தேர் கொண்டு வந்தான் தேவன்

தேரேறு என்கிறான் தேவன் - கண்ணில்
தோன்றாத வன்போலும் பாவனைசெய்தேன்
வாரியே பூக்கொண்டு வீசி - நீயும்
வாழ்ந்தது போதும்வா வந்தேறு என்றான்
பாரங்கு என்றனன் வானில் - அங்கு
பார்த்தனன் வெள்ளியும் பொன்னாக மின்ன
ஏதது தாரகை என்றேன் - ஆகா
இன்பமாம் மேல்வாழ்வு அங்கென்று சொன்னான்

நீரூறு கண்களைக் கொண்டு - நானும்
நெஞ்சினில் அன்பினைக் காட்டாயோ என்றால்
வேரறுத் தென்னையும் வீழ்த்தி - அவன்
வேடிக்கை கொண்டுமே விளையாடி நின்றான்
நோயுறு தேகமும் கொண்டு - இங்கு
நிற்கவும் ஆகாது நொந்தனே என்றால்
காயமே பொய்யடா என்று - கையும்
காட்டியே வானிடை ஏறுநீ என்றான்

பாரடா தோள் மீதுபாரம் - என்னில்
பாசமாய் உள்ளவர் எத்தனை காணாய்
ஊரடா முற்றிலும் அனபே - கொண்டு
உள்ளது காணென்று உற்றதைக் கூற
பேரது ஆகிய தேவன் - என்னைப்
பின்னும் நலிந்திடப் பண்ணியே துன்பம்
ஈரமோ இல்லாத போலும் - என்னை
இம்சித்த விதமான தெப்படிச் சொல்வேன்

பாயில் கிடஎன்று தள்ளி - எனைப்
பாடாய் படுத்தியே பொல்லாப்புச் செய்தான்
தாயிலும் நல்லவ னன்றோ - நீயும்
தந்ததை கொண்டிட ஏனிந்த வம்போ
வாயில் சினம்கொண்டு சொன்னேன் அவன்
வாழ்ந்த உன் மேனியில் வாஞ்சை கொண்டாயோ
பேயிலும் இழிவான பிறவி - இதில்
பேராசை கொண்டிடப் போனதேன் புத்தி

நாளொன்று போயுயிர் செத்தால் - பிணம்
நாற்றமும் வீசிட நாய் கொண்டுபோகும்
தோளிலே நாலுபேர் தூக்கி - மேனி
தீயில் எறிந்திடச் சாம்பலென்றாகும்
ஊழியோ உன்வினை தானோ - உன்
உள்ளமேன் ஏங்குது மோகத்தில் நீயோ
கேளிதை வானம்நீ வந்தால் - அங்கு
தீயாக மாறியே திகழலாம் என்றான்

சொல்வதைக் கேட்கவோ அன்றி -அது
சொர்க்கமோ நரகமோ சுத்தமாய் அறியேன்
கொல்வது என்றுதான் வந்தான் - பின்
கொள்வதற் காயவன் என்னவும் சொல்வான்
”அல்லன எண்ணுதல் வேண்டா - அட
அற்பனே நீ நிற்ப தேதென்று கொண்டாய்
இல்லையாம் இன்னொன்று நரகம் - காண்
இப்புவி தானுந்தன் சொல்லிலே நகரம்

கொள்வது எல்லாமும் துன்பம் - வானில்
கொட்டும் மழைகாணும் மின்னலே இன்பம்
அள்ளிவீ சும்புயற் காற்று - அது
ஆக்கும் துயர்விடப் பெரிதாமோர் துன்பம்
கள்ளனும் காதகன் மூடன் - உயிர்
கொல்பவன் வன்காம லோலன் அநேகர்
உள்ளவர் ஊடேநீவாழும் -இந்த
உற்றுழல் வாழ்வினை இனிதென்பதேனோ

நில் இன்னும் ஓர்சொற்ப காலம் - வாழ
நெஞ்சினில் ஆசையும் கொண்டனன் என்றேன்
நல்லதென் கூற்றினை கேளாய் -பின்பு
நாளை யக்கூற்றுவன் கொள்ளவென் செய்வாய்
நல்லதோர் புவி செய்து ஈந்தேன் - அதை
நாளும் நரகமென் றாக்கிக் களித்தே
பொல்லாத சேற்றினில் வாழும் ஒரு
புழுவாகி நாற்றத்தைப் போற்றினாய் என்றான்

எழுதியவர் : கிரிகாசன் (20-May-12, 4:16 pm)
சேர்த்தது : கிரிகாசன்
பார்வை : 174

மேலே