அன்னத்தின் தாலாட்டு....

சிறுமீனு கடிச்சிருச்சோ - உன்
மேனியெல்லாம் நடுநடுங்க...
சிறு பூச்சி கடிச்சிருச்சோ - உன்
தேகமெல்லாம் நடுநடுங்க...
வலிபொறுக்காமல்
நீயழுத கண்ணீரு ஆறாகப்பெருகி
அலை அலையா அடிக்குதம்மா...!
கிலியோடு அழுகதகண்ணீரு
குளமாகத் தேங்கியிங்கு
கொசுவெல்லாம் வளருதம்மா...!
பூக்கவிருக்கும் பொன்னரும்பே - என்
பொக்கிசமே கண்வளராய்..!
மனமே மருக்கொழுந்தே
மண்மணக்கும் மல்லிகையே - என்
மைவிழியோடு கண்வளராய்....!!
வாடாத பூவே-வளரும் பிறையே
வருணத்தின் துளியழகே கண்வளராய்...!!
நாலூரும் மயங்கிநிற்கும்
நளினத்தின் நடையழகே கண்வளராய்...
போகாத நிலமில்லே -நான்
நீந்தாத நீரில்லே, மண்மயங்கும் பேரழகே
மதி மறையும் முன்னே கண்வளராய்..!
நந்தவனம் பூஞ்சோலை
நாலுபக்கம் உண்டுபண்ணி
நாள்தோறும் வாசம் மாறாமல்
காத்திருப்பேன் கண்வளராய்....
பலநூறு வேலைகள்
தெரிஞ்சவரு உங்கப்பா....
பாலும் நீரும் பக்குவமா பிரிப்பாரே....
கலந்திருக்கும் நீரெல்லாம்
உன் கண்ணீர்தானென்றால்
கலங்கித்தான் போவாரே....
விடியும் வரை விசும்பாமல் நீயுறங்கு.!
விடிந்த பின்னே வீதியோரம்
உன் விருப்பம்போல விளையாடு....!!

எழுதியவர் : Premi (15-Jun-12, 1:05 pm)
சேர்த்தது : Premi
பார்வை : 132

மேலே