சொல்லி வையும்!.... ஞான சம்பந்தரே!
இந்தக் கவிதையை ....
நான் எழுதும் முன்னர்.
"ஞான சம்பந்தரை" வேண்டிக் கொண்டேன்.
என்னையும்..இந்தக் கவிதையையும்
காது கொடுத்துக் கேட்டு
ஆசிர்வதிக்குமாறு.
"தோடுடைய செவியன்" பாடியவராயிற்றே..
இந்தக் கவிதையும்...
இங்கு நடக்கும் அநியாயங்களும்...
அவர் காதில் விழுமோ? ...
என்கிற சந்தேகம் எனக்கு.
பால சன்னியாசியாய்...
அவர் நிறுவிய ஆதீன மடத்தில்..
இன்று பாவ சந்நியாசிகள் (?)...
-------------------
சைவமும்...தமிழும்...
தழைத்தோங்க வேண்டிய மடத்தில்..
அசைவங்கள்...
ஆடிக் களிக்கின்றன.
ஆங்கிலம் தெரிந்தவன் ஆதீனம் ஆகலாம்
என்பது தெரிந்திருந்தால்...
இராபர்ட் கிளைவ் எப்போதோ...
ஆதீனம் ஆகி இருப்பானே.
"நெற்றிக்கண் திறப்பினும்...
குற்றம் குற்றமே"- எனச் சொன்ன ஊரில்
சொக்கநாதர்...இருக்கும் கண்களையும்
மூடிக் கொண்டு ....
சொக்கட்டான் ஆடுகிறார் போலும்.
"பிட்டுக்கு மண் சுமந்தவர்"-
இன்று எங்கள் திட்டுக்களையும் சுமப்பார் போலும்.
ஞான சம்பந்தரே!
நீராவது ஒரு பாடல் பாடி...
உறங்கும் உன் அம்மையையும்..அப்பனையும்..
எழுப்பிவிடுங்கள்.
இல்லாவிட்டால்...
உம்முடைய சந்நியாச வரலாற்றையும்...
திரித்துவிடுவார்கள்..இந்த மாபாவிகள்.
இந்தப் பாவிகளின் கனவிலெல்லாம்
வந்துபோகும் உம்முடைய அப்பனுக்குச்
சொல்லி வையுங்கள்.
என்கனவில் அவர் வந்தால்..
அவரின் நெற்றிக்கண்ணைப் பிடுங்கி...
எரித்துச் சாம்பலாக்கி விடுவேன்! என.