தேடுங்கள் தொலையாமல் ....

காதல் என்ற காவிய தேடலுக்கு விடை தேட புறப்பட்ட முட்டாள் நான்
காதல் என்பது,

அக்கினிக்குள் ஆலாபனை செய்து
புயலுக்குள் பூங்குழல் இசைத்து
நரம்புகளில் நாதம் சேர்த்து
உணர்வுகளில் மெட்டு கட்டும்
இசை சமர் தானோ?

அண்டங்களை புரட்டிப்போட்டு
அன்பு என்னும் யுத்தம் செய்து
வாழ் விழிகளும் வேல் மொழிகளும்
உணர்வு கவசங்களை கிழிக்கும்
குருட்சேத்ரம் தானோ?

ஆயிரம் நட்சத்திரங்களின்
சிணுங்கள் வண்ணமும்
லட்சம் நிலவுகளின்
புன்னகை மென்மையும்
கோடி கதிரவனின்
செம்பொன் ஒளியும்
செல்ல கோவமும்
சேர்த்து வனைந்த மலரோ?

நடுகடலில் நெய் தீபம் ஏற்றி
தீ பிழம்பில் தாகம் தனித்து
தேவதைகள் தாலாட்டில் தூக்கம் தொலைத்து
தென்றல் சோலைகளில் தீக்குளிக்கும் எழில் பருவநிலை மாற்றம் தானோ?

கற்பனை எனும் மாய மனையில்
கண்ணீர் எனும் தீர்த்தம் பருகி
தாகமாகிபோகும்
காவிய பாலை வனம் தான்
காதலோ?

ஆகாய சங்கத்தின் அபூர்வ
முழக்கத்தில் களைந்து போன
ஆழ்ந்த மௌனமோ?

கடவுள் என்ற கவியரசின்
வாழ்க்கை என்ற வண்ண கவியில்
முதல் முதல் புள்ளியோ
முற்று புள்ளியோ?

தேசங்கள் கடந்து தெய்வங்கள் கடந்து
சாத்தியம் துறந்து
சம்பிரதாயங்கள் நெகிழ்ந்து
உறவுகளை பிணமாக்கி
உணர்வுகளை உயிராக்கும்
நறுமுகையோ? நரபலியோ?

தேடினேன் தேடினேன் சுவாரசிய
தேடலில் தொலைந்தே மீண்டேன்
ஒன்று கண்டேன்

காதல் கவி பாடும் சிலைகளை
கல்லாக்கவும் செய்யும்
கல்லாய் போன கவிகளை
சிலையாகவும் செதுக்கும்

தேடுங்கள் தொலையாமல் ....

எழுதியவர் : Jananaram (18-Jul-12, 10:23 am)
பார்வை : 790

மேலே