எது சொர்க்கம்

ஈன்றெடுத்த
நொடி முதலில்
தன் மலரின் அழுகை - அது
அன்னையின் சொர்க்கம் ...

அந்நொடி போய்
அடுத்த நொடி - முதல்
அழுகையின்றி சிரித்திருக்க
அதுவே தன்
சொர்க்கம் என்றாள்

ஆற்றில் வரும்
வெள்ளம் கண்டால்
உழவு செய்த உள்ளத்திற்கு
அதுவே சொர்க்கம் ..
நட்டு வைத்த
நாற்று எல்லாம்
நங்கை போல்
நாணம் கொண்டால் - அந்த
வெள்ளம் கொஞ்சம்
தஞ்சம் கொண்ட
அணையே சொர்க்கம்..

கூட்டமாக இன்பமெல்லாம்
கூடி நின்ற போதிலும்
வாட்டம் கண்ட வயிறு - அது
வாழைப்பழம் கூட
சொர்க்கம் எனும்...

கல்வி கற்கும்
கடமையெல்லாம்
காலையிலே முடிந்து விட்டால்
தொடர்ந்து வரும்
மாலையில்
தொல்லையின்றி விளையாட
அதுவே சொர்க்கம்

காதல் செய்த
பெண்ணவளை
கைப்பிடித்தல் சொர்க்கம் - என
காதல் செய்து
கண்டு கொண்ட
காளையவன் சொல்லட்டும்...

கைப்பிடித்தப்
பெண்ணவளை
காதலித்துப் பாருங்கள் - உயிர்க்
காற்று உள்ள
காலம் மட்டும்
காதல் உம்மைக்
காதல் செய்யும் ...
காதல் உள்ள
காலம் மட்டும்
வாழ்க்கை
அது
சொர்க்கமாகும் ...!

எழுதியவர் : கலாப்ரியன் (8-May-12, 3:43 am)
சேர்த்தது : kalapriyan
Tanglish : ethu sorkkam
பார்வை : 850

மேலே