தூரிகை

தூரிகை
=======================================ருத்ரா

விரலுக்குள்
மனத்தின் வானவில்.
கற்பனை செய்ததை
கருவாக்கி
உருவாக்கும்
மயிர்ப்புல் தடவியதில்
வனங்கள் உயிர்க்கும்.
முகங்கள் சிரிக்கும்.

பூவும் புள்ளும்
புது மொழி பேசும்.
திரைச்சீலையில்
சுநாமிகளும் தெறிக்கும்.

குங்குமக்கடலில்
சூரியன் குளிக்கும்.
நாணம் கலைத்த‌
கடலெனும் கன்னி
முத்தம் கொடுத்து
மூடிக்கொள்ள‌
அந்தி படர்ந்து
பந்தி விரிக்கும்...இது
புருசுச்சுவடுகளின்
புதுக்கவிதைகள்

உன்மத்தம் மோனம் ஆகி
உயிரைக்குழைத்த‌து
அக்ரிலிக் வ‌ண்ண‌ம்.

அடிம‌ன‌ உட‌லை
வ‌ருடிக்கொடுக்கும்
அன்னச்சிறகு
விரிந்து பரந்து
காட்சிகள் விரிக்கும்.

அதன் இடுக்குகளின்
கண்கள் வழியே
அண்டம் தெரியும்.
அக்கினி தெரியும்
அவள் முகமும் தெரியும்.

அதில்
பொசுங்கிய நளன்
பொங்கி வழிந்ததோ
தமயந்தி முகமே.

ரவிவர்மா
தூரிகைக்கு பிரம்மா.
அந்த பிரம்மனின்
தாமரை இதயம்
துடிக்க கற்றது
என் காதலியின் இமைகள்.

ஒளிந்து பார்க்கும்
க‌ருவ‌ண்டு விழிக‌ளுக்கு
சாம‌ர‌ம் வீசுவ‌தும்
இமைக‌ள் அசைவில்
நொறுங்கிக்கிட‌க்கும்
இம‌ய‌ப்ப‌னியின்
ப‌ளிங்கு சில்லுக‌ள்
காத‌லின் குளிர்ப்பை
குழைத்த‌து..இந்த‌
தூரிகையே.

தூரிகை எழுந்தது.
தூரிகை நடந்தது.
ஏதோ ஒரு
"சோம்னாம்புலிஸ்ட்" போல‌
உருண்டது புரண்டது.
அதன் உறக்கத்தின் ஊடே
நடந்த தடங்களில்
எத்தனை எத்தனை
சித்திரங்கள்.

பகீரதன் தவம்
ப‌ர‌ம‌சிவ‌னின் விரிந்த‌ ச‌டை.
ஐச‌க் நியூட்ட‌னின்
புவி ஈர்ப்பு மூர்க்க‌ம்.
க‌ங்கையின் வீழ்ச்சி.
அற்புத‌ சித்திர‌ம் இது.

மார்க‌ண்டேய‌னுக்கு
எருமையில் வ‌ரும்
ம‌ர‌ண‌ம் அங்கே
எகிறிப்போகும் சித்திர‌ம்

அந்த‌ குறும்பு ம‌ழ‌லையின்
பிஞ்சுக்காலை உர‌லில் க‌ட்டிய‌
பேதைத்தாய்
ய‌சோதையின் க‌ண்க‌ளில்
அப்பாவித்த‌ன‌த்தின் அருமைச்சித்திர‌ம்.

ஆதிமூல‌மே என்று அங்கே
ஆனை பிளிறும்
அதிர்ச்சிக்குர‌ல் ந‌ம்
அடியிலும் அதிரும்
அருமைச்சித்திர‌ம்.

ஓசை காட்டி பாட்டு முழக்கும்
ச‌ப்ப‌ளாக்க‌ட்டைக‌ள் கூட‌ இங்கே
ச‌ப்ப‌ண‌ம் இட்டு
புராணங்க‌ள் பார்க்கும்.

தூரிகைப்பறவைகள்
எச்சமிட்டாலும்
எத்தனை அழகு!

பிர‌ப‌ஞ்ச‌த்தைக்கூட‌
பிசிறுக‌ள் ஆக்கி
புருசுக‌ள் ஆக்கி
உசிருக‌ள் காட்டும்
உய‌ர்ந்த‌ ப‌டைப்புகள் உதித்தன.
ர‌விவ‌ர்மாவின்....
வ‌ர்ண‌க்குழ‌ம்பின் க‌ர்ப்ப‌த்தில்.

புராண‌ங்க‌ள் சொன்ன‌தால் இவ‌ன்
புருசும‌யிர்க‌ள் கூட‌
புனித‌ம் ஆயின‌.

புல்த‌டுக்கி விழுவ‌து போல‌
தூரிகை த‌டுக்கி விழும்
பாலைவனமும்
சோலை வனம் ஆகும்
இந்த‌ பிர‌ம்மாக்க‌ளிட‌ம்.

ஒரு தூரிகை விழுந்த‌தில்
அந்த காகிதம் கூட‌
காரிகை ஆனது.

=========================================ருத்ரா

எழுதியவர் : ருத்ரா (20-May-12, 10:28 am)
சேர்த்தது : ருத்ரா
பார்வை : 154

மேலே