வாளினும் கொடியது

தென்மேற்குப் பருவ மழைக்காலம் அது . மழை எப்போது வேண்டுமானாலும்
கொட்டலாம் என்கிற கதியில் வானம் சற்று கருத்திருந்தது . எனது அறையின்
இடப்பக்கத்திலிருந்த மாந்தோப்பின் ஒரு பகுதி ஒரு சில மணி நேரத்திற்கு முன் தான்
உழப்பட்டிருந்தது . பரபர செம்மண்ணின் நொருக்கு வாசனையும் , மக்கிப் போய்
கிடந்த மாம்பூக்கள், மாவிலைகளின் வாசனையும் ஒன்றென கலந்து இன்ன வாசனை
தான் இது என்று நுகர்ந்து சொல்ல முடியாத அளவுக்கு என் அறையை தாண்டி
தள்ளியிருக்கிற தொழிற்சாலை செக்யூரிட்டிகளின் அறை வரையில் பரவிக் கிடந்தது .

அந்த தோட்டப்பகுதிகளை டிராக்டர் கொண்டு உழுகின்ற போது எழும்புகின்ற மண்வாசனை எப்படி சற்று தொலைவிலிருக்கிற வண்டல் நீர்த்தேக்கத்தின் கரைகளிலுள்ள மரங்களில் கூடுகட்டியிருக்கிற நாரைகளை சென்றடைந்து விடுகிறதோ தெரியவில்லை . ஒட்டுமொத்த நாரை கூட்டங்களும் இந்த மாந்தோப்புக்கு வந்து விடுகின்றன . உழுகின்ற சமயத்தில் மட்டும் டிராக்டர் ஒட்டூனரின் மீது எந்த வித பயமும் இல்லாது , ஈர்க்குச்சி கால்கள் நடுங்க அவர் அருகில் நின்று சில நாரைகள் பயணிப்பதுண்டு . சிலதுகள் டிராக்டரின் முன் முனையில் நின்று
கொள்ளும் . மண்ணை ஆழமாய் கிளறி கிளறி ஆக்ரோஷமாய் கலப்பைகள் நகர ,
மண்ணில் புதையுண்ட கிடந்த புழுக்களும் , பொரி வண்டுகளும் , நுண்ணுயிரிகளும்
வெளிக் கிளம்ப , அதன் பின்னாலலேயே தத்தி தத்தி பறந்து அவைகளை
விழுங்குவதில் மும்முரமாய் இருக்கும் பல நாரைகள் .

அந்தத் தோட்டத்திற்கு நடுவில் தொழிற்சாலை கட்டப்பட்டு சில வருடங்களே
ஆகியிருந்தன . அதற்கு முன்னால் முற்றிலும் மாமரங்கள் நிறைந்த தோட்டமாகவே
அவ்விடம் இருந்திருக்கின்றது . எழுபத்தி ஏழரை செவக்காட்டு நிலப்பகுதி அது .
மலையடிவாரம், சுற்றிலும் சிற்சில நீர்நிலைகள் என்பதால் மாமரங்களின் வளர்ச்சிக்கு
ஒன்றும் பஞ்சமில்லை . மாமரக்கன்றுகள் பயிரிடப்பட்ட சில காலங்களில் எல்லாம்
அத்தோட்டத்திற்கு பெயரறியாத பறவைகளும் , கருவேலங்குளக்காடுகளில் இருந்து
தண்ணீருக்காக தப்பி வருகிற மிளாக்களும் , கீரிகளும் , வினோதமான பாம்புகளும்
அங்கு வாசம் செய்ய ஆரம்பித்திருக்கின்றன . தொழிற்சாலை வந்த பிறகு இயந்திர
சத்தங்கள் அதிகமாக தங்களது சஞ்சாரத்தை நீர்த்தேக்க அடிவாரம் பக்கத்திற்கு
இவைகள் மாற்றிக் கொண்டு விட்டிருக்கின்றன. ஆரம்பத்தில் அந்த இடத்தில்
தொழிற்சாலை கட்டவேண்டுமென்ற என்ணமெல்லாம் அதன் உரிமையாளருக்கு
இருந்ததில்லையாம். அவரது பிள்ளைகள் தலையெடுத்த பிறகு , ஆலை கட்டுவதற்கு
ஏற்ப ஒரு சில மாமரங்களை வெட்டி நீக்கி விட்டு பிறகு ஆலையை
கட்டியிருக்கிறார்கள் என அம்மாந்தோப்பை பராமரித்து வருகிற முத்துவேல் , ஒருமுறை
கேஷியரிடம் உரம் வாங்குவதற்காக பணம் வாங்க வந்த போது என் அறை தேடி வந்து
சொல்லி விட்டு போனார்.

மதிய உணவிற்குப் பிறகு ஜன்னல் வழியாக மாந்தோப்பை பார்த்துக் கொண்டிருந்தேன் . இரண்டு மாமரங்களுக்கிடையே நடந்து வந்து கொண்டிருந்தார் அந்த செக்யூரிட்டி . இவர் மீது தானே நான்கைந்து நாட்களுக்கு முன்பு புகார் தெரிவித்திருந்தார் தலைமை செக்யூரிட்டி . அலுவலக ெருக்கடி காரணமாக ஞாபக இடுக்குகளின் மூலைக்கு ஒன்றிரண்டு நாட்களுக்கு
முன் தள்ளி வைக்கப்பட்டிருந்த அந்த செக்யூரிட்டி மீதான புகார் தூசி தட்டப்பட்டு என்
நிகழ்காலத் தளத்தில் விரிக்கப்பட்டது . ஜன்னல் வழியாக அவரை சைசையால் என்
அறைக்கு வருமாறு அழைத்தேன் .

