அடையாளம் மறக்கும் தமிழர்கள்

ஆதி காலம் தொட்டே கலாச்சாரம்,பண்பாடு என அது பற்றிய வரலாறுகளையும் பண்பு கொண்ட ஒரு சமூகத்தையும் தனக்கென தனியான ஒரு அடையாளத்தை கொண்ட ஒரு இனமே எமது தமிழினம் என்பதில் நாம் தமிழராக பிறந்ததையிட்டு பெருமை கொள்ளலாம். பண்பாட்டு விழுமியங்களையோ அல்லது சமூக கலாச்சாரத்தையோ தமிழினம் ஒரு போதும் விட்டுக்கொடுப்பதில்லை.

வளர்ந்து வரும் இந்த நாகரிக உலகத்தில் மேலைத்தேய பண்பாடுகள் மீது சில தமிழர்களுக்கு ஏற்பட்ட மோகத்தினால் இப்போது மேலைத்தேய பண்பாடுகளே எம்மை ஆண்டு கொண்டிருக்கிறதென்பது மிக கேவலமான ஒரு செய்தி. அதாவது எங்களுக்கு சொந்தமான பண்பாட்டை விட்டு விட்டு யாரினதோ பண்பாட்டை பின்பற்றுவது எம்மை நாமே தாழ்வு படுத்திக் கொள்ளும் இழிவான செயலேயன்று வேறு ஏது?

இந்த நிலை இப்போது மாற்றம் பெற்றிருக்கிறது தமிழ் சமுதாயத்தில் அதுவும் இலங்கையில் பண்பாட்டுக்கு பெயர்போன,உலகமெலாம் பண்பாட்டின் உதாரணமாய் விளங்கிய யாழ் மண்ணில் சமகாலத்தில் அதாவது போருக்கு பின்னைய இன்றைய நாட்களில் மிகவும் கேவலமான அல்லது கீழ்த்தரமான நிகழ்வுகள் இடம்பெறுகிறது என்றால் அங்கு வாழும் தமிழர்கள் பண்பாட்டை மறக்கிறார்கள் அல்லது பண்பாடு பற்றிய கவனமில்லாமல் இருக்கிறார்கள் என்பதே மறைந்து கிடக்கும் வெட்கபடக்கூடிய உண்மை .

நடந்து முடிந்த போருக்கு பின் தமிழர்கள் வாழும் இடங்களில் கற்பழிப்புகள் ,கொலைகள் என அரேங்கேறும் இப்படியான காட்சிகள் யாழ் மாவட்டத்தில் கூடுதலான இடங்களில் இடம்பெறுவதின் மூல காரணமாய் இருப்பது ஒரு தமிழ் வாலிபன் அல்லது ஒரு தமிழ் யுவதி என்பது தான் அதிர்ச்சி அடைய வைப்பதும் அதே நேரம் கவலையடைய வைப்பதும் எமை போன்ற பண்பாடு பற்றிய கவனம் உள்ளவர்களுக்கு .

குறிப்பாக நாம் கவனிக்க வேண்டிய இன்னுமொரு விடயம் யாழ் மண்ணில் இளம் வயதினர் சிலர் இப்படியான நடத்தைகளில் ஈடுபட்டாலும் பல அதே வயதை ஒத்த இளம் வயது இருபாலரும் சமுதாய அக்கறையோடு கலாச்சார விழிப்புணர்வோடு அவர்கள் தமது அடையாளங்களை மறந்து விடாமல் வாழ்ந்து வருகிறார்கள் என்பது "புளி வார்த்த வயிறுக்குள் பால் வார்க்கிறது கொஞ்சம்".

