தாளம் தப்பிய ராகங்கள் !
இது முகாரிகளை முகவரிகளாக்கிய முகில்களின் முன்னுரை..
இந்த முகில்களுக்கு மோகனமும் தெரியும் ...ஆனால்
ஆலாபனைகள் அனர்தங்களாகிவிட்டபின்
அனாதையாகிப்போயின மோகனங்கள் ...!?
சிதையில் எரிந்து போகும் சதைகள் இங்கு விலைபோகின்றன ...சிதைந்துபோன மனதை சீண்டுவோர் இல்லாமல் கண்ணீரில் சிதறுகின்றன .!
அரைஜான் வயிறிற்காக அனுதினமும்
அர்த்தராத்திரிகள் அனலாகின்றன...!
ஆனால் வாழ்க்கையோ நிலையில்லா
நீர்பூத்த கானலாகிவிட்டன ...!?
திரிந்த பாலில் யார் வெண்ணை எடுப்பார்கள் ?
அறுந்தநூலில் யார் ஆடை நெய்ய போகிறார்கள் ?
எரிந்த திரியில் யார் வந்து விளக்கேற்ற போகிறார்கள் ..?
உடைந்துபோன கண்ணாடியில் யார் முகம் பார்க்க போகிறார்கள் ?
காட்டாற்றுக்கு கரைகளில்லை ....
இந்த காகித மலர்களுக்கோ
கரை சேரும் வழியும் இல்லை ...!
கடலலைகளுக்கு சிறைகள் இல்லை ...
இந்த கானல் கவிதைகளுக்கோ ..
உருவம் பெற வரிகள் இல்லை ..!?
தன் முகவரியின் இடம் மாறுமென
தவம்கிடக்கும் இந்த தாளம் தவறிய ராகங்கள் ...
அர்த்தமுள்ள ஆலபனைகளுக்காக
அலைந்துகொண்டிருக்கும் அபலை அகதிகள் ..!
இந்த முகில்களின் முகாரிகள் முகம் தொலைக்கும்வரை...இதன் முகவரிகள் .....
தாளம் தப்பிய ராகங்கள்...!!!

