தூங்கியதா கடல்?
தூங்கியதா கடல்?
=========================================ருத்ரா
கடற்கரை விளிம்பு.
இரவு விரவ ஆரம்பித்த வேளை..
அலை நுரைகள் பாய் விரித்தன.
அதை
அலைகள் உதறிக்கொண்டு போய் விட்டன.
அலை நுரைகள் பூக்கள் தைத்த
மெத்தையை அங்கு விரித்தன.
இன்னொரு
அலைக்கூட்டம்
அதை அள்ளிக்கொண்டு போய்விட்டன.
வானத்து நட்சத்திரங்கள்
மணற்பரப்பின் நீர் மினுமினுப்பில்
பிரதிபலித்துக்கொண்டிருந்தன.
இப்போதும்
அலைகள் ஒளிப்புள்ளிகள் போட்ட
பாயை சுருட்டி எறிந்தன.
அலைகளும் ஓயவில்லை.
கரைவிளிம்புக்கண்ணாடியில்
நட்சத்திரங்கள் பரப்பியே கிடந்தன.
நுரைகளில் பின்னிய நட்சத்திரங்கள்
அங்கே தான் படுத்துக்கொண்டன.
அலைகள் நசுங்கி நெளிந்து
படர்ந்து இழைந்து
அந்த நட்சத்திரப்பூ போட்ட
படுக்கை சுருட்டி விரிந்து...
அலையும் ஓயவில்லை.
படுக்கை
விரிப்பதும் சுருட்டுவதும் ஓயவில்லை.
தூங்கினால் தானே
கனவு வரும்.
கனவுக்குள்ளே தானே
காதல் வரும்.
தூங்கியதா கடல்?
அதற்குள் கொட்டாவி விரித்துக்கொண்டு
கொத்து கொத்தாய் கதிர் பரப்பி..
சூரியன் விழித்து விட்டான்.
========================================ருத்ரா