இரவினில் இளையவளின் ஆட்டம்.....

கார்கால இருளில் கலையாத நெஞ்சுக்குள்
காதலாய் கவிதையும் பூத்தது...

விடியாத இரவில் நெருங்காத பகலில்
விண்ணும் மண்ணும் என்னைக் கொஞ்சம்
கொஞ்சுங்களேன்...

அழகான அம்புலியில் அடங்காத ராட்சசியாய்
அடிமேலே அடிவைத்து ஆடவும் செய்வேனே...

தீராத தாகம் கொண்டு திமிராகப் பாடிக்கொண்டு
தென்றலோடும் இரவோடும் கலப்பேனே...

நட்சத்திர மண்டலத்தில் நட்சத்திரமாய்
நாட்டியம் ஆடி நானும் ஜொலிப்பேனே...

கதவோரம் வீசும் காற்றில் என் காதோரக்
கேசமும் ஊஞ்சலாய் ஊசலாடுதே....

சொட்டு சொட்டு மழையே...வெட்கம் என்ன உனக்கு?
தொட்டு தொட்டு என்னை சுற்றி சுற்றி வாராயோ....

கூச்சல் போட்டு கூட்டை அடையும் குருவியே - நானும்
நீச்சல் போட்டு கண்மாய் நீரில் நீந்தி வருவேனே...

வளைந்து ஓடும் கருத்த மேகங்களே.. - என்
வளைந்த மேனிக்கு நீவிர் ஆடை கொண்டு வாரீரோ...

பனியில் நனைந்த அல்லிப்பூவே
உன் படுக்கையை கொஞ்சம் தாரோயோ...

குளிரில் நனைந்த குவளைப்பூவே
என் கூந்தலில் வந்து சேராயோ...

பூவின் அரசே பூவரசம்பூவே - இந்த
பூவையின் அழகை கொஞ்சம் சொல்லோயோ...

மழையின் சாரலில் மறைந்த நிலாபோல
மழலையின் முனங்கலில் மயங்கித்தான் போவேனே...

மழைத்துளி சேர்ந்த மகிழம்பூவே - உன்
பனித்துளி சேர்த்தேன் பல்லாங்குழியில்......

மின்மினிப்பூச்சியின் வெளிச்சத்தில் - எனைத்
தீண்டும் தென்றலோடு வீதியெங்கும் சுற்றுவேனே...

நன்றி சொல்லுவேன் என் கண்களுக்கும்...
நாளும் மாறாத இந்த இயற்கைக்கும்....

நேசிப்பேன் இந்த உலகை நேசிப்பேன்
யாசிப்பேன் இந்த இரவின் அழகை யாசிப்பேன்.....

எழுதியவர் : Premi (15-Jun-12, 1:01 pm)
சேர்த்தது : Premi
பார்வை : 149

மேலே