மண்ணுலகு மறந்து விண்ணுலகு சென்ற அன்பு அத்தைக்கு சமர்ப்பணம்..
விவரமறிஞ்ச நாள்முதலா - உன்
விரல் பிடிச்சே நடந்து வந்தேன் .
விவரமேதும் சொல்லாம - என்ன
விட்டு நீயும் போனதென்ன ?
என் அப்பனோட பொறந்தவளா ?
என் ஆத்தாளுக்கு மதனியாளா ?
இரத்த பந்தம் கொண்டவளா ?
தூர சொந்தமாக வந்தவளா ?
நீ எனக்கு சொந்தமில்ல ,
நாம இருவருக்கும் பந்தமில்ல .
என் பக்கத்துவீட்டு பாசக்காரி
என்ன பெத்தவபோல நேசக்காரி .
அப்பன் ஆத்தா வெளியபோனா
அன்பா சோறு ஊட்டுவியே !
நோயில நான் விழுந்தாலும்
தூக்கி போக வருவியே !
சின்ன சின்ன நோய் நொடிக்கும்
கைமருந்து நீ கொடுப்ப ,
மருந்தால மாறா நோயும் - உன்
பரிவு கண்டு பறந்திடுமே !
அம்மாகிட்ட வளந்தாலும்
அதிகம் உன்ன சுத்தி வந்தேன் .
அத்தை யினு நான் சொல்ல
அன்பா அள்ளி கொஞ்சுவியே !
சின்ன சேட்டை செஞ்சாலும்
அம்மாவந்து அடி தருவா ,
அத்தை மடி மெத்தையடி
அம்மா அடி சொத்தையடி ,
கோழிமிதிச்சு குஞ்சுக்கு
சேதம் வந்து சேராதுன்னு
அந்த நேரம் நீயும் வந்து - எனக்கு
ஆதரவா பேசுவியே !
பீடி சுத்தி வாழ்க்கைத்தான்
வருசமெல்லாம் ஓட்டுனியே
புள்ளைங்க கை எதிர்பாரா
புண்ணியவதி நீதாண்டி .
பீடி சுத்தும்போது நானும்
பீடிகையா உதவி செஞ்சு - நீ
அசந்த நேரம் பீடி ரெண்டு
ஆட்டைய தான் போட்டுடுவேன் !
கண்டும் காணாது போல
பலமுறையும் படியளந்த
புகைபழக்கம் வேண்டான்னு
கருணையா நீ கண்டிச்ச.
உன் பேச்சுக்கு எதிர்பேச்சு
ஒருநாளும் நான் பேசினதில்ல
புகைபழக்கம் மட்டும் தானே
கடைசிவரை மாத்தவில்ல.
கல்யாண வீட்டுக்கு நீ
கட்டாயம் போறதில்ல ,
கருமாதி வீடுன்னா
கட கடனு ஓடுவியே - அதன்
காரணம் என்னதான்னு
காரியமா நான் கேக்க
கதை கதையா சொல்லித்தந்த
காரணத்தின் அவசியத்த !
பள்ளியில படிக்காத
பலபாடம் நான் படிச்சேன்
வாழ்கையில போராட
வாரி வரியா சொல்லித்தந்த.
வேலு நாச்சி மரபில் வந்த
வீர மங்கை நீயம்மா !
வாழ்க்கைப்பாடம் எனக்கு சொன்ன
வாத்திச்சியும் நீயம்மா !
துபாய் நாடு நீ போயி
துடிப்பா நாலு காசு பார்த்து
அம்மாவோட ஆசைப்படி
அழகா ஒரு வீடு கட்டு
கட்டிமுடிச்ச கையோட - உன்
கல்யாணத்த பார்த்துட்டுதான் - என்
கண்ண நானும் மூடுவேன்னு
சொன்னவளே நீ எங்க போன ?
முத்தா மூணு பிள்ளை பெத்த
மூத்ததோட சேர்ந்து வாழ்ந்த
மருமகளும் வந்தபின்னால் - உன்
மவுசு அங்க குறைஞ்சுடுச்சே!
புள்ளைக்கும் புருசனுக்கும்
புழுங்கலரிசி சாதம் வச்சா ,
ஒருவேளை கஞ்சி உனக்கு
ஊத்திதர மறுத்தாளே!
மருமக தன் அம்மாவா
மாயியார பார்ப்பதில்ல - தான்
ஒருநாள் மாமியாரா
மாறுவோன்னு புரியவில்ல !
பெண்ணுக்கு எதிரி என்றால்
பெண்ணை தவிர யாருமில்ல
அம்மாவா நினைக்க வேணாம்
மனுஷியாக மதிச்சா போதும் .
பிரியாணி வாங்கியாந்து
பொண்டாட்டிக்கு ஊட்டுராண்டா
பெத்தவ தான் தின்னாளான்னு
பேச்சுக்கு கூட கேக்கலையே !
வயசானா மனுஷங்க
குழந்தைத்தான்னு புரியாம
பொண்டாட்டி வந்தபின்ன
அம்மாவ மறந்துபுட்டான் .
மகன் தானே கண்டுக்கல - இந்த
மருமகன மறந்ததென்ன ?
மாரடைப்பு வந்ததால
மாயமா நீ போனதென்ன ?
கவலைகளால் சூழ்ந்த உன்
கவலைகளை தீக்குறேன்னு
காலன் வந்து சொன்னானோ - நீ
காணாமத்தான் போனதென்ன ?
காஞ்சிபுரம் பட்டுனக்கு - என்
கல்யாணத்தில் வாங்கி தரேன்
கட்டாயம் நீ கட்டணும்னு - உன்
காதில் சொல்லி நாளாகலையே !
பிரியாணி வாங்கித்தா நு
பிரியப்பட்டு நீ கேட்ட
வாங்கி தரும் முன்னாடி
வாகரிசி போட வச்ச .
அம்மாடி தாயாரே என்று
ஊர் கூடி ஒப்பாரி வைக்க
நட்டநடு திண்ணையில
சிரிச்சபடி தூங்குறியே !
என்மனச புரிஞ்சுவாழ்ந்த
சிலபேரில் நீயொருத்தி
நான் பாசம் வச்ச யாரும் என்ன
பாதியில விடுவதென்ன ?
உன்ன பேச நினச்சாலே
வரிவரியா வார்த்தை வரும் - ஆனா
இப்போ வார்த்தை எல்லாம்
உப்பு நீராக் கரிக்குதடி !
கட கடன்னு கண்ணீரு
காட்டாறா ஓடுதடி !
அடக்க நானும் நினைச்சாலும்
அணை உடைச்சு பாயுதடி .
ஆம்பளையா பொறந்து புட்டா
ஆகாயமே சரிஞ்சாலும்
அழுத்தமாக நிக்க வேணும்
அழமட்டும் கூடாதுன்னு
நீ சொன்ன வார்த்தையில்தான்
என்ன நானும் தேத்திக்கிறேன் .
என் ஆகாயம் நீ சரிஞ்சும்
ஆடாம நின்னுக்குறேன் .
மண்ணுலக வாழ்க்கையில
இன்னலோட வாழ்ந்தவளே
விண்ணுலக வாழ்வுனக்கு
நிம்மதியா நிரஞ்சிருக்கும்
அடுத்த ஜென்மம் இருந்தா
என் அத்தையாக நீ வேணும்
தமிழ் அன்னை தயவோடு
உன் ஆத்மா அமைதி கொள்ளும்......