' ம் ... உங்க பேரு நந்தன் தானே ... ? '
' ஆமா சார் ... '

' இங்க மில்லுல நீங்க வேலைக்கு சேர்ந்து பத்து நாள் தான் இருக்கும்ன்னு
நினைக்கிறேன் . செக்யூரிட்டி வேலையை ஒழுங்கா பார்க்குறதில்லைன்னு உங்க மேல
அதுக்குள்ள கம்ப்ளைண்ட் வந்திருக்கு . ஏன் ... உங்களுக்கு என்னபிரச்சினை ? '

' அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல சார் . போன வாரம் நம்ம மில்லு பிரதான
கேட்டூல ட்யூட்டி போட்டிருந்தாங்க எனக்கு . வழக்கமாக பதினோரு மணிக்கு நைட்
ஷிப்ட் வேலைக்கு பணியாட்கள் வந்த பிறகு மெயின் கேட்டூல வேற ஒண்ணும்
சொல்லிக்கிற மாதிரி வேலை கிடையாது . பொதுவா அந்நேரத்திற்கு பிறகு அங்க
வேலை பாக்குற செக்யூரிட்டிங்க எல்லாரும் கொஞ்சம் தூங்கிடுவாங்க . ஆனா நான்
தூங்காம வேலையை முடிச்சுட்டு நானெழுதி அனுப்பிய சில கடிதங்களின் நகல்களை எடுத்து வாசிச்சுக்கிட்டிருந்தேன். அந்தத் தருணத்தில் எங்க செக்யூரிட்டி ஆபிஸிலிருந்து இரவு ரோந்துப் பணிக்கு வந்தாங்க . என்னுடைய பையை வாங்கி அதிலிருந்த கடித நகல்களை எல்லாம் வாசிச்சுப் பார்த்தாங்க . அதைப் பத்தி தான் உங்ககிட்ட புகார் பண்ணியிருப்பாங்கன்னு நினைக்கிறேன் .... '

' அப்படி என்ன கடிதங்கள் அது ? யாருக்கு எழுதியவை அவை ? '
' இலங்கை அதிபர் ராஜபக்ஷேவுக்கு ... '
' யாருக்கு ? ' என மீண்டுமொரு முறை அவரைப் பார்த்துக் கேட்ட போது ,
' ஒரு நிமிஷம் . இதோ வந்துடுறேன் ... ' என்று வெளியேறினார்.

ஐந்து நிமிட இடைவெளிக்குப் பிறகு என் அறையினுள் நுழைந்த அவரது
கையில் ஒரு தோல் பை இருந்தது . அப்பையிலிருந்து சில பேப்பர்களை எடுத்துக்
என்னிடம் நீட்டிப் படிக்கச் சொன்னார் . இரண்டாக மடிக்கப்படிருந்த ஒரு கடிதமொன்றை எடுத்து விரித்துப் படிக்க ஆரம்பித்தேன் .

' சிங்களத்து நண்பர் மகிந்த ராஜபக்ஷேவுக்கு ....

வணக்கம் . தமிழ்த்தேசத்தின் தெற்கு மூலையொன்றில் அகதியாய் வாழ்ந்து
வருகின்றவனின் கடிதம் இது . இந்திய தேசம் சுதந்திரமடைந்ததற்கு பிந்தைய ஆறு
மாத காலத்தில் தான் ஆங்கிலேயர்களிடமிருந்து ஈழத்தீவிற்கும் சுதந்திரம் கிடைத்தது .
ஆனால் விடுதலை என்னவோ சிங்களவர்களுக்கு மட்டுமே கிடைத்தாக பறைசாற்றி
உங்களவர்கள் கொக்கரித்தார்கள் . விடுதலையடைந்ததற்கு பிந்தைய ஆண்டே
எங்களது குடியுரிமையை பறித்து அகதிகளாக்கினார்கள். தமிழீழத்திற்கென்று
ஆங்கிலேயர்கள் விட்டுச்சென்ற நிலங்களை அபகரித்து ஆக்கிரமித்துக் கொண்டு
தமிழினத்தின் ஆளுமையாக இருந்த எங்கள் மூதாதையர்களை
அடிமைப்படுத்தினார்கள் .

ஈழத்து மண்ணின் மைந்தர்கள் என்கிற முறையில் சிரிநிகர் சமான உரிமை
வேண்டிதானே ஆரம்ப காலங்களில் எங்கள் மூதாதையர்கள் உங்களது
வம்சாவளியினரிடம் அஹிம்சை வழியில் மன்றாடி நின்றார்கள் . ஆனால் தமிழினத்தின்
எந்தவொரு உரிமை ஔலமும் உங்கள் செவிப்பறைகளை எட்டாதவாறு அடிக்கடி உங்கள்
காதுமடல்களை நீங்கள் நீவி விட்டுக் கொண்டீர்கள் . ஒருகட்டத்தில் நீங்கள்
எங்களினத்தின் மீது வன்கொடுமையை கட்டவிழ்த்து விட்ட போது நாங்கள் தனி
தமிழீழம் குறித்து யோசிக்க ஆரம்பித்தோம் . ஈழத்து மண்ணில் தமிழீழச் செடியை
பதியம் போடுவதற்காக நாங்கள் ஆயதமேந்தி போராட வேண்டிய சூழ்நிலைக்கும்
உந்தப்பட்டோம்.

