[202 ] இருண்ட பூமியில் இருந்து ....
இருண்ட பூமியில்
இருந்து பாடுவேன்!
எங்கே போயின
எமது நிலங்கள்?
எந்த அலைகள்
இவைகளை விழுங்கின?
பசுமை மரங்கள்
பதுங்கிய குயில்கள்
சுற்றிய தென்றல்
சுழன்ற பூமணம்
விசும்பி அழாதே
விட்டவோ உயிர்களை ?
எங்கே போயின
எமது நிலங்கள்?
எந்த அலைகள்
இவைகளை விழுங்கின?
இந்தப் பதிவுகள்
யார்கால்ச் சுவடுகள்?
எங்கு மரித்தனர்
எம்,இளம் பிஞ்சுகள்?
எக்கருக் குழிக்குள்
இறந்த,எம் குஞ்சுகள்?
எங்கள் வியர்வை
இணைந்த மண்ணினை
வந்த,மே கங்கள்
வடித்த நீருடன்
கங்குல் பகலாய்க்
கலந்து எழுப்பியே
கண்ட நகரமும்
நரகமாய் ஆனதேன்?
காலைச் சுற்றிய
பாம்புகள் எம்மையேன்
கடித்தன? விஷத்தைக்
கக்கின? கழுத்தை
நெறித்தன? நிகழ்ந்ததேன்?
எங்கே போயின
எமது நிலங்கள்?
எந்த அலைகள்
இவைகளை விழுங்கின?
ஓடிய உயிர்களைத்
தேடுவார் வருவரோ?
மூடிய பயிர்களை
முளைக்கவைப் பார்களோ?
ஒளிந்த நிலவினை
உருக்கொளச் செய்வாரோ?
சிலிர்த்த காற்றினைச்
சிறைவிடு விப்பரோ?
எத்தனை யுகங்கள்
இவற்றினை எண்ணியுள்
ரத்தக் கண்ணீர்
ரகசியப் புலம்பல்
கொண்டு,அடை காக்கவோ?
கண்ட,எம் கனவுதான்
கருக்கொளப் போகுமோ?
எண்ட நிலமும்
இனிஎழப் போகுமோ?
எண்ட குலமும்
இனிநலம் காணுமோ?
எங்கே போயின
எமது நிலங்கள்?
எவர்வந் தவற்றை
இனிமீட் டிடவோ?
-௦-