தீரன் சின்னமலை

தீரன் சின்னமலை

எந்த ஒரு புல்லாங்குழல் உங்களுக்கு பிடித்தமான நல் இசையை நல்குகிறதோ, அந்த புல்லாங்குழல் முன்பு கத்தியினால் துளையிடப்பட்டு, துன்பத்தை அடைந்தது என்பதை நாம் மறந்து விடக்கூடாது. அதைப்போல, நாம் இன்றைக்குச் சுதந்திரக்காற்றை சுவாசிப்பதற்குக் காரணம், அடிபட்டு, மிதிபட்டு, இரத்தம் சிந்தி, போராடி தன் இன்னுயிரையும் தாயகத்திற்காக, தியாகம் செய்த வீரமறவர்கள் தான், என்பதனை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

அந்த வரிசையில் தீரன் சின்னமலையும் ஒருவர். ஈரோடு மாவட்டம் காங்கேயம் வட்டம், மேலப்பாளையத்தில் இரத்தினசாமி, பெரியாத்தா தம்பதியினருக்கு ஐந்து ஆண்மக்களில் இரண்டாவது மகனாக 18-ஆம் நூற்றாண்டின் இறுதியில் 17.04.1756 ஆம் நாள் பிறந்தவர் தீர்த்தகிரி. தன்னுடைய இளம் வயதில் போர் பயிற்சி, வில்வித்தை, மல்யுத்தம், வாள் பயிற்சி, சிலம்பப்பயிற்சி என அனைத்திலும் நன்கு தேர்சிபெற்று மாபெரும் மள்ளனாகத் திகழ்ந்தார்.
ஒருநாள் மைசூர் மன்னன் ஹைதர் அலியின் சிப்பந்திகள், தாராபுரம் பகுதிகளில் வரிவசூல் செய்த பணமூட்டைகளை அறச்சலூர், மேலப்பாளையம் வழியாக சங்ககிரி கோட்டைக்கு எடுத்துச் சென்றுகொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக குதிரையில் வந்த தீர்த்தகிரி, அவர்களிடம் “யார் நீங்கள்? இது என்ன மூட்டைக்குள்? என்று வினவ, “இது தாராபுரம் பகுதிகளில் வரிவசூல் செய்த பணங்கள். சங்ககிரி கோட்டையில் உள்ள திவான் மீராசாஹிபுக்கு கொண்டு செல்கிறோம்” என்று வந்த சிப்பந்திகள் கூறி நின்றனர்.

உடனே தீர்த்தகிரி அந்த பணமூட்டைகளைப் பிடுங்கிக்கொண்டு, யார் வீட்டுப்பணம் யாருக்கு? எங்கள் நாட்டுப்பணம் எம் மக்கள் தேவைக்குத்தான், அதை உன் திவானிடம் போய் சொல் என்று கூறினார். உடனே மைசூர் சிப்பந்திகள் “ எசமான்.. அந்த திவான் எங்களை கொன்றுவிடுவார். நாங்கள் என்ன பதில் சொல்வது” என கேட்க, “தெற்கே சிவன்மலைக்கும் வடக்கே சென்னிமலைக்கும் இடையில் ஒரு சின்னமலை பறித்துக்கொண்டதாகச் சொல்” என்றார். இந்த நிகழ்விற்குப்பிறகு தான், தீர்த்தகிரி “சின்னமலை” என்ற சிறப்புப் பெயரோடு அனைவராலும் அழைக்கப்பட்டார். பிடுங்கிய பணமூட்டைகளை ஏழை எளியவர்களுக்கு வாரி வழங்கினார். “வெள்ளையனுக்கு மாத்திரமல்ல, வேறு எவனுக்கும் வரி செலுத்த மாட்டோம். எங்கள் வரிப்பணம் எங்கள் பூமியின் நலனுக்காக மாத்திரமே செலவிடப்படவேண்டும்” என்று அன்றைக்கே கம்யூனிசத்தையும், சோஸலிசத்தையும் கையில் எடுத்தவர் மாவீரன் தீரன் சின்னமலை என்றால் மிகையல்ல.