வெலிக்கடைச் சிறையில் ஐம்பத்திரெண்டு தமிழீழ கைதிகள் சித்ரவதை
செய்யப்பட்டு கொல்லப்பட்ட அன்றைய காலகட்டத்தில் தொடங்கப்பட்ட எங்களது
ஆயுத போராட்டம் இன்னும் முடிவுக்கு வந்த பாடில்லை . ஆனால் ஏனோ
தெரியவில்லை ...? கியூப விடுதலை புரட்சியையும், பாலஸ்தீனிய விடுதலை
புரட்சியையும் ஆராதித்த உலகளாவிய நாடுகள் தமிழீழ விடுதலை புரட்சியை மட்டும்
சரியான முறையில் அங்கீகரிக்க தவறியது. ஒருவேளை தமிழினத்தை ஒரு இனமாகவே
அந்நாடுகள் அடையாளம் கண்டுகொள்ளவில்லையோ என்னவோ ... ?! காலச்சக்கரம்
வேகமாக சுழன்றோடிய போதிலும் ஈழப்பிரச்சனைக்காக பற்றியெறிந்த தன்மானமுள்ள பதினேழு தமிழர்களின் உடல்களை கருக்கியெடுத்த செந்தீயின் கருகல்வாசனை கூட ஐ,நா.சபையின் வாசலை சென்றடையாதது எங்களது துர்பாக்கியமன்றி வேறென்ன ... ?!

சிங்களத்து கதாநாயகரே ... கடந்த தேர்தலை ஈழத்தமிழர்கள் புறக்கணித்ததன்
விளைவாக இலங்கையின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய திருவாள அதிபரே ...
சமீபத்திய காலகட்டத்தில் நீங்கள் ஒரு சர்வாதிகாரியாக உருமாறி இருக்கின்றீர்கள் .
ஈழப்போர் நடந்த போது அது குறித்த உண்மையான செய்திகள் அனைத்தையும்
உங்களது தணிக்கைக்குப் பிறகே ஈழப்பத்திரிக்கைகளில் வெளியிடச் செய்தீர்கள் .
அந்த வகையில் ஈழமக்களின் சுதந்திரத்தை மட்டுமல்ல , நடுநிலையான
ஈழப்பத்திரிக்கைகளின் ஒட்டுமொத்த சுதந்திரத்தையும் கூட நீங்கள் பறித்திருக்கிறீர்கள் .

ஈழப்போர் குறித்த உங்களது அரசின் செயல்பாடு குறித்தும் தங்களது
நிலைப்பாடு குறித்தும் தலையங்கம் எழுதி வைத்து விட்டு தன் உயிருக்கு ஆபத்து
இருப்பதாகவும் தான் இறந்து போன பிறகு அத்தலையங்கத்தை பத்திரிக்கையில்
வெளியிடுமாறும் சொல்லி விட்டுச் சென்ற ' சண்டே லீடர் ' பத்திரிக்கையின்
ஆசிரியரும், உங்களது முன்னாள் நண்பர்களிலொருவருமான லசந்த விக்கிரமதுங்கயின்
மரணத்தை கருத்தில் கொண்டு பார்க்கின்ற போது உங்களை ' ஹிட்லர் ' என்கிற ஒற்றை அடைமொழியிலேயே அழைக்கத் தோன்றுகிறது .

அந்நிய ஆதிக்க நாடுகளின் ஆலோசனைப்படி 1லகளாவிய ஊடகங்களை
கூட்டி ' ஈழத்து மண்ணில் வாழ்கின்ற தமிழ் மக்கள் என் உடன்பிறவா சகோதரர்கள் '
என தினமொரு அறிக்கையை அளித்து விட்டு நவீனரக ஆயதங்கள் துணை
கொண்டு அப்பாவி தமிழர்களை கொன்று குவித்தீர்கள் . ஒரே நாளில் ஒன்றரை
லட்சம் அப்பாவித் தமிழர்களை கொன்று குவித்து விட்டு தமிழகர்களுக்கெதிரான
புனிதப் போர் முடிவுக்கு வந்து விட்டதாக இலங்கை விமான நிலையத்தில் வைத்து
அறிவித்தோடு அம்மண்ணையும் முத்தமிட்டு அன்றைய தினம் இலங்கை முழுவதும்
தேசிய விடுமுறை அளிக்கச் சொல்லி பிரகடனப்படுத்திய உங்களது நடத்தையை எந்த
வன்கொடுமை பட்டியலின் கீழ் வரையறுப்பது ... ? !

' மீள்குடியேற்றம் ' என்கிற பெயரில் தமிழர்களை உயிருடன் சித்ரவதை செய்வதற்கென்றே நயவஞ்சக சிறைச்சாலை முகாம்களை உருவாக்கியுள்ள நவீன முசோலினியல்லவா நீங்கள் ... ? இலங்கையில் இனி சிங்களவனும், சிங்கள கலப்பினமும் மட்டுமே உயிர் வாழ
வேண்டும் என்கிற உயரிய லட்சியத்தோடு முகாம்களில் உள்ள எங்களின பெண்களின்
கர்ப்பப்பைகளை அரவமில்லாமல் உருவ ஆரம்பித்திருக்கிற தங்களிடம் கேட்பதற்கு
ஒற்றைக் கேள்வியொன்று மட்டும் என்னிடையே மிச்சமிருக்கிறது . ஈழத்தந்தை
செல்வாவின் ஆசியோடு தொடங்கப்பட்டு கால் நூற்றாண்டைத் தாண்டி தொடர்ந்து
கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கின்ற விடுதலை வேள்வியை அவ்வளவு எளிதில்
தங்களது ஆயதபலத்தால் அணைத்துவிட முடியுமா என்ன ... ?

