ஓசையற்ற புலம்பல்கள்.....
நித்திரை பொழுதின் குளிர்ச்சியில்
சித்திரையின் வெப்பம் இதயத்தினுள்
சுடாத நிலவும் சுட்டுவிட்டு நகர
சுடர்விழியோனின் நினைவுகள்
சுகமாய் நெஞ்சுக்குள்!
துக்கத்தை மறக்க தூக்கத்தை
தேடினால் ஏக்கமே வாழ்க்கையாய்
இலக்கணங்கள் மீறிய உறவுகள்
எல்லையில்லாப் பிழைகளுடன்.....
ஓசையற்ற எனது புலம்பல்கள்
உன் மௌனங்களுடனேயே
தொடர்ந்து நகர்வதால்
பகலிற்கும் இரவிற்கும் - இங்கு
வித்தியாசமில்லாமல் போகிறது!
இறக்கி வைக்கமுடியாத
சிலுவையை சுமப்பதினால்
சுகவீனமான தருணங்களும்
சுகமாகவே கழிகின்றன.....
உனது
எண்ணங்களின் மீது
பாடலொன்றை
புனைந்து கொண்டிருக்கின்றேன்
காலங்களை
காதல் செய்யச் சொன்ன
உன்னிடம்
காதலு(லி)க்கான அர்த்தத்தை
கேட்கத் தவறிவிட்டேன்....
ஆனபோதும்
உன் மொழிபெயர்ப்புகள்
எல்லாம்
கவித்துவம் நிறைந்தே காண்பதால்
என் செவிகள் மட்டும்
சேதாரமின்றி இருக்கின்றன!
ஒரு கணையாழியால்
இழந்த வாழ்க்கையை
சகுந்தலையும்,
புத்துயிரை
சீதையும் பெற்றனர்!
வாழ்க்கையை தீர்மானிக்கும்
கணையாழியின் நிலைமை
இங்கு காணாத தூரத்தில்
எஞ்சி நிற்பதோ
குழப்பங்களும், ஏமாற்றங்களுமே....