உயிர்வேலி .நூல் ஆசிரியர் கவிஞர் ஆலா . நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி

உயிர்வேலி

நூல் ஆசிரியர் கவிஞர் ஆலா

நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி

நெய்தல் பதிப்பகம் விலை 45

நூலின் அட்டைப்படம் வித்தியாசமாக உள்ளது .பாறையில் பூ பூப்பதுப் போல ,கற்களில் செடி முளைத்துள்ளது .உயிர்வேலி
நூலின் தலைப்பே முள்வேலியை நினைவுட்டுவதாக உள்ளது . கவிஞர் அறிவுமதியின் அணிந்துரையிலிருந்து சில வரிகள் .,

இதோ தம்பி ஆலா ...இயற்கையோடு இயற்கையாக வாழ்ந்ததற்கான அடையாளங்களோடு அழகழகான அய்கூக்களைத் தந்திருக்கிறார் .

ஆம் உண்மைதான் .புதுவையின் சிறந்த ஹைக்கூ கவிஞர்கள் வரிசையில் ஆலாவும் இடம் பிடித்துள்ளார் .ஆலா என்ற அற்புதப் பறவையின் புனைப் பெயரில் அற்புத ஹைக்கூ புனைந்துள்ளார் .சொந்த வீட்டை வறுமையின் காரணமாக விற்று விட்டு வாடகை வீட்டில் குடி இருக்கும், குடிமகனின் ஏக்கத்தை ,ஒரு ஓரத்தில் இருக்கும் கவலையை நன்குப் பதிவு செய்துள்ளார் .

பூத்திருக்கும் பாளை
தாத்தா வச்ச தென்னை
வீடு விற்பனை !

குடும்ப சூழ்நிலை காரணமாக பலருக்கு காதல் தோற்கலாம் . ஆனால் காதலி நினைவு மட்டும் என்றும் மறப்பதே இல்லை. மூச்சு உள்ளவரை மூளையில் ஒரு ஓரத்தில் காதலி நினைவு இருந்துக் கொண்டே இருக்கும் .

காதலித்தவளைப்
பூட்டி வைத்தனர்
நெஞ்சுக்குள் !

பகுத்தறிவுப் போதித்து,முட நம்பிக்கைகளைச் சாடும் விதமாக ஹைக்கூ கவிதைகள் நூலில் நிரம்ப உள்ளது .அவற்றில் பதச் சோறாக ஒன்று.

அறுத்தெறி
கறுப்புக் கயிறு
மடமையின் குறி !

காதலை வித்தியாசமாகப் பார்க்கிறார் நூல் ஆசிரியர் கவிஞர் ஆலா.

சயனைடு சுவை
சாப்பிட்டவருக்கு தெரியும்
காதல் !

தமிழகத்தில் கல்லுரி மாணவிகளை உயிரோடு பேருந்தில் கொளுத்திய கொடூர நிகழ்வை யாரும் எளிதில் மறக்க முடியாது . அதனை நினைவூட்டும் ஹைக்கூ .

அரசியல் வெறி
பூக்கள் சாம்பலாச்சு
மாணவிகள் எரிப்பு !

அண்டை மாநிலங்கள் போட்டிப் போட்டு தமிழகத்திற்கு வஞ்சகம் செய்து வருகின்றன .தமிழகத்து அரசியல் வாதிகள் அவர்கள் சண்டைப் போடுவதற்கே, நேரம் போதவில்லை .பிறகு எப்படி? மக்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பார்கள் .பிற மாநிலம் போல தமிழகத்தில் எந்த விசயத்திலும் ஒற்றுமை இல்லாதது வேதனை .தமிழ்நாட்டுத் தமிழர்களின் உள்ள கொதிப்பை நூல் ஆசிரியர் கவிஞர் ஆலா நன்குப் பதிவு செய்துள்ள ஒரு ஹைக்கூ .

இந்தியா பொய்
இந்தியன் பொய் ...பொய்
நாம் தமிழர் !

அறிவியல் சாதனமான கணினியிலும் சோதிடம் பார்க்கும் மடமையைச் சாடிடும் ஹைக்கூ .

மடமை மாந்தன்
புதிய வண்ணம்
கணிப்பொறிக் கணியம் !

தொலைக்காட்சி வருவதற்கு முன் நாடு நன்றாக இருந்தது .தொலைக்காட்சி வந்தப் பின்புதான் நாடு சீரழிந்து வருகின்றது. தொலைக்காட்சி மூலம் வன்முறை, ஆபாசம் ,வக்கரம் ,அனைத்தும் கற்பித்து வருகின்றனர் .தொலைக்காட்சி தொல்லைக்காட்சி ஆகி விட்டது .

நாமாவோம்
மூன்று குரங்கு பொம்மை
தொலைக்காட்சி !

காதலுக்கு புதிய விதி ஒன்று கூறுகின்றார் பாருங்கள் .வித்தியாசமாக சிந்தித்து ஹைக்கூ எழுதி உள்ளார் .இந்த ஹைக்கூ படிக்கும் வாசகர்களுக்கு அவரவர் காதல் நினைவிற்கு வரும் .

தூரம் அதிகமாக
ஈர்ப்பு விசை கூடும்
காதலின் விதி !

புகழ்ப் பெற்ற ஜப்பானிய ஹைக்கூ கவிஞர்கள் இயற்கையை மட்டுமே பாடினார்கள். ஆனால், தமிழக ஹைக்கூ கவிஞர்கள்தான் சமுதாயத்தையும் பாடி வென்றார்கள் .இயற்கையையும் எங்களுக்கு பாடத் தெரியும், காட்சிப் படுத்தும் விதமாகவும் பாடத் தெரியும்என்பதை மெய்பிக்கும் விதமாக ஒரு ஹைக்கூ .

பனை மரத்தைப்
படம் பிடித்தது
பனித்துளி !

காதலர்களின் விழிகள் பேசும் போது,இதழ்கள் பேசிட தேவை இருக்காது .காதலர்கள் அனைவரும் அறிந்த உண்மை .

நிறைய பேச நினைத்து
அமைதியாய் விழுந்தேன்
விழி ஈர்ப்பு விசை !

ஆணாதிக்க சமுதாயத்தால் எழுதப்பட்ட பாரப்பட்சமான சட்டத்தையும் கேலி செய்யும் விதமாக எள்ளல் சுவையுடன் சாடுகின்றார் .

விபச்சாரம் செய்தனர்
ஆண்கள்
அழகிகள் கைது !

ஈழத தமிழர்களுக்கு அடுத்தப் படியாக புதுவைத் தமிழர்கள் தமிழ் இன உணர்வுடனும் ,தமிழ் மொழி பற்றுடனும் பிற மொழிச் சொற்கள் கலப்பின்றி முடிந்த அளவிற்கு நல்ல தமிழ்ச் சொற்களை பயன்படுத்தி படைப்புகளைப் படைத்தது வருகின்றனர் .அந்த வரிசையில் நூல் ஆசிரியர் கவிஞர் ஆலா மிக நன்றாகப் படைத்தது உள்ளார் .பாராட்டுக்கள் .

எழுதியவர் : இரா .இரவி (31-Mar-12, 6:17 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 267

சிறந்த கட்டுரைகள்

மேலே