[203 ] எழுத்துலகு ஆளும் இளைய கவிஞரே !
எழுத்துலகு ஆளும் இளைய கவிஞரே !
எழுந்து நீர் வாரும்! இருந்துநாம் பேசுவோம்!
இளைஞிகள் கூந்தல் வலைகளை விடுத்து,இவ்
வலைக்குள் வாரும்! தொலைவினில் பாரும்!
உலகினுள் நடப்பவை ஓரா யிரமே !
தலைகளைக் கவிழ்த்து முலைமடி தேடி
நிலைகுலைந்து இன்னும் நிற்பது சரியோ?
கொலைவெறிப் பெட்டிகள் கூட்டிய சரிவோ?
உலையுள் விழுந்த ஊசியாய் மக்கள்
உருக்குலை கின்றார்! தெருக்களைப் பாரும்!
உமதுநற் கைகளில் கருக்கொளப் போகும்
நறுக்கெனும் விதைகளில் சுருக்கென முளைக்கும்
சுதந்திரம் நம்பிச் சுருண்டவர் கிடக்கிறார்!
நம்பினோர் வீணே வெம்பியே வீழ
விட்டிட வேண்டாம்! சட்டென வரும்!
அண்ணா ஹசாரே ! அவர்வயது என்ன?
தன்சுகம் அவரும் தவிர்த்து,எழ விலையோ?
கல்வியூ டகங்கள் கைகொடுத் திடட்டும் !
மெல்லவே அவர்பெயர் சொல்லிடும் வண்ணம்
வல்லமைச் சபைகள் வகுத்தெழ வாரும்!
நல்லன நடக்கும்! நடுநிலை எடுப்பீர்!
வேளையை அறிவீர்! விழிப்புடன் எழுவீர்!
நாளை,உம் நாளே! கோழைநீர் அல்லவே!
எழுத்துல காளும் இளைஞரே !
எழுந்திடும்! வாரும்! எழுக,பா ரதமே!
-௦-