இது இப்பிடியிருக்க சில பள்ளிக்கூடங்களில் சிலமாணவர்கள் புகை பிடிப்பதாகவும் பள்ளிக்கூடத்தில் கூட பண்பாடு காணமல் போய்விட்டதாகவும் சமுதாய அக்கறையோடு உள்ள மாணவர்கள் சிலர் என்னோடு பேசும் போது கவலையோடு சொல்லியிருந்ததை நான் உங்கள் மூலமாய் நினைவு கொள்கிறேன். யாழ் மாவட்டத்தில் சிலபிரபல பாடசாலைகளில் இடம்பெறும் மிககேவலமான பெண் மாணவிகள் மீதான சில ஆசிரியர்களின் (ஆண் ) நிகழ்வுகள் மூடி மறைக்கப்பட்டு குறிப்பிட்ட ஆசிரியர் பணியிடம் மாற்றப்பட்டது சிலருக்கு தெரிந்த விடயமே .?.உள்ளாடைகளோடு சூரியக் குளியல் குளிக்கும் இங்கிலாந்து நாட்டவன் பார்த்தால் கூட அருவருப்பு அடைந்துவிடுமளவுக்கு இன்றைய யாழ் மண்ணின் நிகழ்வுகள் ஆயத்தம் பார்க்கின்றன .

நான் யாழிலிருந்து வந்த ஒரு ஆசிரியர் ஒருவரை சிலமாதங்களுக்கு முன்பு ஒரு இலக்கியவிழாவில் காண முடிந்தது .நீண்ட நேரமாய் எமது மண்ணின் இன்றைய நிலைதொடர்பாக பேசினோம். நிகழ்வு முடிவடைந்த பின்னர் அவர் விடைபெறும் போது "தம்பி இன்னும் சில வருடங்களில் நாம் எதை இப்போது கலாச்சார சீரழிவு என்று கவலைப்படுகிறோமோ அது தான் கலாச்சாரமாய் ஆகிவிடும் போல் உள்ளது. அது தான் பயமாக இருக்கின்றது "என்றார் மிகக் கவலையும் பண்பாடு பற்றிய ஒரு கவனமும் அவரது முகத்தில் தெரிந்தது . அவரது முகத்தில் சிறிது நேரம் நான் என்னை பார்த்தேன் எனலாம் .

வெளிநாட்டில் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களின் வாழ்க்கையும் அவர்களின் பிள்ளைகளின் கலாச்சார ,பண்பாடு பற்றிய மாறுதல்களை மேலைத்தேய பண்பாடுகளில் ஊறிப் போய் தமது பண்பாடுகளே தெரியாமல் வாழ்ந்து வருகிறார்கள் என்பதையும் சீரழிவுகளையும் கடந்த ஆனந்த விகடன் பத்திரிகையில் எழுத்தாளர் இளைய அப்துல்லா எழுதிய "தலைமுறை நிழல்கள்" கட்டுரை புலம் பெயர் நாட்டில் வாழும் தமிழர்களின் சீரழிவுகளை கதையூடாக சொல்லியிருந்தார்.இப்போது யாழ் மண்ணிலும் அது போல தான் இடம் பெறுகிறது என்பது தான் பெரும் கவலை .

நாம் ஒன்றை மறந்துவிடக்கூடாது ஒரு இனத்தின் சமூக பண்பாட்டு விழுமியங்களை கட்டிப் பாதுகாப்பது அந்த இனத்தில் பிறந்த ஒவ்வொரு சீவனுக்கும் இருக்கும் கடமை என்பதை நாம் அனைவரும் உணர்ந்து கொள்ளவேண்டும். அப்படி பாதுகாக்க மறந்தால் அந்த சீவன் சுடுகாட்டுக்கு போக வேண்டும்!

திட்டமிட்டோ அல்லது மறைமுகமாகவோ சீரழிக்கப்படும் தமிழர்களின் கலாச்சாரத்தை நாம் பாதுகாக்கவே முன் வரவேண்டுமே தவிர எமது பண்பாடு அழிய உந்துசக்தியாகவோ ,உறுதுணையாகவோ இருந்து விடக்கூடாது. எமது நிழல்களையும் அடையாளங்களையும் தொலைத்து விட்டால் நாம் எந்த இனம் என்பதே தெரியாமல் போய் விடும். ஒரு இனத்தின் அடையாளம் கலாச்சாரம் ,மொழி ,பண்பாடு கருத்தில் கொள்வோம் இளைய சமுதாயமே !

எழுத்துருவாக்கம்
கவிஞர் அகரமுதல்வன்

எழுதியவர் : கவிஞர் அகரமுதல்வன் (1-Apr-12, 12:21 pm)
பார்வை : 1504

மேலே