”சுதந்திரக்காற்று”

ஆண்டாண்டாய் அடிமைகளாய் வாழ்ந்திருந்தோம்
ஆண்டியாய் வணிகம் செய்ய வந்தவனிடம்,
வணிகம் செய்ய வந்தவனோ வலிமையானான்
ஆணிவேர் விழுந்துவிட்ட ஆலமரம் போலே,

அடிபட்டு செக்கிழுத்து சிறை சென்று
தூக்கில் தொங்கியும் துவழாத போராட்டங்களால்
அகற்றி விட்டோம் அண்ணியனின் ஆணிவேரை
அடைந்து விட்டோம் ஆனந்த சுதந்திரத்தை!

அடைந்தது சுதந்திரந் தான், சுதந்திரந் தான்,
என்று நம்பியிருக்க ,
அதுவோ ஆகிப் போனது சும்மா தந்திரமாய்,

வெள்ளையனோ வைத்திருந்தான் நம்மை ஒற்றுமையாய்
வெங்காயச் சுதந்திரமோ பிரித்தது பார் தந்திரமாய்

ஏழை பணக்காரன் என்று பாகுபட்டான் - இந்தியன்
ஜாதி மத பேதங்களால் துண்டுபட்டான்.

மொழிவாரி மாநிலத்தைப் பிரித்து வைத்தான்
நாமும் கண்டுகொண்டோம் மொழி அவனை பிரித்ததைத்தான்!

நாட்டை விட்டு ஓடிப்போனான் வெள்ளைக்காரன்
நம் நாட்டானே இப்போது கொள்ளைக்காரன்!

நாம் இத்தனை நாள் சுவாசித்தது சுதந்திரக்காற்றா?!
இல்லை, இல்லை!!!
என் போன்ற இயலாத இந்தியன் விட்ட பெருமூச்சின் வெம்மைக் காற்று!!!!!!!!!!

எழுதியவர் : அ. அறிவுடைநம்பி. (30-May-12, 10:48 pm)
பார்வை : 434

மேலே