அப்பாவி ஈழத்தமிழினத்தை தொடர்ந்து அழித்து வருகின்ற பணியில்
ஈடுபட்டிருக்கின்ற தங்களை நான் வன்மையாக கண்டிக்கிறேன் . அவ்வாறு தொடர்ந்து
நீங்கள் இதே போன்ற செயல்களில் ஈடுபட்டீர்களேயானால், பழங்கால பெருமைபுடைத்த
வரலாற்றையுடைய ஈழமண்ணில் இனி வருங்காலங்களில் செம்பருத்திகள் பூக்காது .
உதித்த சூரியன் மறையாது இருபத்திநான்கு மணி நேரமும் பொழிந்து சுட்டெரிக்கும் .
ஆழிப்பேரலைகள் அடிக்கடி எழும்பும் . ஈழத்து மண்ணில் பிசைந்து செய்யப்படுகின்ற
சிலைகளில் மறந்தும் கூட புத்தர் சிரிக்க மாட்டார் .
தமிழிலக்கியத்திற்கு பெரும் தொண்டாற்றிய ஆறுமுக நாவலரும், விபுலானந்த
அடிகளும், தனிநாயகம் அடிகளும் இனி அம்மண்ணில் மறுபிறவி எடுக்க
வாய்ப்பிருக்காது . வளர்பிறை பருவத்தோடு வளர்ச்சியை நிறுத்திக் கொண்டு
கூரிய தன் முனையொன்றை ஒடித்து தன்னை தானே குத்திக் கொண்டு பால்நிலா
தற்கொலை செய்து கொள்ளும் . நீங்கள் வியாபித்திருக்கின்ற வீடுகளிலுள்ள
அறைகளில் பிணவாடை வீசும் . நிலத்தடி நீர் குறைந்து மண்ணைத் தோண்டினால்
ரத்தம் பீறிடும் . மேகம் கடல் நீரை முகர்ந்து மழையாக பொழியாது . இறுதிகட்டத்தில்
மொத்த ஈழதேசமும் இருண்டு வறண்ட பாலைவனமாக உருமாறி உலக வரைபடத்தில்
அழிந்த போன தீவாக வருகின்ற காலங்களில் வர்ணிக்கப்படும் .

இப்படிக்கு
நந்தன் , தமிழீழ அகதி,
அகதிகள் முகாம் பிரிவு - 2
சுப்பிரமணியபுரம்
நெல்லை மாவட்டம், தமிழ்நாடு

' இந்தக் கடிதங்கள் எல்லாமே ராஜபக்க்ஷேவுக்கு எழுதியது தானா ? ' கடிதத்தை படித்து
முடித்து விட்டு அவரிடம் கொடுக்கும் போது கேட்டேன் .

' ஈழப்போர் முடிவுக்கு வந்துவிட்டதாக ராஜபக்க்ஷே அறிவித்த நான்கைந்து நாட்களுக்கு பிந்தைய நள்ளிரவொன்றில் தான் இந்தக் கடிதத்தை எழுதினேன் சார். இது மாதிரி இதுவரைக்கும் அவருக்கு முப்பத்திரெண்டு கடிதங்கள் எழுதியிருக்கின்றேன் . எங்க தமிழ் எழுத்துக்களை பார்த்தா வெறுப்புல என்னோட கடிதங்களை அவரு வாசிக்காம போயிருவாரோன்னு , எல்லாவற்றையும் சிங்களத்துலேயும் எழுதி அனுப்பியிருக்கின்றேன். எனக்கு கொஞ்சம் சிங்களமும் தெரியும் சார் . அவரு படிக்கிறாரோ இல்ல கடிதங்களை கிழிச்சு குப்பை தொட்டியில போடுவாரோ என்பதெல்லாம் எனக்கு ரெண்டாம் பட்சம் தான். ஆனா அவரால அகதியாக்கப்பட்ட என்னோட வெறுப்பையும் , கொதிப்பையும் நான் எப்படி வெளிக்காட்டுறது சார்..'

' நீங்க ஈழத்தமிழரா நந்தன் ? '

' ம் ... ஆமாம் . நானொரு ஈழ அகதி சார் . எங்க பூர்வாங்கமெல்லாம் இங்க தான் .
தேவர்குளம் பக்கமிருக்கிற மூவிருந்தாளி கிராமம் . தாத்தா காலத்திலேயே தோட்ட
தொழிலாளர்களாக வேலை பார்க்க அங்க போயிட்டோம் . அப்புறம் நிலைமைகள்
எல்லாம் மாறிப் போயி , தொண்ணூத்தி மூணுல நானும் எம் பையனும் அகதிகளாக
இங்க வந்து சேர்ந்துட்டோம் . முதல்ல வள்ளியூர் பக்கமிருக்கிற முகாம்ல இருந்தோம் .
அப்புறமா இப்ப பிரான்சேரி பக்கமிருக்கிற சுப்பிரமணியபுரம் முகாம்ல இருக்கோம் .
ஆரம்பத்துல முகாம் பஸ்ஸ்டாப்புல பெட்டிக்கடை வச்சிருந்தேன் . அப்ப
மேலச்செவலை சேர்ந்த ஒருத்தரு நண்பரா அறிமுகமானாரு . கிட்டத்தட்ட ரெண்டு
பேருக்கும் ஒரே வயசு . அன்னியோன்யமா பழகிகிட்டோம் . எனக்கு கொஞ்சம்
போட்டோ எடுக்க தெரியும் சார். அவரு ஒரு கேமரா வாங்கிக் கொடுத்தாரு . வீட்டு
கிரஹப்பிரவேசம் , சடங்கு வீடு , கல்யாண வீடு, கோவில் கொடைன்னு சின்ன சின்ன
விஷேசங்களுக்கு அதை வச்சு போட்டோ எடுத்துக் கொடுத்துக்கிட்டிருந்தேன் .
கணிசமா வருமானமும் வந்துச்சு .

