பெறு உயர்வு
திடமொடு திரும்பு உடைபடஇரும்பு
என இரு உறுதி எடு
பட இது துரும்பு பகைதனும் எறும்பு
பாரென அதை நொருக்கு
முடமென இருந்து மனமதில் சரிந்து
முழுவதும் தீஎரிந்து
விடுமென வரிந்து கொளும்நினை வுரிந்து
விடு எழு வெற்றிபெறு
தருவது கரும்பு என மனம் விரும்பு
தரணியில் அன்பினொடு
பருகிடு அருந்து பலமெனும் மருந்து
பார்துணிவினை நெருங்கு
உருகிடு வருந்து உண்மையில் தவறு
உனதெனில் உடன் திருந்து
அருகிடு சரிந்து விழுவதி லிருந்து
ஆற்றலைப் பெறு அறிந்து
முதலினி லிருந்து உறுதியை விரும்பு
முழுதெனக் கவலைவிடு
மதமுடன் நடந்து மகிழ்ச்சியை இழந்து
மறுகுதல் பெருந்தவறு
அகமதில் மலர்ந்து அறமதை வரிந்து
ஆனந்தமே பருகு
விதமதில் பருந்து விண்வெளி பறந்து
விளங்குதல் போலுயரு
தினந்தினம் வருது தண்ணொளிநிலவு
தேய்வதும் வளர்கிறது
தனதெழில் ஒளிர்வு தயங்குவ தரிது
தகதக எனப் பொழிது
மனம்புது மகிழ்வு மலர்வது நிகழ்வு
மறந்திடு பழம்நினைவு
மாறுது உலகு , மாறுதல் இயல்பு
மறுபடி பெறு உயர்வு
கலகல சிரிப்பு காலையி னரும்பு
காண்பது கிழக்கிருந்து
புலர் கதிரொளிர்வு பெறுமுக மலர்வு
பெறுவதில் பெருமைகொள்ளு
சலசல ஆறு சிலுசிலு காற்று
சந்தண வாசமெழு
குலவிடு உணர்வு கொளும் பெருமகிழ்வு
கொண்டு நீ வாழ்வை யெடு