உயர்ந்த அஃறிணை - உஃறிணை

திருநங்கை

ஆண்டவனின் பிள்ளைகள் நாங்கள்
அனாதைகளாய் திரிவதனால்

அன்பிற்கேங்கும் அடிமைகள் நாங்கள்
அறுவறுப்பாய் பிறந்ததனால்

அகிலம் நிறையக் கனவுகள் காண்போம்
கனவுகள் பழித்தது கனவுகளிலேயே

கைத்தட்டல் வாங்க எண்ணினோம் மாறாய்
கைதட்டி வாங்கி எண்ணினோம்

ஆணாய் பிறந்த எம்மக்கள்
தெருநாய் போல வீதியிலே

பெண்ணாய் பிறந்த எம்மக்கள்
தாயாய் ஆகத் தகுதியில்லை

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது
முதுமொழி பயனற்றது எம் உலகில்

நேர்கொண்ட பார்வை
நெற்றியை வருடும் கூந்தல்
நிமிர்ந்த நன்நடை
உடுப்பு நிற்கா மெல்லிடை

வீரம் பொருந்திய கால்கள்
வெட்கிக் குனியும் தோழ்கள்
இதுவே எங்கள் மாண்பாகும்
என்பது மனிதன் பண்பாகும்

எங்களுக்குள் சாதி மூன்றாகும்
ஆண்,பெண்,அலிகள் அதுவாகும்

ஆண்பால்,பெண்பால் நானறிந்தேன்
அதுவின் பால்தான் நான், அறிந்தேன்

நித்திரையும் கெட்டதுண்டு
நிம்மதியும் கெட்டதுண்டு
தூய்மையான எங்கள் உலகில்
கற்பு மட்டும் கெடுவதில்லை

பெற்றோரால் தவிர்க்கப்பட்டேன்-சில‌
பெரியோரால் வளர்க்கப்பட்டேன்

வேலைக்காக கைநீட்ட‌
விழுந்தது பணம் பத்து ரூபாய்

ஆதாம் ஏவால் தவறிழைத்தும்
அவர்களுக்கிங்கே இடமுண்டு
ஏதும் செய்யா எங்களின்
தண்டனை பெறுவது சத்தியமா?

ஆணைச்சார்ந்து பெண்படைத்தான்
பெண்ணைக் காக்க ஆண் படைத்தான்
எங்களைச்சார்ந்து காத்திடவே
யாரும் இல்லை பூமியிலே

வருத்தம் கொண்டு தோழ்சாய‌
வாலிபன் வேண்டாம் எங்களுக்கு

இரத்தக் கண்ணீர் துடைத்திடவே
தோழியும் வேண்டாம் எங்களுக்கு

எலியும் பூனையும் நடமாடும்
இருட்டறை ஒன்றே போதுமென்றோம்

இருக்கும் இடத்தின் நிலை பொருத்தே
பட்டம் கிடைத்தது உயிர் வலியாய்

பெற்றோர் கடனை தீர்த்திடவே
பணமும் உண்டு என் கையில்
பணத்தை கையில் ஏற்றிடவே
மனமும் இல்லை என்செய்வேன்

துணிந்தே ஒருவன் தோழ் கொடுத்தால்
தூற்றிப்பேசும் இவ்வுலகம்
பாசக்கரங்கள் கோர்க்கையிலே
பழித்துப் பேசும் மானிடமே

இருபால் கொண்ட உயிரினமாம்
மலர்களை நீங்கள் வெறுப்பதுண்டா?

மலர்களை வெறுக்கும் கணம்முதலே
திருமணங்கள் இங்கே நடப்பதுண்டா?

வலிகள் அனைத்தையும் பொருத்துக்கொண்டு
வேசம் போட்டது ஒரு 'அது'வே

சாதனை விளிம்பை அடைந்ததுமே
முகத்திரை கிழித்துச் சாட்டியதே

ஆண் பெண் சாதி தலைகுனிய‌
வைப்பது எங்கள் நோக்கமில்லை

எங்கள் இனமும் தலைநிமிரும்
என்பதில் என்றும் மாற்றமில்லை

எங்களின் வாயை அடைத்திடவே
இட -ஒதுக்கீடென்பது உம் கருத்தோ?

மதிப்புடன் வாழும் மானிடமே
சர்கார் சலுகையை அடைவதில்லை
சந்தில் வாழும் எங்களையும்
அது அடையும் என்பது வேடிக்கை

பணத்தை தேடும் பூமியிலே
பாசத்தை தேடும் ஓரினமே

பணத்தை கொடுத்துப் பாருங்கள்-உடன்
அலியாய் மாறும் மானிடமே

கருத்தை நிறுத்த மனமில்லை
மனிதம் எங்கே தெரியவில்லை

மனிதனை மனிதம் அடையும் வரை
எங்கள் நிலையும் வானிலையே
வரையறுக்க இயலா சூழ்நிலையே...

எழுதியவர் : ஜெ.நாகபாண்டி (30-Jun-12, 10:36 pm)
பார்வை : 206

மேலே