அப்புறமா ரெண்டு , மூணு வருஷத்துக்கு முன்னாடி டிஜிட்டல் போட்டோ
வந்துச்சு . பிலிம் ரோல் போட்டு எடுக்குற நம்ம கேமராவுக்கு மவுசு குறைஞ்சு
போயிருச்சு . அதற்குப் பிறகு அவரோடு சேர்ந்து ரியல் எஸ்டேட் பண்ண
ஆரம்பிச்சேன். ஒண்ணும் ஒப்பேறலை . அதுல இருந்ததை இழந்தது தான் மிச்சம் .
அதற்கடுத்து நம்ம தமிழக அரசாங்கம் கொண்டு வந்த ' ஊருக்கு நூறு பேரு '
திட்டத்துல சேர்ந்து மண்ணை வெட்டிப் போட்டு ரோட்டை அகலப்படுத்துற வேலைக்கு
போக ஆரம்பிச்சேன். அப்ப தான் அங்க ஒருத்தரு நம்ம மில்லுல வேலைக்கு ஆளு எடுக்குறதா
சொன்னாரு . ஏதாவது வேலை கிடைக்குமான்னு இங்க வந்து பார்த்தேன் . வேலை
ஒண்ணும் காலி இல்லைன்னு சொல்லிட்டாங்க . செக்யூரிட்டி வேலைக்கு வேணா
ஆள் தேவைபடுது . அதுக்கு வர்றீங்களான்னு கேட்டாங்க. சரின்னு சொல்லிட்டு
வேலைக்கு வந்து சேர்ந்துட்டேன் . செக்யூரிட்டி வேலையெல்லாம் எனக்கு
புதுசு தான் . அப்புறம் இன்னொரு விஷயம் சார். நான் கொஞ்சம் கதையெல்லாம்
எழுதுவேன் . என்னோட கதைகளெல்லாம் நிறைய இதழ்கள்ல பிரசுரமாகியிருக்கு .
இந்தா பாருங்க சார் ... '

தோல்பையிலிருந்து சில இதழ்களை எடுத்து நீட்டினார் .
எல்லாமே பிரபலமான இதழ்கள் . அவர் குறிப்பிட்டுச் சொன்ன மாதிரி அந்த
இதழ்களில் பிரசுரமாகியிருந்த அவருடைய கதைகள் அனைத்தும் முத்திரை
கதைகளாகவும் , முதல் , மூன்றாம் , ஆறுதல் பரிசு பெற்ற கதைகளாகவும்
அடையாளப்படுத்தப்பட்டிருந்தன . சிறுகதைப் போட்டி சம்பந்தமாக இதழ்களில் வந்த
விளம்பரங்கள் , அதைத் தொடர்ந்து வெற்றி பெற்ற சிறுகதைகள் மற்றும் அதன்
ஆசிரியர்கள் பற்றிய அறிவிப்பு பட்டியல்கள் , பின்னர் முதல் பரிசு பெற்ற கதைகளில்
ஆரம்பித்து , இறுதியாக ஆறுதல் பரிசு பெற்ற கதைகள் வரை என அவரது கதைகள்
மட்டுமல்லாமல் அவ்விதழ்கள் நடத்திய சிறுகதைப் போட்டியில் பங்கெடுத்து
பிரசுரத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள் வரையில் அனைத்து
இதழ்களும் சார்ட் பேப்பர் போட்டு நேர்த்தியாக தைக்கப்பட்டிருந்தன . அட்டையில்
அந்தந்த இதழ்களின் பெயரும் , வருடங்களும் ஸ்கெட்ச் பேனாவால் அழுத்தமாக எழுதப்பட்டிருந்தன.

' பெரும்பாலான என்னோட கதைகளெல்லாம் பரிசு பெற்ற கதைகள் தான் .
பிரபலமான இதழ்கள் நடத்துற சிறுகதை போட்டிகளில் பங்கெடுத்துக்கிறதுல எனக்கு
கொஞ்சம் இஷ்டம் உண்டு சார் . இஷ்டம்ன்னு சொல்றதைக் காட்டிலும் அதை என்
கஷ்டத்தைப் போக்குற விஷயமாகத் தான் நான் எடுத்துக்கிட்டேன் . சாதாரணமா ஒரு
சிறுகதையை பத்திரிக்கையில பிரசுரிச்சாங்கன்னா அதிகபட்சமா இருநூறு, முந்நூறு
ரூபாய் வரை கொடுப்பாங்க . அதே சிறுகதை போட்டிக் கதைகளில் வெற்றி
பெற்றுச்சுன்னா , ரெண்டாயிரம் ரூபாயில ஆரம்பிச்சு பத்தாயிரம் ரூபா வரை நல்ல
கணிசமான தொகையா கிடைக்கும் .

அந்த இதழை பிரிச்சுப் பாருங்க . அவ்விதழ் வருஷா வருஷம் நடத்தி வருகின்ற சிறுகதைப் போட்டியில் என்னோட கதைக்கு முதல் பரிசு கிடைச்சுச்சு . அக்கதை பிரசுரமான பிறகு அப்பத்திரிக்கையோட ஆசிரியர் கூப்பிட்டு அனுப்பிச்சாரு . வாரா வாரம் வெளிவருகிற அவ்விதழோட இணைப்புல வெளியிடுகிற மாதிரி ஒரு தொடர்கதையை எழுதித் தரச் சொல்லி கேட்டாரு . என்னோட அகதி வாழ்க்கையை மையப்படுத்தி மூணு வாரத்துக்கான கதைப்பகுதிகளை எழுதிக்கிட்டு அவரைப் போய் பார்த்தேன் . என் முன்னாடி வைத்தே ரெண்டு வாரக் கதைகளை
படிச்சாரு . அவருக்கு கண்ணெல்லாம் கலங்கிப் போயிருச்சு. ரெண்டாயிரம் ரூபாயை
அட்வான்ஸா கொடுத்து தொடர்ந்து இருபத்திரெண்டு வாரங்களுக்கு வர்ற மாதிரி
தொடர்கதையா எழுதித் தரச் சொன்னாரு . அந்த வார இதழிலேயே என்னுடைய
தொடர்கதை இந்தத் தேதியிலிருந்து ஆரம்பிக்க போகுதுன்னு விளம்பரம் வேற
கொடுத்திட்டாரு . எனக்கு சந்தோஷமா இருந்துச்சு .

