சிறையென்ன செய்யும்?

ஏ அதிகார வர்க்கமே!

மனச்சாட்சியை
மறைக்காது சொல்லுங்கள்!

அமைதியைக் குலைத்ததாலா
அவனைச் சிறையில் அடைத்தீர்?

இல்லை!

உண்மையில்
உங்கள்
அஸ்திவாரம் எங்கே
ஆடிவிடுமோ என்ற
அச்சத்தில் அல்லவா
அடைத்துவைத்தீர்?

ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள்!

உறைக்குள் நிரந்தரமாய்ப்
பூட்டி வைப்பதால்
வாளின் கூர்மை மழுங்கி விடாது...

மேகங்கள்
மறைத்துக் கொள்வதாலேயே
பௌர்ணமி
அமாவாசையாய்
ஆகிவிடாது....

சிறையென்ன
செய்யும் அவனை?

புல்லாங்குழலின் வாயைப்
பொத்தித் திறந்தால்
அதன்
சங்கீதம்
சிதைந்துவிடும் என்று எண்ணுவது
சிரிப்புக்குரிய
சிந்தனையாய் இருக்கிறது....

அவன்
புல்லாங்குழல்தான்.
ஆனால்,
சங்கீதத்தை அல்ல
சத்தியத்தைப் பாடும்
புல்லாங்குழல்!

அடைத்து வைத்தால் புளித்துவிட
அவன் ஒன்றும்
திராட்சை ரசமன்று.
திராவகம்...........

கேளுங்கள் மக்களே!
கேளுங்கள்!

சூரியச் சுட்டுவிடத்
தீக்குச்சிகள் கூடித்
தீர்மானம் போடுகின்றன.

ஒ!
யார் வாயை
யார் மூடுவது?

சமுத்திரம்
சப்தமிடக் கூடாதென்று
குட்டைகள் என்ன
கட்டளையிடுவது?

இப்போதேனும்
அறிந்து கொள்வாய்
அதிகார வர்க்கமே!

சூரியனுக்கு
மேற்கு
மயானமல்ல
மஞ்சம்தான்.

அதோ!
மீண்டும் உதித்துவிட்டான்.....

(இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காகத் தொடர் போராட்டங்கள் நடத்திய போது, இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாகக் கூறி "நாம் தமிழர் கட்சி"யின் தலைவரும் திரைப்பட இயக்குனருமான திரு.சீமான் அவர்கள் கைது செய்யப்பட்டு பின், வேலூர் மத்தியச் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட தருணத்தில் எழுதியது.)

-------------ரௌத்திரன்

எழுதியவர் : ரௌத்திரன் (11-Jun-12, 12:09 pm)
சேர்த்தது : ரௌத்திரன் (தேர்வு செய்தவர்கள்)
பார்வை : 170

மேலே