மீண்டும் வரிப்பணம் வசூலிக்கப்பட்டு சங்ககிரிக் கோட்டைக்கு எடுத்துச்செல்லப்பட்டது. இதனை அறிந்த சின்னமலை, அங்கு வந்து அதனைப்பிடுங்கி மீண்டும் ஏழைகளுக்குக் கொடுத்தார். இதனை அறிந்து சங்ககிரி திவான் கடுங்கோபம் கொண்டான். நூறு பேர் கொண்ட குதிரைப்படையை மேலப்பாளையம் அனுப்பி சின்னமலையை கைது செய்து வரும்படி ஆணையிட்டான். சின்னமலை மற்றும் கருப்பசாமி சேர்வை, வேலப்பன் ஆகியோர் இணைந்து திவான் அனுப்பிய குதிரைப்படையை திணறடித்துப் புறமுதுகிட்டு ஓடச்செய்தனர்.

07.012.1782 இல் ஹைதர் அலி மறைவிற்குப்பின்னால், மைசூர் சீரங்கப்பட்டிணத்தில், திப்புசுல்தான், தன் ஆட்சியை செலுத்தத் துவங்கினார். ஆங்கிலேயர்கள் அவருக்கு தொல்லை கொடுத்தார்கள். அந்த நிலையில் சின்னமலையின் வீரத்தையும் தீரத்தையும், கேள்வியுற்று ஆங்கிலேயர்களை எதிர்ப்பதற்குப் படைபலம் கோரினார். சின்னமலையும் மறுப்பேதும் கூறாமல் தன் கொங்கு நாட்டிலிருந்து 10,000 இளைஞர்களை திரட்டிக்கொண்டு, மைசூர் சென்றார். அங்கு சித்தேஸ்வரம், மழவல்லி, சீரங்கப்பட்டிணம் போன்ற இடங்களில் நிகழ்ந்த வெள்ளையர்களுக்கு எதிரான போர்களில் இந்தப்படை வெற்றியை கண்டது. இதற்கு சின்னமலையின் பங்கு தான் மிகச்சிறந்ததாக கருதப்பட்டது. அதுமாத்திமல்ல, வெள்ளையர்களை வெற்றி கொள்வதற்காக ஐரோப்பிய மாவீரன் நெப்போலியனிடம் படைபலம் கேட்டு, திப்புசுல்தான் அனுப்பிய தூது குழுவில், சின்னமலையின் மெய்க்;காப்பாளன் கருப்பசாமிசேர்வை இடம்பெற்றிருந்தார் என்றால், தீர்த்தகிரியின் மீது, திப்புசுல்தான் எவ்வளவு மதிப்பும் மரியாதையும் நம்பிக்கையும் வைத்திருந்தார் என்பது புலனாகும்.

அதுமாத்திரமல்ல, சின்னமலையின் படைக்குழுவில் அனைத்து இனத்தவரும் இடம் பெற்றிருந்தனர். வேளாளர்களும், நாயக்கர்களும், வேட்டுவர்களும், பாளையக்காhரர்களும், ஓமலூர் சேமலைப்படையாட்சியும், கருப்பசாமிசேர்வையும், பத்தேமுகமதுஉசேனும், முட்டுக்கட்டை பெருமாத்தேவனும், சென்னிமலைநாடாரும் இடம் பெற்று முக்கிய பொறுப்பில் இயங்கி வந்தனர். இதனால் அவர் ஓட்டுமொத்த சமூக நலத்திற்காக பாடுபட்டாரே தவிர, சாதீயத்திற்கு என்றைக்குமே துணைபோனது இல்லை என்பதும், அன்றைய காலகட்டத்தில் சாதீயம் என்பது தேவைப்படவில்லை என்பதும் புலனாகிறது.