ஒரு மாத கால இடைவெளியில் , இருபத்திரெண்டு வாரங்கள் வருகிற மாதிரி தொடர்கதையை எழுதிக் கொடுத்தேன் . பதினோரு வாரங்கள் வெளிவந்துச்சு. அதற்கு பிறகு அவ்விதழிலேயே
பிரபலமான எழுத்தாளர் ஒருத்தரோட தொடர்கதை அதற்கடுத்த வாரத்திலேயே
வருதுன்னு விளம்பரம் வந்துச்சு . எனக்கு கொஞ்சம் பெருமையா இருந்துச்சு . நாம
வாசிச்சு ரசித்த ஒரு பிரபலமான எழுத்தாளரோட தொடர்கதை வெளிவருகிற அதே
இதழ்ல என்னோட தொடர்கதையும் வருதுன்னு . ஆனா அதற்கடுத்த வாரம் தான்
தெரிஞ்சிச்சு . என்னோட தொடர்கதையை நிறுத்திட்டு தான் அவரோட
தொடர்கதையை ஆரம்பிசிருக்காங்கன்னு . எடிட்டரை நேர்ல போய் பார்த்தேன் .

கடந்த ரெண்டு வாரத்துக்கு முன்னாடி பிரசுரமான என்னோட
தொடர்கதையோட ஒரு இடத்துல தமிழக அரசாங்கம் அகதிகள் விஷயத்துல எப்படி
பாரபட்சம் காட்டுறாங்கன்னு சில விஷயங்களை குறிப்பிட்டு எழுதினால
அப்பத்திரிக்கைக்கு தரப்பட்டு வந்த அரசு விளம்பரங்கள் நிறுத்தப்பட்டு விட்டதாக
ஆசிரியர் தெரிவித்தார். அவ்விளம்பரங்களை தான் இழக்க விரும்பவில்லை என அவர்
என்னிடம் தெரிவித்து விட்டு , பிரசுரமாகாமல் இருக்கின்ற கதைப்பகுதிகளுக்கும் சேர்த்து மொத்த பணத்தை கேஷியரிடமிருந்து பெற்றுக் கொள்ளுமாறு என்னை அவர் அறிவுறுத்த , பணம் எதுவும் வேண்டாமுன்னு சொல்லிட்டு , பதினோரு வாரங்கள் என் தொடர்கதையை அவரது இதழில் வெளியிட்டதற்கு நன்றி சொல்லிட்டு வந்துட்டேன் .

அந்த சமயத்துல எழுத்து மேலேயே சின்னதா ஒரு வெறுப்பு வந்து சில
நாட்களுக்கு ஒண்ணுமே எழுதாம இருந்தேன் . இப்படி தான் எழுதுவேன்னு
நானொண்ணும் கங்கணம் கட்டிக்கிட்டு எல்லாம் எழுத வரலை சார் .
அது ஒரு இயற்கையான நிகழ்வு தான் .
ஒண்ணுமே எழுதாம இருந்த அந்த சில காலங்களில் தான் எழுத்தோட
வன்மையை நான் தீவிரமா புரிஞ்சுகிட்டேன் . அந்த சமயத்துல ஒரு திருமண
வைபவத்தை போட்டோ எடுக்குறதுக்காக ராமேஸ்வரத்துக்கு போயிட்டு திரும்பி
வந்துகிட்டிருந்தேன் . சாயல்குடி பக்கம் வரும் போது பஸ்ஸை நிறுத்தி போலீஸ் சோதனை
நடந்துச்சு . என்னோட இலங்கை தமிழ் பேச்சை பார்த்துட்டு பஸ்ஸை விட்டி கீழே
இறக்கி என்னிய நேரா போலீஸ் ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு போயிட்டாங்க .
இரவெல்லாம் அங்க தான் இருந்தேன். காலையில இன்ஸ்பெக்டர் வந்தாரு . என்
பையிலிருந்த பொருட்களையெல்லாம் சோதனை பண்ணினாரு. என்னைப் பற்றி விசாரிச்சாரு. சொன்னேன். உங்ககிட்ட கொடுத்திருக்குற இந்தக் கதைகளெல்லாம் அந்தப் பையில இருந்துச்சு . எல்லாத்தையும் பார்த்தாரு ..
பிறகு ஹோட்டலுக்கு கூட்டிட்டு போயி சாப்பாடு வாங்கி தந்து ரொம்ப மரியாதையா
வாழ்த்துச் சொல்லி அனுப்பி வச்சாரு .

இந்த சம்பவத்திற்குப் பிறகு நான் என்னோட எழுத்தை அதிகமாகவே நேசிக்க
ஆரம்பிச்சுட்டேன் . அன்றைக்கு என்னோட அடையாளமா இருந்தது இந்த
எழுத்துக்கள் தானே சார் . என் எழுத்தை பார்த்து தானே அந்த இன்ஸ்பெக்டர்
என்னை மதிப்பிட்டாரு . எல்லா இதழையும் எடுத்துக்குங்க . வீட்ல கொண்டு போய்
நிதானமா வாசிச்சுட்டு கொண்டு வந்து தாங்க சார். அப்புறம் இன்னொரு விஷயம்
சார். என்னை பத்தியோ, என் வேலையை பத்தியோ உங்ககிட்ட இனி எந்த
புகாரும் வராது ... '

