மண்ணைத்தாண்டி வருவாயா...?
சினிமா தான் என் கனவு.
பல லட்சங்களைத் தொலைத்தேன்,
என் இலட்சியத்தை ஈட்ட.
ஒட்டிய வயிறோடு காய்திருந்தேன்.
ஒரு கம்பெனியிலாவது வாய்ப்பு பெற.
அசிங்கமும், அவமானமே
இறுதியில் மிஞ்சியது.
படம் இயக்க வாய்ப்பில்லாததால்
என் மனமும் இயங்க மறுத்தது.
ஒன்றுமே கைகூடவில்லை.
உள்ளத்தில் தெம்புமில்லை,
ஊக்குவிக்கவும் ஆளில்லை.
உயிர் இருந்தும் பயனில்லை
என்று முடிவெடுத்தது,
தலையை தண்டவாளத்தில் வைத்தேன்.
நெஞ்சின் படபடப்பு அடங்கும் முன்,
தண்டவாளம் துடிதுடிகலானது.
சில நொடிகளில் ரயில்
பாய்ந்தும் சென்றது.
விழுந்து கிடந்த என்னை
தொட்டு தூக்கி விட்டார்.
நான் கண்ட ஒரே
நல்ல நியமான மனிதர் குப்த்தண்ணன்.
என் விருப்பம் அறிந்தவர்
படம் எடுக்க பணம் தந்தார்.
என் கதையை கேட்டு
சொர்க்கம் சென்று வந்தார்.
சொக்கியும் போனார்.
கதைக்கு கச்சிதமான
நாயகி நடிகை சௌதர்யாவை
ஒப்பந்தம் செய்தும் தந்தார்.
ரணகளப் படுத்தும் பாத்திரத்தை
ரகுவரனே ஏற்று நடிக்க வைத்தார்.
கதாநாயகன் மட்டும் கடைசிவரை
சிக்கவில்லை.
தயங்கி தயங்கி ஒரு பெரிய
நட்சத்திரத்தின் பெயரை
குப்த்தண்ணன் காதில் ஓதினேன்.
முகம் வெயர்த்து முதலாளியிடம்
இட்டுச் சென்றார்.
மொரட்டு தடித்த பணக்கார தர்மராஜா,
அவர் முதலாளி.
நடிகர் பெயரை கேட்டுக்கொண்டு
காற்றிலே கணக்கு போட்டார்.
பட்ஜெட் இடிக்குமோ என்று
யோசித்தார் போலும்.
சில நொடியிலே தர்மன்,
இரு மாதங்கள் காத்திருந்தால்
அவர் கிடைப்பார் என்றார்.
சரி என்று மற்ற பகுதியை
படமாக்க ஆரம்பித்தோம்.
படம் நன்கும் வளர்ந்து வந்தது.
நானும் குப்த்தண்ணனும்,
இரண்டு மாதம் கழித்து
சரியாக வெள்ளிகிழமை 2 ; 30 க்கு
சொன்னபடி அண்ணா சாலை
சென்று கதாநாயகனுக்காக காத்திருந்தோம்.
திடீரென்று ஒரு வெள்ளை
BMW காரை ஒரு தண்ணி லாரி
இடித்து எரிந்தது.
காரிலிருந்தவர் தூக்கி எறியப் பட்டார்.
அருகில் சென்று பார்த்தால்,
ரத்த வெள்ளத்தில் செத்துக் கிடக்கும்
அந்த பெரிய நட்சத்திரம்.
அதிர்ச்சியில் என் கெட்ட
நேரத்தை நொந்து கத்தினேன்.
யாரைவைத்து இயக்குவது என்று
குப்த்தண்ணன் இடம் கேட்டேன்.
இவர் தான் நம் படத்தின்
நாயகன் என்றார் குப்த்தண்ணன்.
ஒன்றும் புரியாமல்,
செத்தவரை வைத்து எப்படி இயக்குவது
என்றேன்.
அதற்கு குப்த்தண்ணன்,
செத்தவனே படத்தை இயக்கும் போது,
செத்தவன் நடிக்க முடியாதா?
என்றார்.