இவரால் நானின்று ....
கபால வீதிகளுக்குள்
வெள்ளைவண்டிகளின்
ராஜபார்ட்டையை மாற்றி
பிடியரிசிபள்ளி மூலம்
தமிழ்வண்டிகளில் பரட்டைத்தலைகளை
பயணிக்க வைத்த படிக்காத மேதை
உச்சாணிக்கொம்பில்
உயர்குடிகளின் தன்னுரிமைக்கனிகளாய்
ஆங்கில முட்களோடு இருந்த கல்வியை
தனது மதியஉணவு எனும்
துரட்டிக்கோலால்
தமிழ்பாத்திரத்தில் பறித்துப்போட்ட
தவ தலவைன்
கால்களை மக்கள் பயணத்திற்கு,
விரல்களை திட்டம் தீட்டிடவும்,
எண்ணங்களை தமிழக ஏற்றத்திற்கு,
கனவுகள்,காரியங்கள் யாவும்
ஏழ்மை நீக்கிடவும் என
வாழ்ந்த –
சொத்துசேர்க்காத ராஜா
தறிகளின் யாகத்தில்
விளைந்த துண்டு
அவரால் அழகு பெற்றது
கரிய மேகத்தின்
வெள்ளிச்சரிகையானது
அதுவே தேசத்தின் குறியீடானது
மடித்த துண்டில் மடியாமல்
கிடந்தது ஏழைகளுக்கான திட்டங்கள்
பருத்திநூல் செய்த நோன்பு
அவர் தோளின் துண்டாகி
ஊஞ்சலாடியது;
உயிர் ஊசலாடும் ரஷ்ய குளிருக்கு
அதுவே போர்வையாகியது
விடைகள் அறிந்து திட்டம் தீட்டியோர்
மத்தியில்,
வினாக்களை எழுப்பி
செயலாக்க வழி கண்டு
புத்தொளிர் தமிழகம் தந்த
மக்கள் முதல்வன்
ஏழையாய் பிறந்து
ஏழ்மையை உணர்ந்து
எளிமையில் ஊறியதால்
ஏழைகளின் ஏற்றமிகு வாழ்வுக்கு
ஏணிப்படி அவர்
அரசியலில் அகப்பட்டதை
சுருட்டாத விரிவானம் அவர்
சுகப்பட்ட வாழ்வு காணாத
அரசியல் துறவி அவர்
காரியம் பார்த்து
இளமையை இழந்து
கடமை ஆற்றியதால்
இமயமாய் உயர்ந்து நிற்கிறார்
இன்றும்
இவரால் நானின்று (சு)வாசிக்கிறேன் .