கிறேன்
என்னை
வில்லின் நாணாய்
விறைக்க வைக்காதீர்!
அது
உங்கள் கழுத்துகளுக்கே ஆபத்து...
என்ன கேட்டீர்?
"சிரிக்கத் தெரியுமா?"
என்றுதானே?
உண்டு.
நானும் சிரிப்பதுண்டு!
பிச்சைக்காரனின் தட்டில்
எப்போதாவது விழும்
சில்லரையைப் போல....
வாழ்க்கையைப் பற்றிய
வியாக்கியானங்களை
என்னிடம் நீட்டாதீர்!
நான் சீசர்!
எனக்கெவனும்
வாள் பிடிப்பது எப்படியென்று
வகுப்பெடுக்க
வரவேண்டாம்...
ஒவ்வொரு முறையும்
தன்
தாய்நாட்டுக்காக
போரில் பெறும் காயங்களை
பெருமிதத்தோடு தடவிப் பார்க்கும்
ஒரு
சுத்தமான குடிமகனைப் போல்
நான்
தோல்விகளைத்
தடவிப் பார்க்கிறேன்!
தடைகளைக் கண்டு
தொடை நடுங்குபவன் நானன்று!
நட்சத்திர முட்கள் தைத்தாலும்
நிலவின் பயணம்
நின்றுவிடாது....
இடிகள் தோன்றுவதால்
வானம் இடிந்துவிடாது...
சரித்திரம் தனது
சாயம் போகாத பக்கங்களில்
இவன் பெயரைக்
குறித்துக் கொள்ளப்போவது நிச்சயம்!
இவன் அருவி!
இவன்
விழுந்தால் கூட
உலகம்
வியந்து நோக்கும்...
உம்மைப் போல்
சராசரி வாழ்க்கை
எனக்குச் சரிப்படாது
எதிரிகளே!
திமிங்கலம் வாழக்
குட்டை வசதிப்படாது...
இவன்
கலைமகளின்
கையில் ஒருவிரல்...
இவன்
திருமகளும்
தேடும் பெரும்பொருள்.....
இவன் பேனா
தமிழ் இலக்கிய வரலாறென்னும்
ஆயிரங்கால் மண்டபத்தில்
ஒரு தூண்....
எழுதி வைத்துக் கொள்ளுங்கள்
எதிரிகளே!
இன்று
இவன் பிடித்திருக்கும்
இதே பேனா கொண்டு
உங்கள் முகத்தில்
கரும்புள்ளி செம்புள்ளி
குத்தும் நாள் வெகுதூரத்தில் இல்லை.....
---ரௌத்திரன்