ஆனால் இன்றைக்கு, அந்த மகத்தான மாவீரன் சின்னமலையையும்,
ஆங்கிலேயனுக்கு கப்பம் கட்ட மறுத்த நெல்லை தந்த சிங்கம் வீரபாண்டிய கட்டபொம்மனையும்,
கட்டபொம்மனை அவமானப்படுத்திய வெள்ளைக்காரனின் தலையை தன்கூர் வாளால் சீவி எறிந்தாரே மாவீரன் சுந்தரலிங்கத்தையும், எதிரிகளுக்குப் பேரிடியாய் இருந்து நாட்டுமக்களை காத்த மாவீரன் பெரும்பிடுகையும், ஆங்கிலேயனுக்கு எதிராக கப்பலோட்டிய வ.உ.சி யையும்,
தன் வாழ்நாள் முழுதும் சமூக ஒற்றுமைக்காக, வள்ளலாரின், விவேகானந்தரின் வழியொற்றி வாழ்ந்து மறைந்தாலும் இன்றும் நம் நெஞ்சமெல்லாம் நீக்கமற நிறைந்திருக்கிற முத்துராமலிங்கப் பெருமகனாரையும், எளிமையாக வாழ்ந்து, அனைத்து மக்களும் பயன்பெரும் வகையில் தொழிற்சாலை ஏற்படுத்தி, பட்டி தொட்டியெல்லாம் கல்விக்கூடம் தந்த பச்சைத்தமிழர் பெருந்தலைவர் காமராசரையும்,
அன்பையும், அஹிம்சையையும் போதித்த வடலூர் வள்ளல் பெருந்தகையையும்,
கண்ணியத்துக்குரிய காயிதேமில்லத்தையும்,
அவ்வளவு ஏன்… காக்கும் கடவுள் என்று வருணிக்கப் படுகிற மகாவிஷ்ணுவையையும் சாதீய மற்றும் அரசியல் வளையத்துக்குள் கொண்டு வந்து, அவர்களின் புகழுக்கும் கண்ணியத்திற்கும், தியாகத்திற்கும், களங்கம் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

மைசூர் மன்னன் திப்புசுல்தான் மரணமடைந்ததற்குப்பின்னால் சின்னமலையின் படை, நாடு திரும்பியது. அதற்குப்பிறகு, ஓடாநிலையில் கோட்டை அமைத்து, வெள்ளையர்களை எதிர்க்கத் துவங்கினார். சிவன்மலைக்கு அருகில் ஒருநிலத்தை வாங்கி அங்கே படைவீரர்களுக்குப் பயிற்சி அளித்தார். பாளையக்காரர்களை ஒன்று திரட்டி அவர்களிடம் வெள்ளையனை வெளியேற்ற வேண்டிய கட்டாயத்தை வலியுறுத்தி, அதற்காகப் பொதுப்படை ஒன்றை திரட்டிக்கொண்டு, கோவை சென்று ஆங்கிலேயரிடம் போர் செய்தார். தானே முன்னின்று படை நடத்தி அனைவருக்கும் ஆனையிட்டு வெற்றிபெற்று “கோவைக்கோன்” என்று அனைவராலும் அழைக்கப்படலானார்.

திப்பு சுல்தான் மறைவிற்குப்பின், கொங்கு மண்டலத்தைத்தவிர, பிற பகுதிகள் ஆங்கிலேயர் வசமாயிற்று. அறச்சலூர் போரில் ஆங்கிலேயப்படைகளை சின்னமலை துரத்தி அடித்தார். அடுத்து காவிரிநதிக்கரைப் போரில் 1801ல் கர்னல் மாhர்க்ஸ்வெல் படையை துரத்தி அடித்தார். அதே மார்க்ஸ்வெல் தலையை 1802ல் ஓடாநிலைப்போரில் தன் பளபளக்கும் வாளால் வெட்டிச் சாய்க்கிறார். இதனை அறிந்த ஆங்கிலேயர்கள் பெரும்படை ஒன்றைத் திரட்டிக்கொண்டு, ஜெனரல் ஹாரிஸ் தலைமையில் ஓடாநிலைக்கு வந்தனர்.
இதனை அறிந்த சின்னமலை காங்கேயம் சென்று அங்கிருந்து வாழை வியாபாரி வேடம் புனைந்து, பழனி மலைத்தொடரில் உள்ள ஒருவீட்டில் தங்கி பாளையக்காரர்களுடன் இணைந்து ஆங்கிலேயர்களை எதிர்த்து போர்புரிந்து வந்தார். சின்னமலையை வலைவீசி தேடினர். இனிமேல் சின்னமலையை வஞ்சகத்தால் தான் வீழ்த்தமுடியும் எனநினைத்த ஆங்கிலேயர்கள், சின்னமலையின் சமையல்காரனான நல்லப்பனை நாடினர். நல்லப்பனும், சின்னமலை இருக்கும் இடத்தை கூற உடனே பழனிக்கு விரைந்து சென்று சின்னமலையைக் கைது செய்தனர். இயேசுவுக்கு ஒரு யூதாஸைப்போல, கட்டபொம்மனுக்கு ஒரு எட்டப்பன், மற்றும் புதுக்கோட்டைதொண்டமானைப்போல. பகத்சிங்கிற்கு ஒரு ஜெயகோபாலைப்போல, இப்படி காட்டிக்கொடுத்தவர்கள் பட்டியலில் நல்லப்பனும் தன் பெயரைப்பதிவு செய்து வருங்கால இளைஞர்கள் காரி உமிழும் அளவிற்கு நயவஞ்சகத்துக்கு எடுத்துக்காட்டாய் அமைந்தான்.
தீரன்சின்னமலையைக் கைது செய்த ஆங்கிலேயர்கள், “எங்களோடு உடன்பட்டு, எங்கள் ஆட்சிக்கு கட்டுப்பட்டால் விடுதலை செய்கிறோம்: என்று பேசிப்பார்த்தார்கள். தீரன்சின்னமலை இதற்கு உடன்படவில்லை. அதனால் தீரன்சின்னமலை, கருப்பசாமிசேர்வை மற்றும் அவரது சகோதரர்கள் பெரியதம்பி, கிலேதார், ஆகியோரை 1500 அடி உயரமுள்ள சங்ககிரி மலைக்கோட்டை உச்சியில் உள்ள ஆலமரத்தில,; 1805 ஜீலை 31 ஆம் நாள் தூக்கிலிட்டாhர்கள்.

