நீயே உன் போதிமரம்!
(எழுத்து.காமில் வெளியாகும் எனது 100 வது கவிதை இது)
என்ன செய்கிறாய்?
என் சமகால இளைஞனே!
என்ன செய்கிறாய்?
இங்கே
ஐந்தறிவுக் கழுதைக்கும்
ஆறறிவு மனிதனுக்கும்
வித்தியாசமே இல்லை!
ஐந்தறிவுக் கழுதை
அழுக்கு மூட்டைகளைச் சுமக்கிறது
ஆறறிவு மனிதனோ
மூட நம்பிக்கை
மூட்டைகளைச் சுமந்து அலைகிறான்!
பொறு!
ஆத்திரப் படாதே!
உழுவதற்காய்
கலப்பையின் மீது
மண்
மனத்தாபம் கொள்ளக் கூடாது!
உறைக்குள்ளேயே
உறங்கிக் கிடந்ததால்
நம்
போராட்ட மறவர்களின்
போர்வாள்களுக்கு
ரத்தம் பார்க்கும் போதெல்லாம்
நிததமொரு முறை
மயக்கம் வந்துவிடுகிறது.....
கண்களைத் திற!
கண்களை மூடி மூடிக்
கனவுகள்
கசந்துவிட்டன.
உன்
கனவுகளைக்
கலப்பைகளாக மாற்று....
வாழ்க்கையை உழுது
செழிப்பாக்கு.....
பூக்களிடம்
பேசுவதோடு நிறுத்திக்கொள்ளாதே!
முட்களின்
முகவரியும் அறி....
முட்களுக்கும்-உன்
முகவரியைக் கொடு....
உணர்ச்சிவசப் படாதே!
உளிகள்
உணர்ச்சிவசப் பட்டால்
சிலைகள் ஏது?
உன் பெற்றோர் ஈன்றெடுத்த
நீ
நீயல்ல.
உன்னை
உன்னால் மட்டுமே
ஈன்றெடுக்க
இயலும்!
உன்
உதயத்திற்குத்தான்
திசைகள் அத்தனையும்
தவம்கிடக்கின்றன....
உன்னைத்தான்
ஒவ்வொரு விடியலிலும்
கிழக்கு
சூரிய சூடம் ஏற்றி
ஆரத்தி எடுத்து வரவேற்கிறது!
வல்லவனுக்குப்
புல்லும் ஆயுதமாம்!
ஆனால் இங்கே
அத்தனை இளைஞர்களும்
ஆயுதங்களாகவே
அவதரித்திருந்தும் கூட
உபயோகப் படுத்திக்கொள்ளும்
உத்தி தெரிந்தவர்தான் இல்லை...
எரிந்துகொண்டே இரு!
எரிந்துகொண்டே இரு!
எவ்வளவு
எரிந்தாலும்
புகை கக்காத சூரியன் போல...
போதிமரம் தேடாதே!
உன் போதிமரம்
நீயென்றுணர்!
உன் கண்ணீரைத் துடைக்க
அடுத்தவர்
விரல்களுக்கு ஏன்
விண்ணப்பிக்கிறாய்?
உன் கையிலேயே
பத்து விரல்களும்
பத்திரமாக இருக்கும் போது...
அன்பனே!
கற்கள்
கோரிக்கை வைத்து
சிற்பி
செதுக்க வருவதில்லை!
சழக்குச் சமுதாயம்
தன்
அழுக்கைச் சலவை செய்யும் வரை
வழக்குத் தொடுத்துக்கொண்டே இரு!
ஆவேசத்தில்
அவிழ்ந்தால்
ஒரு மொட்டின் மலர்வு கூட
காற்றுக்கு
கசையடிகளாய் முடியாதோ?
உன் சிறகுகள்
அந்த
ஆகாயத்தையே
அடைகாக்கக் கூடியவை....
-------------ரௌத்திரன்