இரவில் வீட்டில் வைத்து நந்தனின் ஏழெட்டு கதைகளை வாசித்து முடித்த
போது புதியதொரு வெளியில் நிற்பதைப் போன்ற பிரமை ஏற்பட்டது . யாழ்ப்பாணப்
பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்கள் அவமானப்படுத்தப்பட்டது ,
தேவாலயமொன்றில் நடத்தப்பட்ட தாக்குதல் , பதுங்குகுழியில் நிகழ்ந்த ஒரு
பெண்ணினுடைய பிரசவம் , அகதிகளின் மனச்சித்ரவதை , போரில் பெற்றோர்களை
இழந்து பசிக்கொடுமையால் இன்னதென்று தெரியாமல் சாக்கடைத் தண்ணீரை
குடித்து பெண் குழந்தையொன்று வயிறு வீங்கி இறந்து போதல் , டிராக்டர் டயர்
வெடித்ததை மனித வெடிகுண்டு தாக்குதல் என தவறாக எண்ணி
முகாம்களிலுள்ளவர்களின் மீது இலங்கை ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூடு என
அவருடைய வாழ்க்கைச் சாயலை அப்படியே பிரதிபலித்தன அவரது கதைகள் .
அரைகுறை தூக்கமாகிப் போன அன்றைய தின இரவின் இடைவெளியில்
கனவொன்று வேறு வந்து விட்டது . ராணுவத் தாக்குதலுக்கு பயந்து பதுங்குகுழியில்
நான் பதுங்கி போய் கிடப்பதைப் போன்று கனவு ஒளிர , பீதியில் விழிப்பு தட்டிவிட்டது

காலையில் மில்லுக்கு வந்ததும் முதல் வேலையாக நந்தனை என் அறைக்கு
வரச்சொல்லுமாறு டைம் ஆபிஸிற்கு தகவல் சொன்னேன் . அவர் வேலைக்கு
வரவில்லையென எதிர்குரல் வந்தது . தலைமை செக்யூரிட்டியை கேட்டு அவரது
செல்போனில் தொடர்பு கொள்ள முயன்ற போது அது அணைத்து
வைக்கப்பட்டிருப்பதாக தகவல் வந்தது . நான்கைந்து நாட்கள் நகர நந்தனிடமிருந்து
எந்தத் தகவலும் இல்லை . அவரோட கதைகள் வேற நம்ம கையில இருக்குதே. அதை
அவரோட அடையாளமுன்னு வேற சொன்னாரே . அந்தச் சாயலை இழந்துட்டு
அவரால எப்படி நடமாட முடியும் . எங்க போனா என்ன... ஒரு வார்த்தை
என்னிடமாவது போன் பண்ணி சொல்லி விட்டு போயிருந்தால் நன்றயிருந்திருக்கும் .
ஏதோதோ யோசனைகள் எனக்குள் ஒட, மீண்டும் தலைமை செக்யூரிட்டியை அழைத்து
அவரை பற்றி விசாரித்தேன்.

' ஒரு தகவலும் இல்லை சார். அவன் வேலைக்கு வந்தாலும் அவனை எடுக்க
வேண்டாமுன்னு நிர்வாகத்துக்கிட்ட சொல்லிட்டேன். அவனோட போக்கு
கொஞ்சம் சரியில்ல சார் . நாலா மடிச்சு ரெண்டு மூணு பேப்பரை சட்டை
பாக்கெட்டுல எப்பவுமே வச்சிருக்கான். அப்பப்ப அந்தப் பேப்பர்களை எடுத்து
என்னத்தையோ கிறுக்கிக்கிறான் . மொத்துத்தல அவன் செக்யூரிட்டி வேலைக்கு
லாயக்கில்லாதவன் சார் ... '

மதிய நேரம் பதிவு செய்யப்படாத ஒரு நம்பரிடமிருந்து செல்பேசியில் ஒரு
அழைப்பு வந்தது .

' ஹலோ ... நான் செக்யூரிட்டி நந்தன் பேசறேன் . எப்படியிருக்கீங்க சார். என்னோட கதைகளையெல்லாம் வாசிச்சீங்களா ... இன்னிக்கு சாயங்காலம்
நம்ம மில்லுக்கு வெளில புதூர் பக்கமிருக்கிற
ஆலமரத்தடியில ஆறு மணிக்கு உங்களுக்காக காத்திருக்கிறேன்.
எங்கதைகளை கையோடு கொஞ்சம் எடுத்துட்டு வந்துடுங்க சார் . அங்க வச்சு அதையெல்லாம்
நான் வாங்கிக்கறேன் .. '

போடப்பட்ட ஒரு ரூபாய்க்கான நொடிக் கணங்களுக்குள் சொல்ல வந்த விஷயத்தை சொல்லி விட வேண்டும் என்கிற அவசர கதியில் அவர் பேசி முடித்ததை என்னால் யூகித்துக் கொள்ள முடிந்தது .

மாலை ஆறரை மணியளவில் ஆலமரத்தடியில் வைத்து அவரை சந்தித்த
போது முதல் நாள் பேசியதைப் போன்று இயல்பாகவே பேசினார் .

' எங்கதைகளையெல்லாம் படிச்சீங்களா சார் ... எப்படியிருக்கு .. ? '
' ம் ... நல்லாயிருக்கு . உங்களோட எல்லா கதைகளும் நீங்க அடைந்த
சோகங்களையும், எதிர்வினைகளையும் பிரதிபலிக்கிறதா அமைஞ்சிருக்கு . ஆமா ..
நாலைஞ்சு நாளா எங்க ஆளையே காணலை . வேலைக்கு கூட வரலை போலிருக்கு.
வெளியூர் எங்கேயும் போயிருந்தீங்களா .. எங்கிட்டயாவது ஒரு வார்த்தை சொல்லிட்டு
போயிருக்கலாம்மே ... '

' அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல சார் . கொஞ்சம் மிடுக்கும் , நிறைய
கடுமையுமா நடந்துக்கிற இந்த செக்யூரிட்டி வேலை எனக்கு சுத்தமா பிடிக்கலை சார் .
அதுவுமில்லாம அன்றைக்கு உங்க கூட பேசிட்டு வந்ததுக்கு பின்னாடி சாயங்காலமா
ஒரு சம்பவம் நடந்துச்சு . அன்னிக்கு எனக்கு பிரதான கேட் டியூட்டி . நம்ம மில்லு
எம்.டி.யோட கார் வந்துச்சு . எப்பவும் போல கார் கண்ணாடி முழுசா
ஏத்திவுடப்பட்டிருந்திச்சி . காருக்குள்ள யாரு இருந்தாங்கன்னு எனக்கு தெரியல .
எம்.டி.கார் அப்படிங்கிறதால நானும் வழக்கம் போல கேட்டை திறந்து விட்டுட்டேன் .
அதற்குப் பிறகு நம்ம எம்.டி , எங்க செக்யூரிட்டி ஹெட்டை கூப்பிட்டு அனுப்பி, நம்ம
மில்லுக்கு யார் வேணா , எப்ப வேணா வரலாம் போல . செக்யூரிட்டிகள் எந்த
சோதனையும் பண்றதில்லையான்னு கேட்டுட்டு , எல்லா செக்யூரிட்டிகளையும் கூப்பிட்டு
எச்சரிக்கை பண்ணுங்கன்னு சொல்லியிருக்காரு . எங்க தலைமை செக்யூரிட்டி என்னிய கூப்பிட்டு நடந்ததை பற்றி விசாரிச்சாரு . அன்றைக்கு எம்.டி கார்ல அவரு கூட அவரோட
நண்பரும் வந்திருக்காரு போல . எம்.டி.காரும் , அதோட நம்பரும் எனக்கு நல்லா
தெரியுங்கிறதால தான் நான் கேட்டை திறந்து விட்டேன்னு அவருகிட்ட சொன்னேன் .
என்னோட பேச்சு அவருக்கு கோபத்தை ஏற்படுத்திடுச்சு . என்னிய பார்த்து
சொன்னாரு .

' இப்படி நீ மில்லுக்கு வாரவேன் , போறவேன் எல்லாத்தையும் விசாரிக்காம
கேட்டை திறந்து விட்டேன்னா அப்புறம் நீ செக்யூரிட்டியே இல்ல . இப்படி
இன்னைக்கு கேட்டை திறந்து விடுற நீ , நாளைக்கு உங்க இலங்கையிலேந்து வர
அகதிகளுக்கும் , தீவிரவாதிகளுக்கும் கேட்டை விரிய திறந்து விட்டு அடைக்கலம்
கொடுக்க மாடேங்கிறது என்ன நிச்சயம் . உங்களுக்குன்னு தான் அரசாங்கம்
முகாம்களை அமைத்து கொடுத்திருக்காங்களே ... பேசாம அங்க கொடுக்கிறதை வாங்கி சாப்பிட்டுட்டு கெடக்க வேண்டியது தானே. இங்க வந்து வேலைக்கு சேர்ந்துட்டு எங்க 1யிரை போட்டு வாங்கறீங்க .... இந்த இடத்தை விட்டு முதல்ல வெளில போ ... '

' அவரு பேசினது சுற்றி நின்று வேடிக்கை பார்த்தவங்களுக்கு வேணுமின்னா ரொம்ப சாதாரணமாக இருக்கலாம் . ஆனால் என்னைப் பொறுத்தவரையில் வாளினும் கொடிய வார்த்தைகள் அவை. அவ்வார்த்தைகள் ஏற்படுத்தியிருக்குற ரணம் ஆறுவதற்கு இன்னும் பல நாட்கள் ஆகலாம் . ஒரு வேளை ஆறாமலேயே கூட போகலாம் . . அகதியா வாழ்றது எவ்வளவு கொடுமையான விஷயம் தெரியுமா சார் . அதை அனுபவித்தால் தான் உணர முடியும் . தூக்கமில்லாமல் அன்றிரவெல்லாம் யோசிச்சேன் . இந்த செக்யூரிட்டி வேலை நமக்கு சரிப்பட்டு வராதுன்னு முடிவு பண்ணி அப்படியே சொல்லிக்காம கொள்ளாம வீட்டூலேயே இருந்துட்டேன்.
.
சார் ... எனக்கொண்ணும் பெரிய கனவெல்லாம் கிடையாது . வாழ்க்கையோட விளிம்பு நிலை முனையில் நிற்கறவன் நான் . பல நாட்கள் பதுங்குகுழிக்குள்ள பதுங்கி கிடந்திருக்கேன் . பல ரத்த உறவுகள் கண்ணு முன்னாடி செத்து மடிஞ்சதை பார்த்திருக்கேன் . என்னுடைய இந்த அகதிப் பிறவியை நான் துர்பாக்கியமா தான் நினைக்கறேன். இன்னும் நாலஞ்சு மாசத்துல நான் இலங்கைக்கு போயிட்டு வரலாம்ன்னு நினைச்சிருக்கேன் . அங்க முகாம்ல என் மகளும் , மருமகனும் இருக்காங்க . அங்க போயி அவங்களை ஒரு தடவை பார்த்துட்டு வரணும்ங்கிறது
தான் இப்போதைக்கு என் நினைப்பெல்லாம். இதோ ... என மகன் டிகிரி முடிக்க போறான் . அகதி கோட்டாவுல ஒரு தற்காலிக அரசாங்கத்துறை வேலையை அவனுக்கு ஏற்பாடு பண்ணி கொடுத்திருக்கார் என்னோட நண்பர் . நானும் பழைய படி என்னோட கேமராவை தூசி தட்டி எடுத்து வச்சிருக்கேன் . என்னோட மூணு வேலை வயித்துப்பாட்டை அது தீர்க்கும்ங்கிற நம்பிக்கை எனக்கிருக்கு . அப்புறம் நேரமாயிடுச்சு சார் . நான் கிளம்பறேன் ..

அவரை எப்படி ஆசுவாசப்படுத்தலாம் என்று யோசிக்க ஆரம்பித்தேன்.

எழுதியவர் : வே.முத்துக்குமார் (20-Apr-12, 3:17 pm)
சேர்த்தது : narpavi2004
பார்வை : 248

மேலே