தீரன்சின்மலை நினைத்திருந்தால், ஆங்கிலேயர்களோடு கைகோர்த்திருந்தால் கொங்குநாட்டு நிர்வாகப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு வரிவசூல் செய்யும் பணத்தில் பத்தில் மூன்றுபங்கை, பெற்றுக்கொண்டு 1947 வரை சுதேச சமஸ்தானம் போல கொடிகட்டிப் பெயரோடும், புகழோடும் வாழ்ந்திருக்கலாம். ஆனால் தன்மானம் அவரைத்தடுத்தது.

பொதுவாக நாம் அனைவரும் சுயநலத்தால் தன்மானத்தை அடிக்கடி இழந்து விடுவது என்பதும், அந்த தன்மானத்தை ஊட்டுவதற்காக, விவேகானந்தர், பாரதியைப்போன்ற தீர்க்கதரிசிகளும், தீரன்சின்னமலை பகத்சிங் உத்தம்சிங் வாஞ்சிநாதன் போன்ற மாவீரர்களும், தந்தை பெரியார் போன்ற பகுத்தறிவாளர்களும் அடிக்கடி இந்த மண்ணில் பிறந்து நமக்கு கிரியாவூக்கியாக செயல்படுவது என்பதும், இந்த மண்ணில் மாறிமாறி, நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதற்கு தீரன் சின்னமலையின் சரித்திரம் வளரும் இளைஞர்களுக்கு பாடமாக அமையும் என கருதுகிறேன்.

அதர்மம் தலைதூக்கும் போது, தர்மத்தை நிலை நிறுத்த பகவான் அவதரிப்பார் என்று பகவத்கீதையில் சொல்லப்பட்டதைப்போல, தன்மானத்துக்கு இழுக்கு நேரிடுகிறபோது, தீரன் சின்னமலையைப் போன்ற தீரர்கள் அவதரிப்பார்கள் என்பதற்கு அந்த மாமனிதரின் தியாக வாழ்வு, நமக்கெல்லாம் கிடைத்திருக்கிற சுதந்திரப்பெருவாழ்வு என்பதனை மறந்து விடக்கூடாது.

இந்த மகத்தான மாவீரன் தூக்கிலிடப்பட்டு 207 ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த புனித மண்ணான சங்ககிரி கோட்டையில் மணிமண்டபம் கட்டப்படும் என பலத்த ஆரவாரத்துக்கு இடையே சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் டாக்டர் ஜெ.ஜெயலலிதா அவர்கள் அண்மையில் அறிவித்து இருப்பது, பாராட்டுக்குறிய நிகழ்வு என்பதோடு மட்டுமல்லாமல் வருங்கால சந்ததியினருக்கு, உந்துசக்தியாகவும், ஊக்கசக்தியாகவும் அமையும் என்பது திண்ணம்.


கே.பி.ரோஹித்கணேஷ்
(கட்டுரையாளர், சொற்பொழிவாளர்)
உறையூர், திருச்சி -3

எழுதியவர் : கே.பி.ரோஹித்கணேஷ் (9-May-12, 10:46 pm)
பார்வை : 2256

மேலே