மழை எனக்குப் பிடிக்கும்.! பொள்ளாச்சி அபி

மழையை எனக்கு மிகவும் பிடிக்கும்..!
மனிதர்களுக்கு அதுகாட்டும் விளையாட்டும் கூட,
கறுப்பென்றும் வெளுப்பென்றும்
உயர்ந்தவன் தாழ்ந்தவனென்றும்
மனிதன் பிரித்ததையெல்லாம்
ஒரே சமயத்தில் நனைக்கிறது
ஒரே மரத்தின்கீழ் இணைக்கிறது மழை.!
ஆட்சித் தலைவரோ
அதிகாரமிக்க அமைச்சரோ
காவல்துறைத் தலைவரோ
யாருடைய அதிகாரத்திற்கும்
உத்தரவிற்கும் கட்டுப்படாததது
உத்தரவிட்டாலும் கேட்காதது மழை.!
உலகை அச்சுறுத்தும் இராணுவம்
எம்மிடமுள்ளது என்பவனையும்
தனது அதிகாரத்தினால்
ஒடுக்கி உட்கார வைக்கிறது.
வல்லரசு நாடென்றாலும்
வீட்டோ பவர் அதனிடத்தில்
செல்லுபடியாகாது..!
அதனை பொழியாதே என்று
நிறுத்தவும் முடியாது..!
கோவில் சிலையென்றாலும்
தேவாலய சிலுவையென்றாலும்
மசூதியின் கோபுரமென்றாலும்
இடியையும்,மின்னலையும் இறக்கிவிட
எப்போதும் பயப்படுவதில்லை மழை.!
அச்சுறுத்தும் எல்லா அதிகாரங்களிலிருந்தும்
சகலவிதமான அடக்குமுறைகளிலிருந்தும்
விடுதலை வேண்டுமொரு,
அடங்க மறுக்குமொரு
புரட்சிக்காரன் போல இருக்கிறது மழை.!
அதனால்..,
மழையை எனக்கு மிகவும் பிடிக்கும்..!