[271 ] கட்டுரை-(7 ) சில கவித்துவ வரிகள்

சீந்தல்[Satire-நையாண்டி] இலக்கியக் கவிஞர் ஜெயபாஸ்கரன் அவர்களின் கவிதையோன்றினைச் சமீபத்தில் 'கவிதை உறவு' இதழில் படித்தேன்:
தலைப்பு: வேட்பாளப் பெருமக்களே!

திறந்த ஜீப்பில்
நீங்கள்
தெருத்தெருவாகச்
சுற்றி வருவது
கறுப்புக் கண்ணாடி ஏற்றிய
காரில் போவதற்காக

வேட்பு மனுக்களைத்
தாக்கல் செய்வது
கோரிக்கை மனுக்களைக்
கிழித்துப் போடத்தான்.
வாக்குத் தவறுவதையே
வாழ்க்கையாகக்
கொண்ட நீங்கள்
வாக்காளர்களை மட்டும்
தவறவிடவே மாட்டீர்கள்!

சொன்னதைச் செய்வதாகச்
சொல்வீர்கள்
ஆனால்
செய்துகொண்ட எதையும்
சொல்லவே மாட்டீர்கள்.

நாடு நலம்பெற
வாக்குக் கேட்ட உங்களின்
வீடு நலம் பெற்றதை
விசாரணைகள்
தெரிவிக்கின்றன.

தனித் தனியாக
மக்களைப் பார்த்து
ஒட்டுக் கேட்டுக் கும்பிட்ட
உங்களுக்கு
மந்திரியானவுடன்
மக்களைக்
கூட்டமாகப் பார்த்தால்தான்
கும்பிட முடிகிறது.

என்னவோ போங்கள்
எத்தனை தேர்தல் வந்தாலும்
ஏமாற நாங்க ரெடி
ஏமாத்த நீங்க ரெடியா..?

அப்படியானால் ஓ.கே
லேட் அஸ் பிளே
எலக்சன்.

புதுக்கவிதை உத்தியைப் பயன்படுத்தியவராக ,
கசப்பான உண்மையை வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றுவது போல் தமக்கே உரிய எள்ளல் நடையில் , அங்கதப் பாணியில் உரைத்துள்ளதை நீங்களும் இரசிப்பீர்கள் என்று நம்பியே இதனைத் தெரிவித்தேன். கடைசி வரிகளில் கவிஞர் ஆங்கிலப் பயன்பாட்டைத் தவிர்த்திருக்கலாம்
'அப்படியானால் சரி! வாருங்கள் விளையாடுவோம்
தேர்தல் விளையாட்டு!' என்று எழுதியிருக்கலாம்.
மீண்டும் வருவேன்..நன்றி.
எசேக்கியல்

எழுதியவர் : எசேக்கியல்காளியப்பன் (1-Jul-12, 6:00 pm)
பார்வை : 380

மேலே