[286 ] பிறப்பித்தாள் தனை என்றும் மறக்காதே!
மறக்காதே இமைப்பொழுதும்
பிறப்பித்தாள் தனை,உன்னுள்;
இறப்புள்ளும் உனைநினைத்தே
இருப்பவளைத் தவிப்பவளைச்
சிறப்புடனே வைப்பதுதான்
சீருனக்கு மறவாதே!
வான்தாங்கு மழைபோல
வயிற்றுக்குள் வளர்த்தவளைத்
தான் தாங்கி நிற்கையிலே
தனைஉதைக்கச் சிரித்தவளை
நீதூங்க விழித்தவளை,
நீஏங்க அழுதவளை ,
உன்,உயர்வில் மகிழ்ந்தவளை
உன்,தாழ்வில் அணைத்தவளை
உச்சிதனை முகந்தவளை
உன்,ஊக்கம் வளர்த்தவளை
எத்தனைதான் துயர்வரினும்
ஏற்றவளாய், அரசுகளின்
தொட்டிலிலே உனைக்கொண்டு
இட்டுவிடாக் கையவளை,
மறக்காதே இமைப்பொழுதும்
பிறப்பித்தாள் தனை,உன்னுள்;
விண்காட்டி மதிகாட்டி
வெறுஞ்சோறு தந்தவளைக்
கண்ணீரில் மூழ்கவிட்டுக்
கையாட்டிச் செல்வாயோ?
கடல்கடந்து போயுமவள்
கண்கடந்து போவாயோ?
காசுபணம் பெரிதாமோ?
ஆசிரமம் அவளிடமோ?
இறந்தவளைக் காண்பதற்குப்
பறந்துவரல் ஆகாதோ?
மணமென்று பூதனக்குள்
மறைத்துவைத்துக் காத்தவளைப்
பிணம்என்றும் ஒதுக்கிடவோ?
பணமனுப்பி மறந்திடவோ?
இறப்புள்ளும் உனைநினைத்தே
இருந்தவளைத் தவித்தவளை
மறக்காதே இமைப்பொழுதும்!
சிறப்புனக்கு எதுவென்று
சிந்திக்க மறவாதே!
-௦-