உண்ணாமலை ஆச்சி

பனம்பழம் பொறுக்கப்போய்
பழம் போல படுத்திருந்த
பேய் பார்த்த கதை ...!

நட்டநடு ராத்திரியில்
பத்து நரியுடை கூட்டத்தை
ஒற்றை வேல்கொண்டு
விரட்டிய கதை ...!

எங்க ஊர்க் காட்டாத்தில்
வெள்ளம் பெருக்கெடுத்து
ஊர் மிதந்த கதை..!

வெள்ளாமை காப்பாத்த
விடிய விடிய உறங்காம
காவலுக்கு பயத்தோட
படுத்திருந்த கதை...!

ஊர் விட்டு ஓடிய காதல் கதை
தற்கொலையில் முடிந்த காதல் கதை..!

சாதிக் கலவரத்தால்
ஏழுகொலை விழுந்த கதை
பெத்தமவன் தன்னை
பேணாம போன கதை..!

நல்லவனா வாழனும்
பொய்சொல்ல கூடுதுன்னு
சொன்ன நன்னெறி கதை..!

இப்படி கதை கதையாச் சொல்லும்
என் தாயைப் பெத்த
உண்ணாமலை ஆச்சி
சக்கரை நோய் வந்து
செத்துப் போச்சி..!

இன்னும் ஆச்சியின்
அந்த அனுபவக் கதைகள்
வளமாய் என் இதயத்துள்
வாழ்ந்து கொண்டு தானிருக்கின்றன...!

ஆச்சி சொன்ன
அந்தக் கதைகள்
பண்பு வளர்க்கும்
நம்மிடையே அன்பு வளர்க்கும் ..!

இனிவரும் சந்ததிக்கு
இப்படிப்பட்ட ஆச்சிகள்
கிடைப்பார்களா என்பது கேள்விக்குறியே..!

ஆச்சிகளும் பாட்டிகளும் நம்
வாழ்க்கையில் கிடைத்த
வரப்பிரசாதங்கள்
என் உண்ணாமலை ஆச்சி போல...!

சுட்டி டிவி பார்க்கும் குழந்தைகளே
உங்கள் பாட்டிகளிடம் பழகுங்கள்
பண்பு கதைகள் கற்றுத்தரும் அவர்கள்
பழுத்த பல்கலைக்கழகங்கள்...!

எழுதியவர் : ஆண்டனி (21-Apr-12, 1:11 pm)
சேர்த்தது : Paul Antony
பார்வை : 239

மேலே