முதிர் கன்னியர்கள் !

வாசனை இல்லாத
கனகாம்பரங்கள் கூட
அவர்கள் கேசத்தின்
வெம்மையைத்
தாங்க மாட்டாமல்
உருகி விழுகின்றன
உதிர்ந்து விழுவதாகப்
பொய் சொல்லிக் கொண்டு!

இதுவரையிலும்
வாசல் தேடி வராத
இராஜ குமாரனைக் காண
ஜன்னல் வனத்தில்
தவமிருக்கும்
தனிமை இளவரசிகள் !

இவர்களிடம் காமம்
எளிதில் வசப்படும் என்ற
எதிர்பார்ப்போடு
சில வேடர்கள் - காதலர்
வேடம் பூண்டு வந்தார்கள் !
ஆனால் -
இந்தப் புள்ளிமான்கள்
பசித்தாலும்
தாலி இல்லாமல்
படுக்கை மேயாது
என்றறிந்ததும்
ஏமாந்து விலகிப் போனார்கள் !

பொறுப்பிலாத பெற்றோர்கள்
பூசாரிகள் ஆனதால்
இந்தப் பெண் தெய்வங்களை
மண மாலைகள் கொண்டு
அர்ச்சனை செய்யாமல்
கண்ணீர்ப் பூக்களைச் சிந்தவிட்டுத்தான்
பூஜிக்கிறார்கள் !

இரண்டாம் தாரமாகவேனும்
கல்யாணம் உறுதிசெய்யப்படும்
என்ற நம்பிக்கையால்தான்
இந்த எரிமலைகள்
இன்னும் சிதறாமல் நிற்கின்றன !

சமூகத்தின் வம்பளக்கும்
பூச்சாண்டித்தனத்திற்குப்
பயந்து போய்த்தான்
இந்தப் பளிங்கு இதயங்கள்
தங்கள் விரகதாபங்களைக் கூட
வீதியில் வந்து கொட்டாமல்
விசும்பல் பரண்களில்
ஒளித்து வைத்திருக்கிறார்கள்!

பாவம் என்று
சொல்லாதீர்கள்
இவர்களைப் பார்த்து !

பரிதாபம் என்று
நினைக்காதீர்கள்
இவர் நிலைகளைப் பார்த்து!

நேசிக்கிற இதயங்களைக்
கொண்டுவாருங்கள்
இவர் நேர்மையை நினைத்து!

எழுதியவர் : முத்து நாடன் (8-Jun-12, 12:11 am)
பார்வை : 200

மேலே