இந்த தேசம் மிகச் சிறியது.....
ஒரு உருப்பெருக்கிக் கண்ணாடியின்
வழியாய் பார்க்கப்படும்
"அமீபா" போலிருந்தது
உலக வரைபடம்.
வெறும் சிக்கல்களே இருந்த
அதில்-
கையூன்றித் தேடத் துவங்கினேன்
எனது நாட்டை.
கண்களின்...
சுருங்கி விரிந்த
நெடுநேரப் பயிற்சிக்குப் பின்னர்
ஒரு மூலையில் கண்டு பிடித்தேன்...
உலர்ந்த திராட்சை அளவே இருந்த
எனது சொந்த நாட்டை.
மேலும் முயன்று...
அதில்-
ஊசி முனை அளவே இருந்த
எனது ஊரை அனுமானித்தேன்.
அந்த ஊசியை அகழ்ந்து...
தேடத் துவங்கினேன்..
எனது வீட்டை., நதியை., என்னை.,
எல்லாமும்.
நடுவில்...
யாரோ...என் கவனம் கலைத்துவிட..
எனது நாட்டை மீண்டும்
தேடத் துவங்கினேன்...
அதை விடப் பெரிய
எனது கண்களால்.